18 வயது நிரம்பாவிட்டாலும் இஸ்லாமிய பெண் திருமணம் செய்யலாம்... நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு சரியா?

பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள ஒரு தீர்ப்பு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்த தீர்ப்பு சொல்வது என்ன?
18 வயது நிரம்பாத போதிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் (சிறுமிகள்) தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்துக்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டின்ஷா ஃபர்டுன்ஜி முல்லா என்பவர் குர்ஆனை தழுவி எழுதிய `முகமதிய சட்டத்தின் கொள்கைகள்' என்னும் புத்தகத்தின் 195-வது பிரிவில் ``இஸ்லாமிய பெண் பூப்பெய்தியவுடன் தான் விருப்பப்படும் நபரைத் திருமணம் செய்துகொள்ள தகுதி உடையவளாகிறாள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கிலும் பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது அல்கா சரின் என்னும் பெண் நீதிபதி என்பது வருந்தத்தக்க விஷயம்.

வழக்கு விவரம்:
36 வயதான இஸ்லாமிய நபர் 17 வயதேயான சிறுமியைக் கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். தம்பதியின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் இஸ்லாமிய விதிகளின்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய விதிப்படி, ``பருவமடைதலே ஒரு பெண் பெரியவர் (Adult) ஆகிவிட்டதற்கான சான்று. 15 வயது முதலே பெரியவராகக் கருதப்பட வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பருவமடைந்த இருவர் ஒருவரையொருவர் விரும்பும்பட்சத்தில் பெற்றோரின் விருப்பமும் அனுமதியும் இன்றி திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளது" எனத் தம்பதியினர் தரப்பில் வாதாடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ``முஸ்லிம் சிறுமி முஸ்லிம் திருமண சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்துள்ளார். பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிடிலும் திருமணம் அவர்களின் அடிப்படை தனிநபர் உரிமை" எனக்கூறி, அந்தத் திருமணம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
சர்ச்சையான இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் அஜீதா உடன் பேசினோம்,
``குழந்தைகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச அளவிான குழந்தைகள் உரிமை மாநாட்டில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அதன் முதல் விதி, `18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளே.' இவ்விதியை மீறி எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வரவோ தீர்ப்பளிக்கவோ முடியாது.

முற்காலத்தில் 15 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டாலும் குறிப்பிட்ட பெற்றோர்தான் காப்பாளராக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. மேலும் 18 வயதுக்குக் கீழ் இருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் வன்கொடுமை செய்தவர் கணவராக இருக்கும் பட்சத்தில் அவருக்குத் தண்டனை கிடையாது. இச்சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தையை யார் திருமணம் செய்தாலும் அவர் பாலியல் குற்றவாளியாகத்தான் கருதப்படுவார். இந்த அடிப்படை சட்டத்தைத் தவிர்த்துவிட்டு வேறெந்தத் தீர்ப்பும் வழங்க முடியாது.
சில நாள்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதே போல ஒரு தவறான தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் திருத்தியது. தீர்ப்பளித்த பெண் நீதிபதி தற்போதும் நிரந்தர உயர் நீதிமன்ற நீதிபதியாக இல்லாத நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. நீதிபதியான பின்னும் சட்டத்தையும் அதன் விழுமியங்கள் விளக்கங்களைக்கூட புரிந்துகொள்ளாத நிலையில் நீதிபதிகள் இருப்பது வருத்தத்துக்குரியது.
யுனிசெஃப் அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் நடைபெற்ற திருமணங்களில் 43 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கு நடக்கிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றமே குற்றத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பது இந்திய பெண் குழந்தைகளின் அவல நிலையின் நேரடி வெளிப்பாடாக உள்ளது. கள யதார்த்தம் என்னவென்றால் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

எனினும் உயர் நீதிமன்றம் குற்றத்துக்கு நியாயம்கூறும் நிலையில் செயல்படுவது அடுத்தடுத்து குற்றங்கள் வெளிப்படையாக நிகழவும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். இன்றளவும் நம் கிராமப்புறங்களில் 15, 16 வயது சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்று வரும் நிலையில் அதைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் தடுக்கவும் இதுவரை தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மத கொள்கை அடிப்படையில் தீர்ப்பு!
இஸ்லாமோ, வேறெந்த மதமோ... குழந்தைத் திருமண தடை சட்டம், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. 1928-ம் ஆண்டு முதல் இன்று வரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டமாக பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது. இச்சட்டத்தின்படி, 18 வயது நிரம்பாத குழந்தைகள் அனைவரும் குழந்தைகளே. இஸ்லாமியர்களுக்கும் இதில் விதிவிலக்கில்லை எனத் தமிழக நீதிமன்றத்தில் முன்னரே தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தத் தீர்ப்புகளை ஆராயாமல் தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிச்சயம் மாற்றியமைக்கப்படும். அவ்வாறு மாற்றியமைக்கப்படும்போது வருங்காலங்களில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சரியான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்" எனக் கூறுகிறார் அஜீதா.