Published:Updated:

`ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அப்பா, அண்ணனைக் கொன்னாங்க... இப்போ நான் வந்திருக்கேன்!' - அன்னலட்சுமி

வாக்கு சேகரிக்கும் அன்னலட்சுமி
வாக்கு சேகரிக்கும் அன்னலட்சுமி ( நா.ராஜமுருகன் )

``இனி, என் குடும்பத்துல நாங்க இழக்குறதுக்கு ஒண்ணுமில்ல. எங்ககிட்ட மக்களுக்குக் கொடுக்குறதுக்கும் ஒண்ணுமில்ல. ஊருக்காக உசிரை விட்ட வீரமலையின் மக நானும், உங்க பிரச்னைக்காக முன்னால நிப்பேன்ங்கிற நம்பிக்கையைத்தான் இந்த மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன்" என்கிறார் அன்னலட்சுமி.

``மக்களுக்குப் பயன் தர வேண்டிய 200 ஏக்கர் ஏரியைத் தனிநபர்கள் ஆக்கிரமிச்சு, அதுல விவசாயம் பண்ணினாங்க. அந்த ஏரியை மீட்டு மக்களுக்கே வழங்க, எங்கப்பா கோர்ட்டுல கேஸ் போட்டார். அதனால, ஏரியை ஆக்கிரமிச்சவங்க, இரக்கமே இல்லாம என் அப்பாவையும் அண்ணனையும் வெட்டிக் கொன்னாங்க. குடும்பத்துல ரெண்டு தலைமகன்களை இழந்துட்டோம். இனி இழக்க எதுவுமில்ல. அதனால, என் வாழ்கையையும் மக்களுக்காகவே செலவழிக்க, தேர்தல் களத்துக்கு வந்திருக்கேன்" என்று உறுதியான குரலில் பேசுகிறார் அன்னலட்சுமி.

வாக்கு சேகரிக்கும் அன்னலட்சுமி
வாக்கு சேகரிக்கும் அன்னலட்சுமி
நா.ராஜமுருகன்

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவரின் தந்தை வீரமலை, அருகில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலைப்பட்டி ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அதற்காக, ஆக்கிரமிப்பாளர்களால் வீரமலையும் அவரின் மகன் நல்லதம்பியும், 29.07.2019 அன்று துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடந்து வருகிறது.

குடும்பத்தின் இரண்டு ஆண்களையும் இழந்ததால், வீரமலை குடும்பம் அல்லாடி வருகிறது. அவர்கள் வீட்டில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், பொது நலனுக்கு குரல் கொடுத்ததற்காகக் குடும்பத்தின் ஆண் மகன்களை இழந்த பிறகும், பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறார் வீரமலையின் மகள் அன்னலட்சுமி. மக்கள் பாதை இயக்கம் சார்பில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் கால்பந்து சின்னத்தில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதலைப்பட்டி ஏரி
முதலைப்பட்டி ஏரி
நா.ராஜமுருகன்

தீவிர பிரசாரத்தில் இருந்த அன்னலட்சுமிடம், `வாழ்த்துகள்' சொல்லிப் பேசினோம்.

``எங்கப்பாவும் சகோதரனும் குடும்பத்துக்காக பெருசா உழைக்கல. ஆனா, பொது விஷயத்துல ரெண்டு பேரும் தீவிரமா ஈடுபடுவாங்க. 38 வயசாகியும் எனக்கு இன்னும் திருமணம் ஆகல. என் தங்கை சரஸ்வதிக்கும் திருமணம் ஆகல. மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில இருக்கா. என் சகோதரர் நல்லதம்பிக்கு திருமணம் ஆகி, தமிழரசிங்கிற மனைவியும், பொன்னர், இனியாங்கிற குழந்தைகளும் இருக்காங்க.

ஏரிக்காக கோர்ட்டுல வழக்குப் போட்ட எங்கப்பாவை, பலதடவை மிரட்டினாங்க. அவர் அதுக்கெல்லாம் அசரலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால, படுபாவிங்க பட்டப்பகல்ல, நட்ட நடுரோட்டுல ரெண்டு பேரையும் வெட்டிக் கொன்னாங்க. எங்க குடும்பமே அதன் பிறகு நொடிஞ்சு போனது. வருமானத்துக்கு வழியில்ல. அரசு, `வீரமலை குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை; நல்லதம்பி பிள்ளைகள படிக்க வைப்போம்'னு எல்லாம் சொன்னுச்சு. ஆனா, அந்த வாக்குறுதியெல்லாம் காத்தோட காத்தா கரைஞ்சு போச்சு. நிர்க்கதியா நின்னோம். எல்லாத்தையும்விட, எங்க எதிர்காலத்தின் முன்னால பெரிய கறுப்பு படுதா விரிச்சாப்புல இருந்துச்சு.

அன்னலட்சுமி
அன்னலட்சுமி
நா.ராஜமுருகன்
காங்கிரஸ்: `துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது!’ - சொந்தக் கட்சியை விமர்சிக்கும் ஜோதிமணி

கொலை வழக்கு, கரூர் கோர்ட்டுல நடக்குது. எங்கப்பாவை கொன்னவங்களால எங்களுக்கு ஆபத்து வரும்னு எங்க வீட்டுல 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்காங்க. அந்த வகையிலாவது, அரசுக்கு எங்க மேல இரக்கம் இருக்குதேனு மனசை தேத்திக்கிட்டோம். நிராதரவா நின்ன எங்களுக்கு, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை தலைமையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவங்கதான் உதவுனாங்க. இப்போ, அந்த அமைப்பின் தலைவரா நாகல்சாமி இருக்கார்.

