Published:Updated:

ஆதித்யநாத்களே... `லவ் ஜிகாத்’திடமிருந்து அல்ல; உங்களிடமிருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!

சாதியைத் தாண்டி திருமணம் செய்யும் பெண்களுக்கு `ஆணவக்கொலை' என்பதை பரிசாகத் தந்துகொண்டிருக்கிறது இந்தச் சமூகம். அதேபோல மதம் மாறி திருமணம் செய்யும் பெண்களுக்கு எதிராக சட்டபூர்வமாகவே தண்டனை தருவதற்குத் தயாராகிக் கொண்டுள்ளன பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள் #VoiceOfAval

பல்லாயிரம் ஆண்டுகளாகவே பெண் என்பவள் இங்கே பகடைக்காயாகவே இருக்கிறாள். குடும்பப் பெருமை என்கிற பெயராலும், சாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் பெண்களை ஆட்டிப்படைப்பதும், அதிகாரத்தால் அடக்கி ஆள்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது. இதோ... இந்த டிஜிட்டல் உலகத்திலும்கூட `லவ் ஜிகாத்’ என்ற ஒன்றைச் சொல்லி, பெண்களை பகடைக்காயாக வைத்து அரசியல் ஆட்டம் நடக்கிறது. இது, தற்போது அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

``லவ் ஜிகாத்'தை தடுக்கச் சட்டம் இயற்றியே தீருவோம்‘ என்று பி.ஜே.பி ஆளும் ஐந்து மாநில முதல்வர்கள் சூளுரைக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது.

`இஸ்லாமிய ஆண்கள், இந்துப் பெண்களைத் திட்டமிட்டுக் காதலித்து, கட்டாயப்படுத்தி மதம்மாற்றி திருமணம் செய்கிறார்கள்' என்று பல ஆண்டுகளாகவே வலதுசாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்தான் `லவ் ஜிகாத்'.

ஹாதியா
ஹாதியா

2017-ம் ஆண்டு ஹாதியா என்ற கேரளப் பெண்ணின் திருமணம் உச்ச நீதிமன்றப் படிகள் வரை ஏறியது. இந்துக் குடும்பத்தில் பிறந்த அகிலா, ஹாதியாவாக சுய விருப்பத்தின் பேரில் மதம்மாறி, இஸ்லாமியரான ஷஃபின் ஜஹான் என்பவரை மணந்துகொண்டார். ஹாதியாவின் அப்பா தொடர்ந்த வழக்கில், `திருமணம் செல்லாது. அவர் தன் பெற்றோருடன் செல்ல வேண்டும்' என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `திருமணம் சட்டப்படிச் செல்லும். தன் விருப்பம்போல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அனைத்து உரிமைகளும் ஹாதியாவுக்கு உண்டு’ என்று தீர்ப்பளித்தது.

ஆனாலும், `லவ் ஜிகாத்’ என்ற ஆபத்தான கருத்தை மக்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிப்பதற்கு ஹாதியாவையும் பயன்படுத்திக்கொண்டனர் வலதுசாரிகள். எல்லா பிரச்னைகளையும் போலவே, மதப் பிரச்னைகளையும் பெண்களை முன்னிறுத்திப் பேசும்போது, கவனம் அதிகமாகிறது. ஆண்களின் ஆதரவும் அவர்களுக்குப் பெருகுகிறது.

தனிஷ்க் விளம்பரம்
தனிஷ்க் விளம்பரம்

2020-க்கு வருவோம். இந்து மருமகள் - இஸ்லாமிய மாமியாரின் அன்பைச் சொல்லும் `தனிஷ்க்‘ நிறுவன விளம்பரம், மத ஒற்றுமையையும் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால் அதை `லவ் ஜிகாத்’தை ஆதரிக்கும் விளம்பரம் என்று எதிர்ப்பு தெரிவித்த வலதுசாரிகள், தனிஷ்க் ஷோரூமுக்குள் புகுந்த அச்சுறுத்தவும் செய்தனர். விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது. இதைத் தங்கள் வெற்றியாக வலதுசாரிகள் நினைத்த வேளையில், நாடெங்கும் அவர்களுக்கு எதிரான குரல்கள் எழுந்தன. அப்போது, ``என் வளைகாப்பும் அப்படித்தான் நடந்தது!'' என்று அன்பும் நிறைவுமாக விகடனுக்குப் பேட்டியளித்தார் இஸ்லாமியரான அப்துல் கபூரை திருமணம் செய்துகொண்ட இந்திரா. ``இதுபோன்று இந்து-முஸ்லிம் பிரச்னைகள் கிளப்பிவிடப்படும்போது இருவருக்குமே வருத்தமாக இருக்கும். ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக நாங்கள் வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறோம்’’ என்றும் நம்பிக்கையோடு சொன்னார் இந்திரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி எத்தனையோ காதல் தம்பதிகள் நம் நாட்டில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில், `சதிவலை’யாக, சட்டப் பிரச்னையாக, தண்டனைக்குரிய குற்றமாக அந்தக் காதலையும் கல்யாணத்தையும் கட்டமைக்கும் முயற்சி, நீதிமன்றத்தின் துணையோடு முன்னெடுக்கப்பட இருப்பதுதான் அதிர்ச்சியைக் கூட்டுகிறது.

``உத்தரப் பிரதேசத்தில், `மிஷன் சக்தி’ திட்டம் மூலம் தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாப்போம். பெண்களின் கண்ணியம் காக்க, `ஆபரேஷன் சத்யா’ திட்டம் கொண்டு வரப்படும். பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிப்பவர்களை நான் எச்சரிக்கிறேன்’’ என்றெல்லாம் சமீபத்திய இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது முழங்கித் தீர்த்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

Marriage
Marriage

சாதியைத் தாண்டி திருமணம் செய்யும் பெண்களுக்கு `ஆணவக்கொலை' என்பதை பரிசாகத் தந்துகொண்டிருக்கிறது இந்தச் சமூகம். அதேபோல மதம்மாறி திருமணம் செய்யும் பெண்களுக்கு எதிராக சட்டபூர்வமாகவே தண்டனை தருவதற்குத் தயாராகிக்கொண்டுள்ளன பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள்.

இன்னும்கூட பெண் என்பவளை மனுஷியாக அல்லாமல், குடும்பத்தின் உடைமையாகவும், ஆண்களுடைய உடமையாகவும் பார்ப்பதன் விளைவே இதுபோன்ற சட்டங்கள். `தங்களுடைய உடைமை கைவிட்டுப்போகிறதே' என்று ஈகோ பிரச்னையாக இதை மாற்றிக்கொண்டு, சட்டத்தின் துணையோடு ஆதிக்கம் செய்யத் துடிக்கின்றனர் ஆதித்யநாத்கள்!

``ஒரு பெண்ணை, மதம் மாற்றும் நோக்கத்துடன், காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சதி வேலையை ரகசிய இயக்கமாகவே செய்துவருகிறார்கள் எனும்போது, அதற்கு எதிராக வலதுசாரிகள் குரல் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?''

- வலதுசாரிகளின் இந்தக் கேள்விக்கான பதிலை, அரசாங்க அமைப்புகளே ஏற்கெனவே அறுதியிட்டுச் சொல்லிவிட்டன.

``லவ் ஜிகாத்' என்ற பெயரில், இந்துப் பெண்களைக் காதலின் பெயரால் மதமாற்றம் செய்யும் ரகசிய சதி குறித்த எந்த ஆதாரமும் இல்லை'' என்று தங்கள் விசாரணையின் மூலம் தெரிந்து கொண்டிருப்பதாகத் தேசிய புலனாய்வு முகமை, கர்நாடக குற்றப் புலனாய்வுத்துறை, உத்தரப்பிரதேச சிறப்பு விசாரணைக் குழு ஆகியவை அறிக்கையே கொடுத்துள்ளன. தேசியப் பெண்கள் ஆணையத்திடமும், `லவ் ஜிகாத்’ குறித்த எந்தத் தரவுகளும் இல்லை.

Indian Prime Minister Narendra Modi, right, speaks with Chief Minister of Uttar Pradesh state Yogi Adityanath during an election campaign rally in Meerut, India.
Indian Prime Minister Narendra Modi, right, speaks with Chief Minister of Uttar Pradesh state Yogi Adityanath during an election campaign rally in Meerut, India.
AP Photo / Altaf Qadri, File
`மனு இல்லைன்னா... அதான் சுப்பையா இருக்காரே!' - பா.ஜ.க உணர்த்துவது இதைத்தானா? #VoiceOfAval

ஆம், அரசியல் லாபத்துக்காக உருவாக்கப்படும் அவதூறுகளுக்கு ஆதாரங்களும் சாட்சிகளும் எப்படிச் சாத்தியப்படும்?

சாதி, மதத்தை முன்னிறுத்தி ஓட்டுகளை அறுவடை செய்யும் கணக்குடன் களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு, கைகொடுக்கும் இரண்டு முதன்மை விஷயங்கள்... தெய்வங்களும் பெண்களும்.

`என்னை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?’ என்று தெய்வத்தால் நேரில் வந்து கேள்வி கேட்க முடியாது என்ற உங்கள் தைரியத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆனால், பெண்ணையும் கேள்வி கேட்க இயலாதவளாகவேவா இன்னும் வைத்திருக்க நினைக்கிறீர்கள்?

தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம். குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை வழக்குகளிலும் அம்மாநிலமே `நம்பர் 1’. நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் கொலை வழக்கில், `யோகி’ ஆளும் மாநில அரசின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான `அடாவடிகள்’ காணக்கிடைக்கின்றன.

இப்படி, பெண்களின் உயிர்கள் தொடர் பலி ஆனபோதெல்லாம் எந்த அவசரமும் காட்டாத முதல்வர் யோகி, இப்போது, ``பெண்களின் கண்ணியம் காக்க, `ஆபரேஷன் சத்யா’ கொண்டுவரப்படும்" என்கிறார். பெண்களை... சுயசிந்தனையற்றவர்களாகவும், திருமணத்தில் தங்களுக்கான விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்த முடியாத பொம்மைகளாகவும் வைத்திருப்பதுதான் நீங்கள் சொல்லும் `கண்ணியம்' என்பதை நாங்கள் உணர ஆரம்பித்து வெகுநாள்களாகிறது யோகிகளே...

வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்குத்தான் பாதுகாப்பு தரப்பட வேண்டும். அன்பால் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் போதும் யோகிகளே.

உண்மையில், பெண்ணை முன்னிறுத்திச் செய்யப்படும் `ஆபரேஷன்’, `மிஷன்’ போன்ற மத அரசியல்களிலிருந்துதான் தேவைப்படுகிறது எங்களுக்குப் பாதுகாப்பு.

திரைப்பட ஹீரோக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை இங்கு அனைவரும் எக்ஸ்ட்ராவாக ஒரு ரோல் எடுத்துக்கொள்கிறார்கள். பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை வரையறுப்பதுதான் அந்த எக்ஸ்ட்ரா ரோல்.

Marriage
Marriage
Photo by Benita Elizabeth Vivin on Unsplash

இவையெல்லாம் உங்கள் வேலை இல்லை என்று இவர்களுக்கெல்லாம் யார்தான் இறுதியாக எடுத்துச் சொல்வதோ.

எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் காக்கத் துடிக்கும் பாரம்பர்யங்களும் மதங்களும் இதுவரை எங்களுக்குத் தந்த சுதந்திரம் என்ன, உரிமைகள் என்னென்ன?

உண்மையில், மதங்களின் பெயரால் எங்களைப் பின்னியிருந்த கட்டுப்பாடுகளைக் கடந்துவருவதுதான் எங்களுக்குப் பெரும் போராட்டமாகவே இருக்கிறது. சொத்துரிமை முதல் வரதட்சணையிலிருந்து விடுதலை வரை எங்களுக்கு எல்லாம் கொடுத்தது, சட்டம். அப்படி பெண்களுக்கு சிறகுகளாக இருக்க வேண்டிய சட்டத்தை, சிறகுகளை வெட்டும் கத்தியாக மாற்ற முனையும் உங்கள் `அக்கறை’க்கு நோ தேங்க்ஸ்.

இந்தியாவின் மகள்களை நிம்மதியாக இனியாவது வாழவிடுங்கள்.

- அவள்

இந்தக் கட்டுரையை Podcast-டாக கேட்க கீழே இருக்கும் பட்டனை க்ளிக் செய்யவும்.

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு