Published:Updated:

பாலியல் வழக்கு: `டி.ஜி.பி-யின் பெயரை ஊடகங்களில் வெளியிடக்கூடாது!' - உயர்நீதிமன்றம் சொன்னது ஏன்?

Chennai Highcourt

``குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது, ஊடகங்களில் உயர் அதிகாரி என்று தான் குறிப்பிட வேண்டும்" எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

பாலியல் வழக்கு: `டி.ஜி.பி-யின் பெயரை ஊடகங்களில் வெளியிடக்கூடாது!' - உயர்நீதிமன்றம் சொன்னது ஏன்?

``குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது, ஊடகங்களில் உயர் அதிகாரி என்று தான் குறிப்பிட வேண்டும்" எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

Published:Updated:
Chennai Highcourt

பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், காவல்துறை உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி மீது புகார் கொடுத்திருந்தார். தனக்கான நீதி கேட்டுச் சென்றவரின் புகார் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளப்படவில்ல. `உயர் அதிகாரியின் மீது நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' என்ற பெயரில் அறிவுரைகள் முதல் அவமரியாதைகள், மிரட்டல்கள் வரை கடந்தேதான் வந்திருக்கிறார் பாதிக்கப்பட்டவர்.

Tamilnadu Police
Tamilnadu Police
Photo: Vikatan

இந்நிலையில், ``குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது, ஊடகங்களில் உயர் அதிகாரி என்று தான் குறிப்பிட வேண்டும்" எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் பெயரைத்தான் வெளியிடக்கூடாது, பாதிப்பிற்கு காரணமாக இருந்தவரின் பெயரை வெளியிடுவதில் என்ன சிக்கல் என பேசு பொருளாகியிருக்கிறது உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. இது ஒருபுறம் என்றால், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு நடந்த அநீதிக்குப் பல ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஒருவழியாகத் தீர்ப்பு கிடைத்து விட்டது நல்ல செய்திதான். ஆனால் காலம் தாழ்த்திக் கிடைத்த தீர்ப்பு அரசின் அலட்சியம் கலந்த புறக்கணிப்பையே தொடர்ந்து செய்து வருகிறதோ எனச் சிந்திக்க வைக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விருதுநகர் பொதுப்பணித்துறை வைப்பாறு வடிநில கோட்டத்தில் உதவி நிர்வாக இன்ஜினீயராகப் பணிபுரிந்து வந்த பெண் அதிகாரி அதே துறையில் பணியாற்றி வந்த அதிகாரிகளால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானார். 2016-ம் ஆண்டு அவர் அளித்த புகார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இதுவரை இருந்துவந்திருக்கிறது. பின் அந்தப் பெண் அதிகாரியின் தந்தை மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க, புகார் ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அதிகாரிகள் நடந்துகொண்டதற்கும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது மாநில மனித ஆணையம். கடும் அதிருப்தியைப் பதிவு செய்த மாநில மனித ஆணையம், இதையடுத்து பணியிடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதைத் தடுக்க 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்களால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை உத்வேகத்துடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இத்தனை சிக்கல்களுக்குப் பிறகுதான் அத்தியாவசிய சட்டத்தையே அரசு பின்பற்றுமா என்னும் கேள்வி இதில் எழுகிறது.

ஆதிலட்சுமி லோகமூர்த்தி
ஆதிலட்சுமி லோகமூர்த்தி

இந்த இரு சம்பவங்களைப் பொறுத்தவரை சட்டத்தின் பார்வை எந்த அளவிற்குச் சரி, எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி தெளிவுபெற வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தியைத் தொடர்பு கொண்டோம்.

``பாதிக்கப்பட்டவரின் பெயரையோ விவரங்களையோ வெளியிடக் கூடாது என்பது அவரின் பாதுகாப்பை கருதியே கூறப்படுகிறது. ஆனால் பாதிப்புக்கு காரணமாக இருந்தவருக்கு எதற்குப் பாதுகாப்பு என்பது நியாயமான சிந்தனைதான். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபணம் ஆகும் வரையில் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதும் சட்டத்தின் கடமைதான்" எனத் தொடர்ந்தார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

``குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களுள் முக்கியமான மாநிலம் ராஜஸ்தான். அதைத் தடுப்பதற்காகவே பிரத்யேகமாக சமூக களப்பணியாளர்களை அங்கு நியமிப்பார்கள். அப்படி நியமிக்கப்பட்ட சமூக களப்பணியாளரான பண்வாரி தேவி உயர்சாதி வகுப்பில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் ஒன்றை நிறுத்தினார். அதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் பண்வாரி தேவியை கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். அரசால் நியமிக்கப்பட்டு தன் பணியைச் செய்ததற்கான பரிசாகவே கிடைத்தது அவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்.

Women Police (Representational Image)
Women Police (Representational Image)
Photo: Vikatan / Kalimuthu.P

பாலியல் வன்கொடுமை அவருக்கு நடந்துமுடிய உடல் வலியோடும் மன வேதனையோடும் சாதாரண கிராமத்துப் பெண்ணான பன்வாரி தேவி தனக்காக தானே போராடினார். காவல் நிலையம் தொடங்கி உயர்நீதிமன்றம் வரை அவருக்கான தீர்ப்பு கிடைக்கவே இல்லை. அன்றைக்கு எந்தவித பண பலமோ ஆள் பலமோ இல்லாமல் தனியொரு கிராமத்துப் பெண்ணாகப் போராடிய பன்வாரி தேவிக்கு ஆதரவாக இந்தியச் சமூகம் பேசத் தவறியது.

எந்தவித ஆதரவும் இல்லாத பன்வாரி தேவியின் குரலைப் பெண்கள் பலர் கேட்கத் தொடங்கினர். அப்படியாகப் பெண்கள் பலரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து `விஷாகா' என்னும் பெயரில் தளம் அமைத்து உச்சநீதிமன்றத்தில் பன்வாரி தேவிக்கு நீதி வேண்டி மனுத்தாக்கல் செய்தனர். அப்போதுதான் பணிபுரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமைகள் ஏற்பட்டால் அதற்குத் தீர்வாக ஒரு சட்டம் கூட இல்லை என்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்து கொள்கிறது. இவ்வளவு ஏன், இந்திய தண்டனை சட்டத்திலும் அதற்கென்று பிரிவு அப்போது இருந்திருக்கவில்லை.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash

அந்த நேரத்தில்தான், 1993-ல் ஐக்கிய மாநாட்டின் (UN) சர்வதேச மசோதாவான convention on the elimination of all forms of discrimination against women(CEDAW) [international bill]-க்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அப்படியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட சர்வதேச மசோதாவின் கைடு லைன்களுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காகச் சிறப்புச் சட்டம் வரும் வரை அதையே பின்பற்றத் தயாரானது இந்திய அரசு. இதுதான் விஷாகா கமிட்டி.

இப்படியாக, உச்ச நீதிமன்றத்தில் 1997-ல் பன்வாரி தேவிக்கு நிகழ்ந்த அநீதிக்கு விஷாகா வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் ராஜஸ்தான் வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பன்வாரி தேவி சம்பவத்தின்போது கமிஷன் அமைத்தது போல நிர்பயா சம்பவத்தின்போது வர்மா கமிஷன் போடப்பட்டது. அந்த நீதிபதி வர்மாதான் 1997-ல் விஷாகா வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் ராஜஸ்தான் தீர்ப்பின் போது தலைமை நீதிபதியாக இருந்தவர்.

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழு அமைக்க அந்த கமிஷனின்படி முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சீனியர் மோஸ்ட் பெண் அந்தக் குழுவிற்குத் தலைவராக இருக்க வேண்டும் நிறுவனத்தைச் சார்ந்த ஆண்களும், வெளி நபர் ஒருவரும் அந்த கமிட்டியினுள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

பாலியல் ரீதியாகப் பெண் பாதிக்கப்படும் பட்சத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ விவரங்களையோ வெளிப்படையாகச் சொல்லக்கூடாது எனும் கைடு லைன் பின்பற்றப்பட வேண்டும். அதே போலத்தான் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையோ விவரங்களையோ வெளியே சொல்லக்கூடாது என்கிறது அந்த கைடு லைன். இதுதான் 2013-ல் சட்டமாகவும் மாறியிருக்கிறது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash

கைடு லைன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி 2013-ல் [sexual harassment of women at workplace (prevention, prohibition and redressal) act 2013] வெளிவந்த சட்டம்தான் இப்போது நடைமுறையிலும் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தின் செக்ஷன் 16-ன் படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணாக இருந்தாலும் சரி, எதிர்த்தரப்பில் இருப்பவராக இருந்தாலும் சரி அவர்களின் பெயரையோ விவரங்களையோ வெளியே கூறக்கூடாது, ரகசியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படிதான் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான காவல்துறை உயர் அதிகாரியின் பெயரை வெளியிடாமல் உயரதிகாரி என்று கூற உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.

ஒருவர் மீது தவறாகக் கூட குற்றச்சாட்டை எழுப்பமுடியும். அதனால்தான் பாதிக்கப்பட்டவரின் தகவல்களைப் பாதுகாப்பது போல, குற்றம் சாட்டப்பட்டவரின் தகவல்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது சட்டம். `பாலியல் வன்கொடுமை' என்னும் பேச்சு வந்துவிட்டால் அது குற்றம்சாட்டப்பட்டவருக்கு மிகப் பெரிய கரும்புள்ளி. குற்றம் நிரூபணம் ஆகும்வரை குற்றம் சாட்டப்பட்டவரின் தகவல்களை வெளியிடுவது மிகத் தவறு. அதைத்தான் உயர் நீதிமன்றமும் கூறியிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆண் உயர் அதிகரிக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது எனும் பேச்சு இருக்க, இவருக்காகச் சட்டம் புதிதாகக் கொண்டுவரப்படவில்லை. முன்பிருந்தே இருந்து வரும் சட்டத்தைத்தான் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது" என்கிறார் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

abuse
abuse

அதே சமயம், இதற்கான மறுபக்கத்தை நாம் பார்ப்பதும் அவசியம். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைப் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கும் அரசு பாதிக்கப்பட்டவர்கள் மீது அதே அக்கறை செலுத்துவது அவசியம் அல்லவா? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் அடையாளமும் வெளியில் தெரியக்கூடாது என சட்டம் சொன்னாலும் பல நேரத்தில் அப்படி நடப்பதில்லை.

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ராஸ் மாவட்டத்தில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் உடலை காவல்துறையே எரித்தது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தபோது, குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் நண்பர்கள் அதிகாரத் தோரணையோடு, புகாரை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.

law (Representational Image)
law (Representational Image)

இப்படிப்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தானே? பாதுகாக்க வேண்டிய இடங்களிலெல்லாம் கோட்டைவிட்ட சட்டம் அதிகார மையத்தில் இருப்பவர்களை மட்டும் பாதுகாக்க விழைகிறதோ என சிந்திக்கத் தூண்டுகிறது காவல்துறை உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சையான பாலியல் அத்துமீறல் வழக்கு.