மனிதர்களின் சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் `கின்னஸ் உலக சாதனை’ எனும் கௌரவம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 86 வயதுப் பெண்மணி, கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி நாஷ் (Bette Nash) சுமார் 65 வருடங்களாக விமான சேவை பணியாளராக (flight attendant) அமெரிக்கன் ஏரில் (American air) பணிபுரிந்து வருகிறார். எனவே, நீண்ட காலமாக விமான பணிப்பெண்ணாக இருப்பதற்காக வயது முதிர்ந்த இவரை அங்கீகரிப்பதாக, கின்னஸ் உலக சாதனைகளைப் பதிவு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் ஆச்சர்யமளிக்கும் விதமாக முதல்முறையாக செயற்கைக்கோள் விடப்பட்ட 1957-ம் ஆண்டில், இவர் தனது பணியைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து இந்தப் பணியில் இருந்தவருக்கு, தான் பயணிக்க உள்ள விமான பாதையைத் தேர்வு செய்யும் உரிமை கொடுக்கப்பட்டபோதும், தொடர்ந்து நியூயார்க் - பாஸ்டன் - வாஷிங்டன் டி.சி பாதையையே தேர்வு செய்துள்ளார். இவர் இந்தப் பாதையைத் தேர்வு செய்ததற்கான காரணம், ஒவ்வோர் இரவும் வீட்டுக்குச் சென்று, மாற்றுத் திறனாளியான தன் மகனுடன் நேரம் கழிக்க விரும்பியதுதான்.

தொடர்ந்து ஒரே பாதையில் பல வருடங்களாகப் பயணிப்பதால், இவர் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான விமான பணிப் பெண்ணாகவும் பயணிகளுக்கு மிகவும் பரிச்சயமான முகமாகவும் பெட்டி நாஷ் மாறியுள்ளார்.
``நான் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பறக்கிறேன். ஆனால், பெட்டி நாஷ் விமானத்தில் இருக்கும்போது, அந்தப் பயணம் சிறந்ததாக அமைகிறது'' என ஒரு பயணி பெட்டி நாஷை புகழ்ந்துள்ளார். கின்னஸ் உலக சாதனையை வென்ற இப்பெண்மணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.