Election bannerElection banner
Published:Updated:

தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி... வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!

அபயா கொலை வழக்கு
அபயா கொலை வழக்கு

மனித சமுதாயத்தில் இதற்கு முன்பும் இத்தகைய குற்றங்கள், நல்ல செயல்கள் இரண்டுமே நடந்திருக்கின்றன. அவற்றை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்று நமக்குச் சொல்வதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டுவோம்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது 1 வயதுக் குழந்தையாக இருந்தாலும், 100 வயதுப் பாட்டியாக இருந்தாலும் வெறும் கிள்ளுக்கீரை அளவுதான் என்றாகிவிட்டது. எந்த வயதிலும் பெண்ணின் உடலுக்கும் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி எத்தனையோ வழக்குகளைப் பார்த்த அண்மையில் ஏற்பட்டிருப்பது மற்றோர் அதிர்ச்சி. அதே நேரத்தில் மகிழ்ச்சி.

1992 டு 2020: கோடரியில் அடித்துக் கிணற்றில் தள்ளிய பாதிரியார்கள்... அபயா கொலை வழக்கில் நடந்தது என்ன?

தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும் என்பதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. ஆனால், 28 ஆண்டுகள் கழித்தும் நீதி உண்மை நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டியிருக்கிறது. கேரளாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கு. 28 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த 28 ஆண்டுகள் எப்படித் தாமதமானது என்று சற்று மூளையைக் கசக்கிப் பார்த்தால் சில உண்மைகள் தெளிவாகின்றன. இந்தக் கொலையை மறைப்பதற்காக அரசியல் அதிகாரம், பணம், மதம்... இவற்றையும் தாண்டி இன்னும் எத்தனை இருக்கின்றனவோ... அத்தனையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒன்பது ஆண்டுகள் விசாரணை செய்த ஒரு க்ரைம் பிராஞ்ச் காவலதிகாரி தடயங்களை அழிக்க உதவியுள்ளார்.

அவருக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது... அபயா கொலைக்கான காரணம் என்ன, செய்தவர்கள் யார் என்கிற உண்மைகள் எல்லாம் வெளிவந்துவிட்டன. ஆனால், பொதுமக்களின் வரிப்பணத்தில் தனது வருமானத்தை அரசின் மூலம் மாதமாதம் பெற்று வந்த ஓர் அதிகாரி தன் படிப்புக்கும் பதவிக்கும் அதிகாரத்துக்கும் பலத்துக்கும் எதிராகச் செயல்பட்டு குற்றம் புரிந்தவர்களைத் தண்டனைக்குள்ளாக்குவதற்கு மாறாக காப்பாற்றியிருக்கிறார். இவர் செய்தது நியாயமா?

கன்னியாஸ்திரீ அபயா
கன்னியாஸ்திரீ அபயா

இவர் செய்த தவற்றுக்கான தண்டனை என்ன என்பது நமது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.சி 240 சட்டப்பிரிவின்படி தடயங்களை அழித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துக் கொடுக்கலாம் என்று சொல்கிறது.

தடயத்தை வைத்துதான் தீர்ப்பு வழங்கப்படும் என்றால் அவ்வளவு முக்கியமான தடயத்தை அழிப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை போதுமானதா?

ஒரு காவல்துறை அதிகாரி தடயங்களை அழித்து இருக்கிறார் என்றால் அதற்குப் பின் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த காரணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது பணமா, ஆள் பலமா, அரசியல் பலமா, பதவி பலமா அல்லது மதமா... அதற்கு முன் தன் கடமையைப் பணிய வைத்த இந்த அதிகாரியின் செயல் லஞ்சம், ஊழல், பிரிவுகளின் கீழ் நீதியின் கண்களுக்கு புலப்பட்டு, அதற்கான தண்டனை அவருக்குக் கொடுக்கப்படுமா?

நீதித்துறைக்கும் மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கால விரயத்தை உண்டாக்கியதற்கு ஏதும் தண்டனை உள்ளதா? உண்மை என்ன என்பதை அறியாமலேயே ஒவ்வொரு நொடியும் மனம் நொந்து இறந்துபோன அபயாவின் பெற்றோர்களுக்கு நாமும் நமது சட்டமும் என்ன செய்யப்போகிறோம்?

மனிதநேயம் படைத்த ஒரு மனிதர் பொதுநல வழக்கு தொடுத்ததாலேயே 28 ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மை வெளிவந்தது. அந்த மனிதருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம், எப்படிப் பாராட்டப் போகிறோம்?

இந்தக் கருத்துகள் எல்லாம் எனக்கு மட்டுமே தோன்றியவை அல்ல.

Court
Court

மனித சமுதாயத்தில் இதற்கு முன்பும் இத்தகைய குற்றங்கள், நல்ல செயல்கள் இரண்டுமே நடந்திருக்கின்றன. அவற்றை நம் முன்னோர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்று நமக்குச் சொல்வதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டுவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்துக்குச் செல்வோம். சில கல்வெட்டுகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

ஆடு மாடுகளைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றுதல், வழிப்பறி, பெண்களைக் கொலை கொள்ளையிலிருந்து காத்தல் போன்ற பொதுச் சேவை செய்பவர்களுக்கு அரசர்கள் நிலம் வழங்கி, கல்வெட்டு பொறித்துப் போற்றியுள்ளனர். ஆயிரமாண்டுகளுக்குப் பின்னும் அவை அவர்களின் புகழை நிலைநிறுத்தி நம்மை வியக்க வைத்துள்ளன. அவற்றையே வீரக்கல் நடுகல் என்றழைக்கிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கள்ள பெரம்பூர் கைலாசநாதர் கோயிலில் மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டு அரசால் நியமிக்கப்பட்ட கணக்கர் பொய்க்கணக்கு எழுதியதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையை விரிவாகச் சொல்கிறது.

ஊர்கூடி இவருடைய பணி முறையாகச் செய்யப்படவில்லை; பொய்க் கணக்கு எழுதி இருக்கிறார் என்பதை அறிந்ததும் உடனே அந்த நபரை அரசுப் பணியிலிருந்து நீக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதையும் தாண்டி அந்த நபரும் அவரின் வழித்தோன்றல்கள் அல்லது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு வருபவர்கள் அத்தனை பேரும் ஊர் கணக்கு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. முடியாட்சியில் கிடைத்த இந்த நீதி இன்று மக்களாட்சியில் கிடைக்குமா?

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

இதேபோல் அரசுக்கு வரி கட்டாமல் அரசாங்க வருவாய் கணக்குப் புத்தகத்தில் கணக்கு ஏற்றாமல் மிக நீண்ட காலமாக மன்னனை வரி ஏய்ப்பு செய்துள்ளனர் ஊர் சபையினர். பழைய வடார்க்காடு மாவட்டம். அரக்கோணம் வட்டம் சார்ந்த திருமால்புரத்தில் உள்ள ஒரு சோழர் கல்வெட்டு இதைப் பற்றிக் கூறுகிறது. கிட்டத்தட்ட இந்த வரி ஏய்ப்பு 82 ஆண்டுகள் நடந்துள்ளது.

இந்தத் தவற்றை செய்தவர்களின் நிலபுலன்கள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களின் நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்விடப்பட்டு மன்னனின் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் முதலாம் ராஜராஜனின் காலத்தில் சிதைந்துபோன ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், அதாவது அவர்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறியதால் அல்லது வேறு ஏதோ தவறு செய்ததால் எட்டு அதிகாரிகளை ராஜராஜன் நடுநிலை தவறாமல் உடனடியாகத் தண்டித்தான்.

தீர்ப்பு வழங்க வேண்டிய நடுநிலையாளர்கள், பாதுகாவலர்கள் தனது காரியத்தைச் செய்யாத நிலையில் அவர்களுடைய பதவியைப் பறித்து அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு தங்கம் அபராதமாகச் செலுத்த நீதி அளித்தனர் சோழர்கள்.

சோழர்கள்
சோழர்கள்

அத்தகைய காலகட்டங்களில் அந்த ஊர் சபையினர் அனைவரும் சேர்ந்து இனியும் அப்படிப்பட்ட அநீதிகள் ஏற்படாது என்று உறுதி அளிக்கவும் வேண்டியிருந்தது. காலதாமதமின்றி வழக்குகள் உடனடியாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கவும் வழி செய்யப்பட்டிருந்தது. காலதாமதம் ஏற்படும் காலத்தில் அதற்கான காரணம் யார் என்பதைக் கண்டறிந்து மன்னர்கள் அவர்களைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு உத்திரமேருர் கல்வெட்டில் காணக் கிடைக்கிறது.

இத்தகைய சட்டங்கள் நம் மக்களாட்சியில் இருந்தாலும், அவை ஏன் எப்போதும் குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதில்லை?

முனைவர். எஸ். சாந்தினிபீ, வரலாற்றாசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், உ.பி.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு