Published:Updated:

`சிங்கப்பெண்ணே' பாடிய வாய், இந்த வசனத்தை எப்படி உச்சரித்தது விஜய்?' -`மாஸ்டர்' கவனத்துக்கு!

'மாஸ்டர்' விஜய்
News
'மாஸ்டர்' விஜய்

`மாஸ்டரி'ல் விஜய்யின் கதாபாத்திரமான `ஜேடி’ பேசும் வசனம் ஒன்று, `அப்போ நீங்க எல்லாம் இன்னும் திருந்தலையா?' என்ற கோபத்தையும் சோர்வையும் தருகிறது.

இந்த வருடத்தின் தியேட்டர் ரிலீஸாக பொங்கலுக்கு வெளியாகி தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியிருக்கிறது லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம்.

ஒரு பக்கம்`மாஸ்டர் தி ப்ளாஸ்டர்’ என ரிங்டோன் வைத்து விஜய்யின் ஹீரோயிஸத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னொரு பக்கம், 40+ விஜய்யை தங்களின் க்ரஷ் லிஸ்டில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரின் ரசிகைகள். இந்தத் திரைப்படம் கொரோனா கால இடைவெளிக்குப் பிறகான ஒரு கொண்டாட்டத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்த அதே நேரத்தில் படத்தின் சில வசனங்கள், பெரும்பாலான படங்கள்போலவே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

`மாஸ்டர்’ போன்ற, கமர்ஷியலுக்காக மட்டுமே என்று அடிக்கோடிட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டிய திரைப்படங்கள் பலவற்றிலும் கதாநாயகிகளும், இதர பெண் கதாபாத்திரங்களும் கடமையே என ஊறுகாயாக தொட்டுக்கொள்ள வந்து போவார்கள் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.

Master
Master

என்றாலும், அவ்வப்போது பெண்களின் முன்னேற்றத்தை கருவாக வைத்து வரும் படங்களும் பார்க்கக்கிடைத்தது ஆறுதல். விஜய்யின் இதற்கு முந்தைய படமான`பிகில்’கூட, `சிங்கப் பெண்ணே’ என்று பெண்களுக்குத் தன்னம்பிக்கை தந்ததோடு, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியாகவும் இருந்தது அந்தப் படத்தின் காட்சியமைப்புகள். ஹீரோயிஸம் என்பது ஆண் மையம் மட்டுமல்ல என்றதோடு பெண்களுக்குத் தரப்படும் சமநிலை முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இருந்தது விஜய்யின் 'பிகில்' கதாபாத்திரம். ஆனால் தற்போது `மாஸ்டரி'ல் விஜய்யின் கதாபாத்திரமான 'ஜேடி’ பேசும் வசனம் ஒன்று, `அப்போ நீங்க எல்லாம் இன்னும் திருந்தலையா?' என்ற கோபத்தையும் சோர்வையும் தருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

படத்தில் `ஜேடி' கதாபாத்திரத்தில் வரும் விஜய், `பவானி' கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதியிடம் பேசுவதாக ஒரு காட்சி. கதைப்படி ஹீரோ விஜய், வில்லன் விஜய் சேதுபதி. வில்லன், தான் செய்யும் முறைகேடான தொழிலுக்கு சிறார்களை தவறாகப் பயன்படுத்துவது ஹீரோவுக்குத் தெரியவர, ஹீரோ வில்லனை நேருக்கு நேர் மிரட்டுவதாக பின்னப்பட்டிருக்கும் அந்தக் காட்சியில் வரும் வசனம் இது...

``பொடிப்பசங்களுக்குப் பின்னாடி ஒளிஞ்சு வேலை செய்யுற பொட்டப் பசங்கள கண்டுபிடிப்பேன்’’

- வரலாற்றுச் சிறப்புமிக்க(!) இந்த வசனம் சொல்லவரும் கருத்து என்னவென்று, இயக்குநர் லோகேஷுடமும் அதை அப்படியே உள்வாங்கிப் பேசிய நடிகர் விஜய்யிடமும் கேட்கிறோம்.

Master
Master

காலம் காலமாகப் பெண்களை திரைப்பட வசனங்களாலும், காட்சியமைப்பு மற்றும் பாடல் வரிகளாலும் ஒடுக்கிவைத்து புண்படுத்திக் கொண்டிருப்பதை தமிழ் சினிமா படைப்பாளிகள் அறியாமலில்லை. அதற்காக பல ஆயிரம் முறைகளுக்கு மேல் பெண்கள் தங்கள் எதிர்ப்புக் குரல்களை முன் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் எதுவுமே இச்சமூகத்தில் நடக்காத மாதிரியும், அல்லது அதை காதில் வாங்கி அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத மாதிரியும் நடந்து கொள்வதுதான் திரைப்பட தர்மமா?

வசனத்தை மேலோட்டமாகப் படிக்கும் பலருக்கு, `இதிலென்ன இருக்கிறது?’ என்று தோன்றலாம். அங்கேதான் சமூக ரீதியாகத் தோற்றுப் போகிறோம். பெண்களை கேவலப்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் தவறென்றுகூட உணர முடியாத அளவுக்கு, இயல்பாக அது நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தினம் தினம் இவ்வாறாகவே கேட்டுக் கேட்டுப் பழகி, புழங்கி வருபவர்களுக்கு, திரையிலும் அதை காணும்போது எப்படி அதை தவறு என உணர முடியும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, அந்த வசனத்தை கொஞ்சம் குறுக்குவெட்டு ஆராய்ச்சி செய்வோம். `பொடிபசங்களுக்குப் பின்னாடி ஒளிஞ்சு வேலை செய்யுற பொட்டப் பசங்களை...’ - `பொட்ட’ என்றால் என்ன? இது பேச்சு வழக்கில் `பெண்' என்ற பாலினத்தைக் குறிக்கும் சொல்.

இந்தக் காட்சியில் இவ்வார்த்தை சொல்ல வரும் அர்த்தம் என்ன? பெண் என்பவள் தீய செயல்கள் செய்யும் குற்றவாளி இனத்தைச் சேர்ந்தவளா? அல்லது பெண் என்பவள் மறைந்திருந்து தீங்கு செய்யும் பாலின கோழையா? அல்லது பெண் பாலினமே இத்தகைய குணங்கள் கொண்டவர்கள்தானா? நீங்கள் எதை உணர்த்த இந்த வசனத்தில் இவ்வார்த்தையை பயன்படுத்தினீர்கள் லோகேஷ் கனகராஜ்?

`பொட்ட’ என்ற பெண் பால் சொல்லை எதற்கும் வக்கற்ற, துணிச்சலற்ற கோழையென்று உருவகம் செய்து வைத்திருக்கிறது ஆணின் மொழி. மொழியிலிருந்தே அழிக்க வேண்டிய ஒரு சொல்லை திரையில் மீண்டும் மீண்டும் ஹீரோக்களை வைத்தே அழுத்தம் கொடுத்துச் சொல்ல வைப்பதன் மூலம் நீங்கள் எதை சாதித்ததாக உணர்கிறீர்கள்?

Master
Master

குழந்தையில்லாத, எதிர்த்து சண்டையிடாமல் அமைதியாகச் செல்லும் ஆண் கதாபாத்திரங்களை `பொட்ட’ என்று சொல்வதும், திருநங்கை கதாபாத்திரங்களையும் அவ்வாறாகவே விளிப்பதும் தமிழ் சினிமாவில் பலமுறை நடந்தேறி கண்டனத்துக்குள்ளான அசிங்கங்கள். ஆண்கள் இருவரும் பந்தயம் வைத்துக் கொண்டால், `தோத்துட்டா இந்தப் புடவையை கட்டிக்கோ’ என்கிற காட்சிகள் பலவற்றை கடந்து வந்துகொண்டிருக்கிறோம் நிஜத்திலும். `பெண் என்பவள் இழிவான பாலினம். ஆண் என்பதே வீரம். ஆண் என்பவனே அதிகாரம், கம்பீரத்துக்கு உரியவன்' என்று படைப்பின் மூலம் மீண்டும் மீண்டும் முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் என்பவளை, ஓர் ஆண் வந்து காப்பாற்றும் வரை கதறிக் காத்திருக்கும் கையாலாகாத கோழையாகவே காலம் காலமாக சினிமாக்கள் சித்திரித்து வைத்திருக்கின்றன.

பாலின இழிவு பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், `பொட்ட மாதிரி பேசாத’, `நீ ஒரு ஆம்பிளையா இருந்தா’, `பெரிய பத்தினி மாதிரி பேசாத’, `பொட்டக் கோழி கூவியா விடியப் போகுது?’ போன்ற வசனங்களையெல்லாம் கைகூசாமல் எழுதிவிட்டு, `புழக்கத்தில் உள்ள வார்த்தைகள்தானே..?' என்று முட்டுக்கொடுக்க நினைப்பது படைப்பாளிகளுக்கு அழகா? `பொட்டக்' கோழி கூவினால் பொழுது விடியாமல் போகுமோ இல்லையோ… ஆண் சேவல்களின் வாயைப் பொத்தி வைத்தாலும்கூட பொழுது விடிவதை யாராலும் தடுக்க முடியாதுதான்.

Master
Master

ஆண்களுக்கு மாஸாக ஓப்பனிங் டான்ஸ், சண்டைக்காட்சிகள், பெண்களுக்கு `அயிட்டம்(!)' டான்ஸ், க்ளீவேஜ் காட்சிகள், இன்னும் கொஞ்சம் `க்ரியேட்டிவ்' ஆக இயக்குநர்கள் யோசித்தால், ஹீரோயின்களுக்கு புகழ்பெற்ற `பேக்கு' டெம்ப்ளேட்கள். அத்திப் பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களுக்கென நல்ல கதாபத்திரங்களோடு நல்ல படங்கள் வந்தாலும், அவற்றை வரவேற்றுக் கொண்டாடி முடிப்பதற்குள் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையே திரும்பச் திரும்பச் செய்கிறார்கள்.

`உனக்கு இவள் எத்தனையாவது பொண்டாட்டி?’ என்கிற கேள்வி எழும்போது அந்த ஆண் ஏதோ ஆண்மையில் கைதேர்ந்தவன்போல மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீரமாய் சிரித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வைக்கிறார்கள். அதுவே, `நீயென்ன பத்தினியா?' என்ற காட்சியில் அந்தப் பெண் கூனிக் குறுகி நிற்பாள். அல்லது, வெடித்துக் கதறி தான் பத்தினி என்பதை நிரூபிக்கப் போராடுவாள். `பத்தினி' என்ற வார்த்தை பெண்ணுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. பத்தினிக்கு ஆண்பால் வார்த்தை மொழியில் இல்லை. பத்தினிக்கு மட்டுமல்ல, இன்னும் பலவற்றுக்கும். நாங்கள் கேட்பது, பாலின எதிர்ப்பத வார்த்தைகளை அல்ல. இப்படி குவிந்து கிடக்கும் பெண் மைய இழிச்சொற்களை, பல கோடி மக்கள் பார்க்கும் படங்களில் வசனமாக வைத்து, அவர்கள் மனதில் ஏற்கெனவே பதிந்துபோயிருக்கும் ஆண் எனும் ஆணவத்தை இன்னும் கெட்டிப்படுத்தாதீர்கள். அவ்வார்த்தைகளை அறியாத இளம் தலைமுறை, பதின் பருவ பிள்ளைகளுக்கும் அதை கற்றுக்கொடுத்து, `ஆண் என்றால் இப்படி பெண்களை இழிவுசெய்து பேசுவதுதான் மாஸ்' என்று ஆபத்தான பதியம் போடாதீர்கள்.

Master
Master

டிசம்பர் 23, 2020 தேதியிட்ட சென்சார் அறிக்கையில், `மாஸ்டர்' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்' என்ற பட்டியலில், `பொட்ட பசங்க' என்ற வசனமும் இடம்பெற்றிருந்தது. `மாஸ்டர்' படம் வெளியானது ஜனவரி 13, 2021. தென்மாவட்டங்களில் படம் வெளியான பல தியேட்டர்களில், குறிப்பிட்ட வசனம் நீக்கப்படவில்லை, மியூட் செய்யப்படவில்லை. அந்த`மாஸ்' வசனத்துக்குப் பறந்தன விசில்கள். 15 நாள்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 29 அன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டபோதும் அந்த வசனத்தை நீக்கவில்லை. மெள்ள சலசலப்பு எழுந்த சூழலில், ஓடிடியிலும் அந்த வார்த்தை உட்பட பல வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. மியூட் செய்வது இருக்கட்டும். மியூட் செய்வதற்கு முன் நடந்தது என்ன?

Censor
Censor

இடைவேளைக்கு முந்தைய அந்த முக்கியமான காட்சியை, எத்துணை சிரத்தையோடு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியிருப்பார்? அதற்காக எத்தனை டிஸ்கஷன்கள் நடத்திருக்கும்? சிறார் குற்றங்கள் குறித்த குற்றச் சிக்கலை தன் திரைப்படம் மூலம் பதிவு செய்ய நினைத்த இயக்குநர் இப்படி ஒரு வார்த்தையை எழுதும்போது, அது எந்தளவுக்குப் பெண் அடிமைத்தனம், ஆண் அதிகாரம் கொண்டது என்பதை உணரவில்லை. மாஸ் ஹீரோ விஜய், தான் இப்படி ஒரு வசனம் பேசுவது, தன்னை கொண்டாடும் ரசிகைகளுக்கு, பெண் இனத்துக்கு தான் செய்யும் அவமரியாதை இது என்பதை உணரவில்லை. இன்னும், ஷூட்டிங், எடிட்டிங் முதல் சென்சார் போர்டு சர்டிஃபிகேட்வரை இப்படத்தின் இத்தனை படிநிலைகளில் பணிபுரிந்த படக்குழுவினர் யாருக்குமே, `இந்த வசனம் தவறு, இது நீக்கப்பட வேண்டியது' என்று தோன்றவில்லை. எனில், இந்தக் காட்சி கடந்து வந்த இத்தனை மனிதர்களின் மனங்களிலும் `பொட்ட' என்ற சொல் எந்தளவுக்கு `சரி' என்று பதிந்துபோயிருக்கிறது?

`அஃபீஷியலாக' அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது' என்ற பதில் யாருக்காக? நேற்று, அந்தச் சிறுவர்கள் தங்கள் மொபைலில் பார்த்துக்கொண்டிருந்த `மாஸ்டர்' படத்தில்கூட, நீக்கமற்றுதான் இருந்தது அந்த வசனம். அந்தப் பதிப்பை அவர்கள் எந்தத் தளத்தில் பார்க்கிறார்கள் என்பதல்ல பிரச்னை. எந்த வேரையும் கண்டடைய முடியாது என்பதே இணையத்தின் இயல்பு. ஆனால், அந்த வசனம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் பிற படைப்பாளிகள், நடிகர்களிடம் பெண்கள் சார்பாக சொல்வது இதைத்தான். திரையில் பெண்களை அவமானப்படுத்தும் வசனங்கள், காட்சிகளை வைக்காதீர்கள். இது கோரிக்கை அல்ல. ஏனெனில், கேட்கும் இடத்தில் கீழிறங்கி நாங்களும், கொடுக்கும் இடத்தில் மேலேறி நீங்களும் இல்லை. இது உங்களுக்கான அறிவிப்பு. சொல்லப்போனால், வசனத்தை நீக்கியுள்ள நடவடிக்கையும்கூட, கோரிக்கையால் விளைந்ததில்லை. அதற்கான எதிர்வினையை உத்தேசித்தே எடுக்கப்பட்ட முடிவு அது. காலம்தோறும் அவமானப்படுத்தப்பட்ட போதெல்லாம் பெண்கள் ஏற்படுத்திய எதிர்வினைகளால் இன்று நிகழ்ந்திருக்கும் மாற்றம் அது.

ஆம்... எதிர்வினையாற்றுவோம் தொடர்ந்து.

- அர்ச்சனா