Election bannerElection banner
Published:Updated:

நாட்டிலேயே முதன்முறையாக `ஜெண்டர் பட்ஜெட்'... பெண்களுக்கு முக்கியத்துவம்... அசத்தும் ஆந்திரா!

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy ( Twitter/@YSRCPDMO )

2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது, பிரத்யேக `ஜெண்டர் பட்ஜெட்(Gender Budget)' ஆக அது தாக்கல் செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரத்யேக ‘ஜெண்டர் பட்ஜெட் (GENDER BUDGET)' ஆக அது தாக்கல் செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதற்கென்று பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டு அவை பெண்களுக்கான பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அது நடந்தால், நாட்டிலேயே ஜெண்டர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் மாநிலமாக ஆந்திர பிரதேசம் இருக்கும்.

பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவது குறித்த முக்கியமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்து அறிவித்திருக்கும் இந்த ஜெண்டர் பட்ஜெட் குறித்த தகவல்கள் ஆந்திரப் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

School Students
School Students
Photo: Vikatan / Balasubramanian.C

பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் பாதுகாப்புடன் பணிபுரிய தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கூறும் ஜெகன் மோகன் ரெட்டி, இதற்கு முன்னோட்டமாக அரசின் தலைமைச் செயலகத்தில் இதுபோன்ற கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்று தன்னுடைய அலுவலகத்தில் நடந்த பெண்கள் தினக் கொண்டாட்டத்தில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான ஹெல்ப்பிங் டெஸ்க்குகள் (Women Helping Desk) அமைக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக `ஸ்வேச்சா புரோகிராம்’ (Swechha programme) என்கிற திட்டத்தின் மூலம் பதின்பருவப் பிள்ளைகளிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவரவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இவை தவிர, பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 900 டிஷா பேட்ரோல் வாகனங்களையும் (Disha patrol vehicles, குற்றம் நடக்கும் இடங்களுக்கு விரைய 18 க்ரைம் ஸீன் மேனேஜ்மெண்ட் வாகனங்களையும் (Disha crime scene management vehicles) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy

'மனித வாழ்க்கையில் பெண்களின் பங்கு மகத்தானது என்று பேசிக்கொண்டே மட்டும்தான் இருக்கிறோம். ஆனால், அவர்களுக்கான உரிமைகளும் வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஆந்திராவில் 60% பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாறத் தேவையான நடவடிக்கைகளை எமது அரசு எடுத்து வருகிறது. வருங்காலங்களில் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகத் தொடரும்' என்றும் ஆந்திர முதல்வர் அறிவித்திருக்கிறார்.

எடுக்கவிருக்கும் ஜெண்டர் பட்ஜெட் நடவடிக்கைகளால் ஆந்திர மாநிலப் பெண்களின் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, தேசத்துக்கு அது முன்மாதிரியாக அமையட்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு