Published:Updated:

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில் விவசாயம் செய்யும் சுகந்தி

சுகந்தி
பிரீமியம் ஸ்டோரி
சுகந்தி

- பிஸ்மி பரிணாமன்

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில் விவசாயம் செய்யும் சுகந்தி

- பிஸ்மி பரிணாமன்

Published:Updated:
சுகந்தி
பிரீமியம் ஸ்டோரி
சுகந்தி

அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அரக்கப் பரக்கக் கிளம்பி வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்கு நடுவில் மதியம் சாப்பிடுவது இல்லை. மாலை திரும்பியதும், கணவர் கடலுக்குப் போய்க் கொண்டுவரும் மீன்களில் உப்பு அதிகமாகச் சேர்த்து ஊறவைத்து, அடுத்த நாள் வெயிலில் கருவாடாக்கக் காய வைக்க வேண்டும். இரவு உணவு வேலைகள் முடித்ததும் கடல் சிப்பி, சோவிகள் (சோழிகள்), சிறிய பெரிய சங்குகளைக் கொண்டு கைவினைக் கலைப் பொருள்களைச் செய்து தூங்கும்போது பின்னிரவு ஆகிவிடும். இது சுகந்தியின் மாற்றமில்லா அன்றாட வேலைப் பட்டியல். கூடவே, சமூக சேவை, சமுதாய வானொலியில் பேச்சு, பெண்களுக்குக் கைவினைப் பொருள்கள் பயிற்சி எனச் சுழல் கிறார். இவற்றுக்கிடையில், பாம்பன் பஞ்சாயத்து வார்டு மெம்பரான சுகந்தி, வார்டு மக்களின் குறைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்.

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி

சரி, சுகந்தி எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்று கேட்கிறீர்களா? பரந்து கிடக்கும் கடலில். கடலில் மீன் பிடிக்கத் தெரியும் என்றாலும், சுமார் 25 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கி தொழில் செய்துவருகிறார். கீரை வகைகளை நிலத்தில் வளர்ப்போம். கடலில் கீரை வளர்ப்பதை கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ராமேஸ்வரம் தீவுக் கடலில் பல பெண்கள் கீரை வளர்க்கிறார்கள், வருமானம் ஈட்டுகிறார்கள், அதோடு நின்றுவிடுகிறார்கள். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சுகந்தி, தனது திறமையால் அதில் பல அடிகள் முன்னால் நிற்கிறார். சுகந்தியிடம் பேசினோம்.

“கடல்ல விவசாயமானு பலரும் ஆச்சர்யமா கேட்பாங்க. வயல்ல பாத்தி கட்டி கீரை, கொடி களை வளர்க்கிற மாதிரி, நாங்க மூங்கில்கள் வைத்துக் கட்டப்பட்ட சதுர, செவ்வக வடிவ மிதவை செஞ்சு, கழுத்து ஆழத்துல கடல்ல மிதக்கவிட்டு, அதுல ‘பெப்சி’ வகை கடல் செடிகளை வளர்க்குறோம். அந்தச் செடிகளின் தண்டுப்பகுதி கடல் நீரைத் தொட்டுக்கிட்டிருக் கும். நிலத்தில் நட்ட செடிக்கு கடல் நீரை ஊற்றினா பட்டுப்போகும். நாங்க நடுறது கடல் செடி என்பதால அதுக்குக் கடல் நீர்தான் தேவை. இந்தச் செடிகளை பேச்சுவழக்குல ‘பாசி’னு சொல்லுவோம்’’ என்றவர், சிறு வயதிலேயே இந்தத் தொழிலைப் பழகியதை பகிர்ந்தார்.

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி

‘’ராமேஸ்வரம் தீவு பாம்பன் என்ற ஊர்ல யிருந்து தொடங்கி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி யோடு முடியுது. பக்கத்துல இருக்குற மாங்காடுல வளர்ந்த நான், கல்யாணத்துக்கு அப்புறம் பாம்பனுக்கு வந்தேன். எங்க வீட்டுல அஞ்சு பொம்பளப் பிள்ளைங்க. அப்பாவோட மீன்பிடித் தொழில் பிள்ளைகளை வளர்க்கப் போதலை. கடல்ல மூழ்கி கடல் செடிகளை பறிச்சு உலர்த்தி விற்றுக்கொண்டிருந்த எங்கம்மா வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தாங்க. கடன் கொடுத்தவங்க வந்து திட்டும்போது, ‘நான் ஸ்கூலுக்குப் போகல, உன்கூட கடலுக்கு வர்றேன், சீக்கிரமா கடனை அடைக்கலாம்’னு அம்மாகிட்ட நான் சொன்னப்போ எனக்கு 12 வயசு. அம்மா ஒப்புக்கலை. ஆனா நானும் பிடிவாதமா ஸ்கூலுக்குப் போகலை. வேற வழியில்லாம அம்மா என்னைக் கடலுக்குக் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சாங்க.

படகுல 10 - 12 அடி ஆழப் பகுதிக்கு போய், என்னை படகு லேயே உட்காரச் சொல்லிட்டு, அம்மா கடலுக்குள்ள மூழ்கி கடல் செடிகளை பறிச்சுட்டு வந்து கொடுக்க, அதை நான் படகுக்குள்ள போடணும். இப்படி அஞ்சு மணி நேரம் உழைக்கணும். அப்புறம் பறிச்ச செடிகளை சுத்தம் செஞ்சு, வெயில்ல காய வெச்சு, வியாபாரிகள்கிட்ட விக்கணும். போகப் போக அம்மா எனக்கும் கடலுக்குள் மூழ்க, கடல் பாறைகளுக்கு இடையில இருக்குற செடிகளைப் பறிக்க எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. ஒரு வருஷத்துல கடனை அடைச்சோம். என் சகோதரிங்க எல்லாம் படிச்சு அரசு வேலையில் சேர, எனக்குக் கடல் தான் கதினு ஆனது. கல்யாணத்துக்கு அப்புறம் பாம்பனுக்கு வந்தேன்’’ என்றவர், கடலில் மூழ்கிச் செடி பறிப்பதிலிருந்து கடல் மட்டத் தில் செடி வளர்ப்பதற்கு வந்தது பற்றி கூறினார்.

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி
‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி
‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி

“20 வருஷங்களுக்கு முன்ன ராமேஸ்வரம் தீவுல ‘பெப்சி’ கடல் பாசி வளர்க்கும் யுக்தியை அறிமுகம் செய்தவங்க, ‘அக்வா கல்ச்சர் ஃபௌண்டேஷன்’ நிறுவனர்கள் சக்திவேல், பேராசிரியர் பெரியசாமி ரெண்டு பேரும். ‘பெப்சி’ செடிகளை வளர்த்தா, மற்ற கடல் செடிகள்ல இருந்து கிடைக்கும் வருமானத்தை விட அதிகமா கிடைக்கும்னு சொல்லிக்கொடுத்து, அவங்க செலவுலேயே அதுக்குத் தேவையான சாமான்கள், ‘பெப்சி’ செடிகளைக் கொடுத்து எங்களுக்குக் கத்துக்கொடுத் தாங்க.

கடல்ல இயற்கையா வளரும் செடிகளை நாங்க பறிச்சதுக்கு அப்புறம் மீண்டும் வளர பல வாரங்கள் ஆகும். ஆனா ‘பெப்சி’ கடல் செடிகளை வருஷம் முழுக்க, நிறைய அளவுல வளர்க்கலாம். டிசம்பர் முதல் மார்ச் வரை ‘பெப்சி’ செடிகள் வேகமா வளரும்; மற்ற மாதங்கள்ல நடுத்தரமா இருக்கும். அந்த நேரங்கள்ல வழக்கம்போல கடல்ல மூழ்கி இயற்கையா வளரும் கடல் செடிகளைப் பறிப்போம். அதனால, ஆண்டு முழுவதும் அறுவடைதான். உலர்ந்த செடிகள் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விலை போகும். இந்தச் செடிகள்ல இருந்து ஐஸ்க்ரீம், சாக்லேட், ஜெல், ஜிகர்தண்டா இதுலயெல்லாம் சுவை கூட்டும் பொருள்களைத் தயாரிக்கி றாங்க’’ என்பவர், தங்கள் தொழிலில் உள்ள ஆபத்துகள் பற்றி சொன்னார்.

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி
‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி

‘`கடல் செடிகள்ல மரிக்கொழுந்து, கட்டக்கோரை, கஞ்சிப்பாசி, கருக்கம்னு நாங்க பறிக்கப்போகும்போது, தம் பிடிச்சுத்தான் கடலுக்கடியில போகணும். கண்ணுல தண்ணி பட்டுட்டா காந்தும் என்பதால, அதைத் தவிர்க்கிறதுக்கான கண்ணாடியை போட்டுக் குவோம். பாறைகள்ல கடல் பாம்பு, அஞ்சாலை எனப்படும் விஷ மீன்கள் இருக்கும். கடல் மண்ணுல புதைஞ்சிருக்குற திருக்கை மீன் வால்ல மிதிச்சுட்டா, அதுல இருக்குற விஷ முள் கால்ல குத்திட்டா, அந்தப் புண் ஆற பல வாரம் ஆகும். ஊசி போல இருக்கும் முரல் மீன்களோட அலகு குத்தும்’’ என்று விவரித்தபோதும் சுகந்தியின் புன்னகை மாறவே இல்லை.

‘`என் வாழ்க்கையோட இன்னொரு திருப்பம், ‘சுனாமி பாதிப்புக்குப் பின் நிலையான வாழ்வாதாரம்’ என்னும் திட்டத்தின் கீழ் கடல்ல கிடைக்குற சிப்பி, சோவி, சங்குகளைக் கொண்டு அலங்காரப் பொருள்கள் செய்ய பயிற்சி எடுத்துக்கிட்டது. அதை யெல்லாம் கடைகளுக்கும் ஆன்லைன்லயும் விற்பதோடு, மற்ற பெண்களுக்கும் அந்த கைவினைப் பயிற்சியைக் கத்துக்கொடுத்துட்டு வர்றேன். எங்கம்மா பல முறை பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்காங்க. அந்த ஆர்வத்துலயும், அனுபவத்துல யும் நானும் பாம்பன் பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கேன். தேசிய பங்கு சந்தை, ஒன்றிய, மாநில அரசு, தொண்டு நிறுவனங்கள்னு பல சமூக நலத்திட்டங்களின் கீழ் பாம்பன்ல சில சேவைகளும் செய்றேன்’’ எனும் சுகந்திக்கு வயது 37. மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

‘‘ஆண்டு முழுக்க அறுவடைதான்!’’ - கடலில்  விவசாயம் செய்யும் சுகந்தி

‘`பாம்பன்ல செயல்படுற, உலகிலேயே மீனவர்களுக் கான முதல் வானொலியான ‘கடல் ஓசை’க்கு என் முன்னேற்றத்துல பெரிய பங்கு இருக்கு. வானொலியில சுத்தம், சுகாதாரம், கொரோனா பாதுகாப்பு, அலங்காரப் பொருள்கள் செய்றது குறித்து பேச வாய்ப்புத் தர்றாங்க. அதன் மூலமா, பொதிகை டிவி தன்னோட ‘மங்கையர் சோலை’ நிகழ்ச்சியில என்னை பங்கு பெறச் செய்தது’’ - கடைக்கோடி தீவில் வசிக்கும் அந்த எளிய மனுஷியின் வலிமையான அவதாரங்கள் இறுதிவரை நம் ஆச்சர்யத்தை அதிகரித்தபடியே இருக்க, வழியனுப்பியபோது கடல் பெண்கள் பாடும் அந்தப் பாடலைப் பாடினார் சுகந்தி...

“கடலில் குனிந்து நாம தேடுவது வாழ்க்கையைத்தானா...

கடலில் மீன் பிடிக்கும்போதுகூட வேதனைதானா..!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism