Election bannerElection banner
Published:Updated:

உ.பி: புதிய சட்டத்தின் பெயரால் பிரிக்கப்பட்ட தம்பதி... சேர்த்து வைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

Court (Representational Image)
Court (Representational Image)

அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

`சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்டம் 2020’ என்கிற பெயரில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசு சென்ற மாதம் மதமாற்றத் தடுப்புச்சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தைப் போலவே பா.ஜ.க ஆளும் மத்தியப்பிரதேசத்திலும் `சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தை’ அமல்படுத்த சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

திருமணம் Court (Representational Image)
திருமணம் Court (Representational Image)

வழக்கு இதுதான். உத்தரப் பிரதேசத்தின் ஈதா மாவட்டத்தைச் சேர்ந்த ஷிகா என்கிற பெண்ணும், சல்மான் என்பவரும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர். தன்னுடைய மகளை கடத்தி சல்மான் திருமணம் செய்துகொண்டதாக பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சல்மானின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர், சல்மானின் மனைவியான ஷிகாவை அவரது விருப்பத்திற்கு எதிராக அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்துவிட்டனர்.

இந்நிலையில், தன் மனைவியை மீண்டும் தன்னிடமே ஒப்படைக்கக்கோரி சல்மான் உயர்நீதிமன்றத்தில் `ஹேபியஸ் கார்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

Court (Representational Image)
Court (Representational Image)

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் நக்வி மற்றும் விவேக் அகர்வால், சல்மானால் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஷிகாவிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஷிகா, தனது சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே சல்மானைத் திருமணம் செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஷிகாவின் பள்ளிச் சான்றிதழ்களின் அடிப்படையில் அவர் 1999-ம் வருடம் அக்டோபர் மாதம் பிறந்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் உண்மைத்தன்மையை இவ்வாறாக அறிந்துகொண்ட நீதிபதிகள், ஷிகாவிற்கு தன் கணவர் சல்மானுடன் வாழ முழு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மூன்றாவது நபரின் தடையோ அல்லது தலையீடோ இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி ஷிகா தன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று கூறியிருக்கும் நீதிபதிகள், சல்மானின் மீது காவல்துறையால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்துள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்
ஆதித்யநாத்களே... `லவ் ஜிகாத்’திடமிருந்து அல்ல; உங்களிடமிருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்திற்கு எதிராக அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்த மாவட்ட நீதிபதியின் செயலையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்குப் பிறகு ஷிகா சல்மானிடம் ஒப்படைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அத்தம்பதி தங்களது வீட்டிற்குச் சென்று சேரும்வரை காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு