Published:Updated:

சலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்!

கே.கே.ஷைலஜா டீச்சர்
பிரீமியம் ஸ்டோரி
கே.கே.ஷைலஜா டீச்சர்

மக்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் கொரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்.

சலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்!

மக்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் கொரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்.

Published:Updated:
கே.கே.ஷைலஜா டீச்சர்
பிரீமியம் ஸ்டோரி
கே.கே.ஷைலஜா டீச்சர்
கேரளாவில் 2018, 2019 என இரண்டு ஆண்டுகளாக மேகம் பிளந்ததுபோலக் கொட்டிய மழைவெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள்.

வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்கள், நிலச்சரிவில் புதையுண்டவர்கள் எனக் கேரளம் முழுக்கத் துயரக் காட்சிகள். மழை ஓய்ந்து அந்த பாதிப்பிலிருந்து விடுபடும் முன், வௌவால் களிலிருந்து பரவிய நிபா வைரஸ் கேரள மக்களின் உயிர்களைக் காவு வாங்கி மிரட்டியது. இப்போது உலகையே ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸும் கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. எல்லாப் பெருந்துயரையும் எதிர்த்துப் பணிபுரியும் கேரள சுகாதாரத்துறையின் முகம், சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். அவரிடம் பேசினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கே.கே.ஷைலஜா டீச்சர்
கே.கே.ஷைலஜா டீச்சர்

‘`சீனாவில் 2019 டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் மெள்ளப் பரவ ஆரம்பித்ததும், 2020 ஜனவரி 18-ம் தேதியே கேரளத்தில் தடுப்பு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டோம். வூஹானிலிருந்து கேரளா வந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டது. அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தோம்; அவர்களுடன் பழகியவர்களையும் தனிமைப் படுத்தி 28 நாள்கள் கண்காணித்தோம். மூன்று பேரும் முற்றிலும் குணமாகி வீடு திரும்பி இப்போது ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

இரண்டாவது கட்டம், எங்களுக்குச் சவாலாக அமைந்தது. இத்தாலியிலிருந்து வந்த பத்தணம் திட்டாவைச் சேர்ந்த மூன்று பேர், தங்களின் கொரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்தி, பயண விவரங்களை மறைத்து நடந்துகொண்டதன் விளைவு, அவர்கள் வீட்டிலேயே மேலும் இருவருக்கு கொரோனா பரவியது. அவர்களைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்தோம்.

இப்படியாக, அடுத்தடுத்த பாசிட்டிவ் கேஸ்கள் உறுதிப்படுத்தப்பட்டபோது கண்காணிப்பு வளையமும் விரிந்தது. மார்ச் 17-ம் தேதி 18,011 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப் பட்டனர். 18-ம் தேதி, ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 5,372 என உயர்ந்தது. இப்போது கேரளாவில் கொரோனாவால் 25,603 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மார்ச் 16-ம் தேதிவரை, கேரளாவில் 24 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.’’ எண்களை சரளமாகச் சொல்கிறார் ஷைலஜா. ஒவ்வொரு நாள் விடியலிலும் தன் துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிவது இந்த எண்களைத்தான்.

‘`இரண்டாம் கட்டப் பரவலில் கற்ற பாடத்தில், கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் ஒருவர்கூடக் கவனிக்கப்படாமல் போய்விடக்கூடாது என அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்திவருகிறோம். ‘பிரேக் தி செயின்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாநிலமெங்கும் அதிக எண்ணிக்கையில் கைகழுவும் பூத்களை ஏற்படுத்தியிருக்கிறோம். மக்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் கொரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்.

கே.கே.ஷைலஜா டீச்சர்
கே.கே.ஷைலஜா டீச்சர்

இதற்கிடையே, கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்ட, இத்தாலியிலிருந்து வந்த மூன்று வயதுக் குழந்தைக்கு, களமசேரி மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்பதே நாள்களில், இப்போது முதல் டெஸ்ட்டில் அக்குழந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. இன்னும் ஓர் இறுதி டெஸ்ட் எடுக்கவேண்டும். நாட்டின் மிக இளைய கொரோனா பாதிப்பாளரான அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிசெய்திருக் கிறோம் என்பதில் மகிழ்ச்சி’’ - கொள்ளைநோய் பரபரப்புப் பணிகளுக்கு இடையிலும் நிம்மதிப் புன்னகை ஷைலஜா முகத்தில்!

வாழ்த்துகள் ஷைலஜா!

கேரள சுகாதார மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா டீச்சருக்கு வயது 63. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குதுபரம்பா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சிவபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேலைபார்த்தவர், தன் அரசியல் பணிகளுக்காக வேலையை ராஜினாமா செய்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், ஜனாதிபத்திய மகிளா குழுவின் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் வெளிப்பட்ட அவரின் தலைமைப் பண்பு, 2016-ல் பினராயி விஜயன் அமைச்சரவையின் இரண்டு பெண் அமைச்சர்களில் ஒருவராக அவரைத் தேர்வுசெய்ய வைத்தது. மருத்துவப் பேரிடர் சூழல்களில் கேரள சுகாதாரத்துறையை தேசத்துக்கே முன்னுதாரணமாக எடுத்துச் செல்லும் ஷைலஜாவுக்கு தேசமெங்குமிருந்து குவிகின்றன வாழ்த்துகள்!

‘வெளிநாட்டுப் பயணிகளைப் புறக்கணிக்கக்கூடாது!’

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தினமும் நடக்கிறது. அதில் கொரோனா நிலவரம் குறித்து அப்டேட் செய்கிறார்கள். முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தவிர அரசு சார்பில் வேறு யாரும் செய்தியாளர்களிடம் பேசி பீதியை உருவாக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளைப் பேருந்துப் போக்குவரத்தில் அனுமதிக்காதது, விடுதி அறை கொடுக்க மறுப்பது போன்ற புறக்கணிப்புகள் நடக்கும்போது, அவர்களுக்குக் காவல்துறை மூலம் உதவி செய்யப்படுகிறது. வெளிநாட்டினரைப் புறக்கணிக்கும் விதமாக நடந்துகொள்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.