வழக்கை நடத்தவே திராணியில்லாம விழிபிதுங்கி நின்னோம். அதனால, வழக்கை நடத்த மக்கள் பாதை முன்வந்துச்சு. எங்க குடும்பக் கஷ்டத்துக்கு அவ்வப்போது நிதியுதவி அளிப்பதும் அவங்கதான். அதோடு, எனக்கு தைரியம் கொடுத்து, `இனி நீங்கதான் உங்க குடும்பத்துக்குத் தலைவி'னு தைரியம் கொடுத்தாங்க. எங்களுக்கு இருக்கும் மூணு ஏக்கர் நிலத்துல, என்னை இயற்கை விவசாயம் செய்ய வச்சாங்க. பொன்னர், இனியா படிப்புக்கும் உதவுனாங்க.

இயற்கை விவசாயம் செய்யும் அன்னலட்சுமி
இயற்கை விவசாயம் செய்யும் அன்னலட்சுமி
நா.ராஜமுருகன்

இந்த நிலையிலதான், `பொது விஷயத்துல ஈடுபட்ட உங்க அப்பாவையும் அண்ணனையும் கொன்னு போட்டுட்டாங்க. ஆனா, உங்களுக்காக இந்த அரசு எதையும் செய்யல. அதனால, மக்கள் அங்கீரமாச்சும் உங்களுக்குக் கிடைக்கணும்'னு சொல்லி, மக்கள் பாதை இயக்கத்தின் நீதி திட்ட மாநிலப் பொறுப்பாளர் தங்கவேல் சாரும், மாவட்டப் பொறுப்பாளர் அன்பழகனும் என்னைத் தேர்தலில் நிக்கச் சொன்னாங்க. ஊரைவிட்டு தாண்டாத எனக்கு, தேர்தல்ல போட்டியிடும் தகுதி இருக்கானு முதல்ல தயங்கினேன். ஆனா என் அம்மா, `உன்னால முடியும் கண்ணு, நீ வீரமலையின் ரத்தம்'னு தெம்பு தைரியம் கொடுத்தாங்க.

அதனால, துணிஞ்சு களத்துல இறங்கிட்டேன். பிரசாரத்தையும் தொடங்கிட்டோம். `ஊருக்காகப் பாடுபட போய் ரெண்டு உசுருகளை இழந்த குடும்பம் உன்னுது. உன்னமாதிரி ஆளு எம்.எல்.ஏ-வாக வந்தாதான், எங்களுக்கு நல்லது'னு சொல்லி, தொகுதி மக்கள் வரவேற்குறாங்க. பெரிய நம்பிக்கை வந்திருக்கு. ரெண்டு வருஷமா மனதளவுல நொறுங்கிப் போயிருந்தேன். இப்போ, புது பாதை, புதிய செயல்னு புது உத்வேகம் வந்திருக்கு. மனசுக்கு றெக்கை முளைச்சிருக்கு.

வீரமலை (அன்னலட்சுமி தந்தை)
வீரமலை (அன்னலட்சுமி தந்தை)
நா.ராஜமுருகன்

என்னை இந்த மக்கள் எம்.எல்.வாக்கினால், பொது மக்களுக்காக 365 நாளும் உழைப்பேன். சமூக அவலங்களுக்கு எதிராக சமரசமில்லாம போராடுவேன். தொகுதியில உள்ள நீர்நிலைகள்ல செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை, நானே முன்னின்று அகற்ற வைப்பேன். தொகுதிக்கு முன்மாதிரி திட்டங்களைக் கொண்டு வருவேன். சுழற்சி முறையில மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, தொகுதி சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்வேன்.

எம்.எல்.ஏ-வுக்கு சம்பளம் மாதம் ரூ. 1,05,000னு சொல்றாங்க. அப்படிப் பார்த்தால், 5 வருஷத்துல ரூ. 63,00,000 கிடைக்கும். அதுல, ரூ. 50,00,000 தொகையை மக்களுக்கே செலவு பண்ணுவேன். நான் தேர்தல்ல நிற்பதைப் பார்த்த பலரும், `இப்படி பொதுப் பிரச்னைக்கு போய்தான், உங்க குடும்பத்துல ரெண்டு உசிருங்க போயிட்டு. மறுபடியும் இது தேவையா?'னு கேட்குறாங்க.

தாய், சகோதரியுடன் அன்னலட்சுமி
தாய், சகோதரியுடன் அன்னலட்சுமி
நா.ராஜமுருகன்

அவங்களுக்கெல்லாம் நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான். இனி, என் குடும்பத்துல நாங்க இழக்குறதுக்கு ஒண்ணுமில்ல. எங்ககிட்ட மக்களுக்குக் கொடுக்குறதுக்கும் ஒண்ணுமில்ல. ஊருக்காக உசிரை விட்ட வீரமலையின் மக நானும், உங்க பிரச்னைக்காக முன்னால நிப்பேன்ங்கிற நம்பிக்கையைத்தான் இந்த மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன். அதேபோல, வெற்றியோ, தோல்வியோ இந்தத் தேர்தல் முடிவு எதுவானாலும் என்னைப் பாதிக்காது. தொடர்ந்து, மக்களுக்காக இயங்கிக்கிட்டே இருப்பேன். நான் மக்களுக்காக உழைக்கிறதைப் பார்க்குற என் அப்பா, அண்ணன் ஆத்மாக்கள் சாந்தியடையும்னு நம்புறேன்" என்று உருக்கமாகக் கூறி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு