Published:Updated:

தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! #VoiceOfAval

யோகி ஆதித்யநாத்

ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.

தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! #VoiceOfAval

ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.

Published:Updated:
யோகி ஆதித்யநாத்
`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்.

தேர்தல் பிரசாரம் என்பது என்ன? தங்கள் கட்சியின் கொள்கைகளை, தங்கள் வேட்பாளர்களின் திறன்களை, தேர்தலில் ஜெயித்தால் தங்களால் செய்யக்கூடிய நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி, தங்களுக்கு ஓட்டளிக்குமாறு கேட்கும் பரப்புரை.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் கமென்ட்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றன? ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.

கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தி.மு.க-வின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அந்தக் கூட்டத்தில், `ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை அம்மா என்கிறார், மோடி எங்களுக்கு அப்பா என்கிறார். அப்படி என்றால் என்ன உறவுமுறை என்று நீங்களே பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள்' என்று பேசியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை, ஜெயலலிதா தொடங்கி, பல அரசியல்வாதிகளும் வெகுகாலமாகவே தொடர்ந்து தனிநபர் விமர்சனம் செய்து வருகிறார்கள், அதையெல்லாம் ஒவ்வொரு முறையும், உங்கள் கட்சிக்காரர்கள் முதல், ஊடகம், சமூகச் செயற்பாட்டாளர்கள் வரை அனைவரும் கண்டித்து வருகிறோம். ஆனால், ஜெயலலிதாவை அவர் இறந்து நான்கு வருடங்களுக்குப் பின்னும் நீங்கள் இத்துணை ஆணாதிக்க வன்மத்துடன் கீழ்த்தரமாகப் பேசுகிறீர்கள் எனில், உங்களுக்கும், கனிமொழியைப் பேசுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பெண் ஆளுமைகளை ஒழுக்கரீதியாக இழிவுசெய்து பேசுவதுதான் தயாநிதிக்கு அவர் கட்சி தந்த பகுத்தறிவா?

உங்கள் பிரசாரத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகளை, மத்திய அமைச்சர் பதவியில் இருந்தவர் என்கிற வகையிலும், தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் என்கிற வகையிலும் அந்த அனுபங்களோடு பகிரலாம். உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வி தந்த நீங்கள், உங்கள் கட்சியால் அரசு அமைக்க முடிந்தால், தமிழ்க் குடும்பப் பிள்ளைகளுக்கு மேம்படுத்தித் தரவல்ல கல்வி வாய்ப்புகள் பற்றிப் பேசலாம். நீங்கள் சென்று வந்த நாடுகளின் முன்னேற்றம், சந்தித்த ஆளுமைகளின் அனுபவங்களை சமூகத்துக்கு விழிப்புணர்வும் உத்வேகமும் தரும் வகையில் அரசியல் ஒப்பீட்டோடு பகிரலாம். ஆனால், `இதையெல்லாம் இந்தப் பாமர கூட்டத்துக்கு எதுக்காகச் சொல்லணும்...' என்று நினைத்து ஒதுக்கிவிட்டு, அவர்களிடம் பேச உங்களுக்கு ஆபாச கன்டன்ட்தான் தேவைப்பட்டதா தயாநிதி?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`Privileged' ஆக நீங்கள் இருந்துகொண்டு, மக்களை இன்னும் கீழ்த்தரமான ரசனைக்கு, பேச்சுக்கு, சிந்தனைக்குத் தள்ளும் வகையில் அரசியல் தலைவர்களை `அம்மா - அப்பா' என்று பேசுகிறீர்கள். இந்த `அறிவை' மக்களுக்கு ஊட்டத்தான் அரசியலுக்கு வந்தீர்களா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனீர்களா? அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பு, அயல்நாட்டில் முதலீடு என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளிடம் வரும்போது மட்டும் ஏன் இப்படி மூன்றாம் தரமாகப் பேசி அவர்கள் சிந்தனைகளை மேலும் பின்னோக்கித் தள்ளுகிறீர்கள்? இது துரோகம் இல்லையா?

பெண்கள் எத்துணை பெரிய ஆளுமையாக வந்தாலும் அவர்களை பாலியல் பொருளாக மட்டுமே சுருக்கும், இகழும் சமூக மடமையை சீர்செய்து கொண்டிருக்கிறார்கள் செயற்பாட்டாளர்கள் பலர். ஆனால், பகுத்தறிவுக் கட்சி என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் கட்சியில் இருந்துகொண்டு, ஓர் ஆணாதிக்க முட்டாளாகப் பேசியிருக்கிறீர்கள் நீங்கள். இதே `அம்மா - அப்பா' பேச்சை, நீங்கள் கலந்துகொள்ளும் ஓர் உயர்வர்க்க, உயர்மட்ட சபையில் பேசுவீர்களா? மாட்டீர்கள்தானே? எனில், எளிய மக்களிடம் பேச வரும்போது மட்டும் `செலக்ட்டிவ் முட்டாள்' ஆகும் வேடம் ஏன்?

ராதாரவி
ராதாரவி

அடுத்தது, ராதாரவி. பி.ஜே.பி-யின் பேச்சாளராக இவர் செய்யும் அரசியல் பரப்புரைகள், அநாகரிகத்தின் உச்சம். அவர் பேசும் விஷயங்களைக் குறிப்பிட்டுக் கூட பேச முடியாத அளவுக்கு, அதில் நாகரிகம் இல்லை. `கமல் முதல் கனிமொழிவரை அப்படித்தான் பேசுவேன்' என்ற அறியாமை செருக்குடன் இருப்பவரை பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், ஏற்கெனவே நயன்தாரா பற்றி கண்டனத்துக்கு உரிய வார்த்தைகளைப் பேசி, அதனால் அவர் சார்ந்திருந்த தி.மு.க கட்சியைவிட்டே நீக்கப்பட்டவர், இப்போது மீண்டும் பிரசாரத்தில் நயன்தாரா பற்றிக் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசுகிறார் என்றால், அவரிடம் அதற்குரிய நியாயம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நம் வார்த்தைகள்தான் வீண்.

ஆனால், தனக்கு வாக்குக் கேட்க ராதாரவியை அழைத்துச் செல்லும் வானதி ஶ்ரீனிவாசனிடம் கேட்க சில கேள்விகள் உள்ளன. மக்கள் நீதி மய்யம் தன்னை `துக்கடா அரசியல்வாதி' என்று விமர்சனம் செய்ததற்கு பதில் அளித்திருந்தார் வானதி. அதில், `ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியல்ல உயர்ந்து வரும்போது இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா?' என்று கோபத்துடன் பேசியிருந்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ரீதியிலான விமர்சனத்துக்கு, `நான் பெண் என்பதால்தான்...' என்கிற ரீதியில் வானதி பதில் அளித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அதே வானதி, தனக்கு ஓட்டுக் கேட்க ராதாரவியை, அவர் பேச்சின் தரம் அறிந்தும் அழைத்துச் செல்கிறார். அவர் கனிமொழி பற்றி அநாகரிகமாக, ஆபாசமாகப் பேசும்போதெல்லாம், கையசைத்தபடி வாக்கு கேட்கிறார். இதுதான் உங்களின் பெண்கள் நலனா வானதி?

வானதி, கமலை அரசியல் ரீதியாக விமர்சிக்க எத்தனையோ காரணங்கள் உள்ளன. ஆனால், `லிப் சர்வீஸ்' செய்பவர் என்று தனிநபர் தாக்குதல் செய்கிறார். பெண்களை முன்னிறுத்தும் வசைச் சொற்களை ஆண்கள் பேசுவதற்குக் கண்டனங்கள் அனுப்பிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெண் அரசியல்வாதியே, ஆண் அரசியல்வாதியின் மீது பெண்களை இணைத்துப் பேசும் அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் கண்டனத்துக்கு உரியதுதான் வானதி. `எந்தப் பெண்ணை எப்படிப் பேசினா என்னா... நான் ஜெயிச்சா போதும்' என்பது நீங்கள் கூறிக்கொள்வதுபோல பொதுநலம் அல்ல, சுயநலம். கனிமொழி உள்ளிட்ட மற்ற பெண்களை, ராதா ரவியை ஆபாசமாகப் பேசவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் வானதிக்குக் கண்டனங்கள்.

ராதாரவி - கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்
ராதாரவி - கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சமீபத்தில் கேரளத்துக்கு வந்திருந்தார். அப்போது, கொச்சி, தெரசா மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாற்றினார். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, தான் கற்ற தற்காப்புக் கலையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ் தனது தேர்தல் பிரசாரத்தில், ராகுல் காந்தியின் கல்லூரி வருகையை, ``அவர் ஏன் எப்போதும் பெண்கள் கல்லூரிக்குச் சென்றே பேசுகிறார்? தற்காப்புக் கலை கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி, குனியுங்கள், வளையுங்கள் என்றபடி பெண்கள் அருகே அவர் செல்கிறார். அப்படி செல்லக் கூடாது. அவருடன் பேசும்போது பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர்" என்று பேசியுள்ளது, அடுத்த அவமானம். ராகுலுக்கோ மாணவிகளுக்கோ அல்ல... இது ஜாய்ஸுக்குத்தான் அவமானம்.

இன்றும்கூட, `அப்பா/கணவர்/மகன் சொல்ற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்' என்று சொல்லும் பெண்களே இந்தியாவில் அதிகம். இந்நிலையில், பெண்கள் கல்லூரிக்கு ஒரு அரசியல் ஆளுமை செல்வதும், பெண்கள் மத்தியில் அரசியல் எடுத்துச் செல்லப்படுவதும் ஓர் ஆரோக்கியமான நகர்வு. ஆனால், ஒரு தேசியக் கட்சியின் தலைவர் - இளம் பெண்களின் சமூக உரையாடல் என்ற இந்தக் காட்சியைக்கூட, ஓர் ஆண் - பல பெண்கள் என்பதாகவே யோசிக்கும் ஜாய்ஸ், இந்தப் பழைய மூளையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருப்பதே சமூகத்துக்கு நல்லது. உங்களால் செய்யப்படும் பிரசாரமெல்லாம் உண்மையில் மக்களின் சிந்தனைகளில் விஷத்தையே கலக்கும் ஜாய்ஸ்.

பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் நலன்... இதுதான் இன்று இந்தியாவில் பெரும்பாலான கட்சிகளின் மெயின் கன்டன்ட். என்றாலும், தமிழகத்துக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்துக்கு வந்த உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பெண்களின் பாதுகாப்பை பற்றிப் பேசுவது எத்துணை முரண்?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2019 அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக (59,853 வழக்குகள்) உத்தரப் பிரதேசத்தைக் குறிப்பிட்டது. குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் (7,444) அதிகமாகப் பதியப்பட்ட மாநிலமும் அதுவே.

இப்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தேசத்தையே உலுக்கும் வகையில் வன்முறை நிரப்பப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பாலான வன்முறைகள் சாதிய ஒடுக்குமுறைகளின் மேல் நாற்காலி போட்டு அமர்ந்து நடத்தப்படுகின்றன. மேல்சாதியைச் சேர்ந்த குற்றவாளிகள் அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இது, பெண்களின் உடலையும் உயிரையும் அந்த மண்ணில் இன்னும் துச்சமாக்குகிறது. பெண்களை, ஓட்டுகளை அறுவடை செய்யும் மதக் கருவியாகப் பயன்படுத்தி, `கட்டாய மதமாற்றச் சட்டம்' என்ற பெயரில் காதல் திருமணங்களைத் தடுக்கும் சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

`தமிழகப் பெண்களைக் காப்பாற்றவே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி' என்று நீங்கள் கோயம்புத்தூரில் பிரசாரம் செய்துகொண்டிருந்த அதே வேளையில்கூட, உங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்திருக்கிறது ஆதித்யநாத். மீரட் அருகேயுள்ள கப்சார் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி டியூஷன் சென்று திரும்பியபோது 4 கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த லட்சணத்தில்தான், `தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு கேலிக் கூத்தாகிவிடும்' என்று தமிழகத்துக்கு வந்து நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உண்மையில் இந்தியாவே கவலைப்படுவது, உத்தரப் பிரதேச சகோதரிகளின் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட நிலையை நினைத்துதான் ஆதித்யநாத். `ஆடு நனையுதேனு ஓநாய் கண்ணீர் விட்டுச்சாம்' என்பார்கள். தமிழகத்தில் உங்கள் பிரசாரத்தின் தன்மை அப்படியானதே.

அரசியல் பரப்புரை களத்தில் அறிவு, மொழிச்செறிவு, ஆளுமை என எதுவும் இல்லாத, கூடியிருக்கும் மக்களைக் கவரும்படி பேசுவதில் தன் மீது தனக்கே நம்பிக்கையில்லாத பலவீனப் பேச்சாளருக்கே, ஆண்களுடன் பெண்களை இணைத்து இழிவாகப் பேசும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. தயாநிதி, ராதாரவி, வானதி, ஜாய்ஸ், ஆதித்யநாத்... உங்கள் வக்கிரங்களிலிருந்து மக்களுக்குத் தேவை சமூக இடைவெளி.

- அவள்

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!