Published:Updated:

`கனவுகளைத் தொலைக்க விரும்பாமல் துணிந்து போராடினோம்!' - முதல் பழங்குடியின பெண் விமானி அனுப்பிரியா

அனுப்பிரியா
அனுப்பிரியா

நக்சலைட்களுக்குப் பயந்து பெண்கள் தங்களை வெளியே வந்து அடையாளப்படுத்திக்கொள்ளத் தயங்கும் மால்கன்கிரி கிராமத்தில், தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற அனுப்பிரியாவின் கனவு பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒடிசா என்றாலே பழங்குடியினரின் மாநிலம், கல்வியறிவு குறைந்த மக்கள் வாழும் மாநிலம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப் பொய்த்துப் போக வைத்திருக்கிறார் ஒரு பெண். சூரிய ஒளியே நுழையாத அடர்ந்த வனப்பரப்பில் பிறந்த அனுப்பிரியா லக்ரா என்ற அந்தப் பெண், இந்தியாவின் முதல் பழங்குடி பெண் விமானி என்ற தகுதியைப் பெற்றிருக்கிறார்.

Flight
Flight

ஒடிசா மாநிலம் மால்கன்கிரியைச் சார்ந்த மரினியஸ் என்ற காவல் அதிகாரியின் மகள் அனுப்பிரியா. நக்சலைட் தாக்குதல்கள் அதிகம் உள்ள இந்தக் கிராமத்தில் தொடக்கக் கல்வி பயின்ற அனுப்பிரியா, சிறுவயதில் இருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவர்.

Vikatan

நக்சலைட்களுக்குப் பயந்து தங்களை வெளியே வந்து அடையாளப்படுத்திக்கொள்ளத் தயங்கும் மால்கன்கிரி பெண்கள் மத்தியில், ஒரு விமானியாக வேண்டும் என்ற அனுப்பிரியாவின் கனவு விமர்சனத்துக்குள்ளானது. அவரின் தாய் யாஸ்மின், `பெண் குழந்தைக்கு விமான பயணமெல்லாம் வேண்டாம்' என்று சொன்னபோதும் தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்தார் அனுப்பிரியா.

`கனவுகளைத் தொலைக்க விரும்பாமல் துணிந்து போராடினோம்!' - முதல் பழங்குடியின பெண் விமானி அனுப்பிரியா
face book

21 வயதில் பொறியியல் பட்டம் முடித்தவர், அரசின் விமான பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஐந்து வருடப் பயிற்சிக்குப்பின் இந்த மாத இறுதியில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்க இருக்கிறார். இதன்மூலம் `இந்தியாவின் பழங்குடி சமூக முதல் பெண் விமானி' என்ற பெருமையைப் பெறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகளின் சாதனை குறித்து அவரின் தாயார் யாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், " என் மகளைப் பொருளாதார சிக்கல்களுக்கு இடையில்தான் படிக்க வைத்தோம். ஆனால், அவள் அடைந்துள்ள வெற்றி என்னைப் பெருமைப்பட வைத்துள்ளது. அவள் மற்ற பெண்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாகத் திகழ்வாள்" என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

பைலட்டாகத் தேர்வானது குறித்து ஊடகங்களிடம் பேசிய அனுப்பிரியா, " தொடக்கத்தில் எங்களுடைய மாநிலத்தில் நக்சலைட் பாதிப்புகள் இருந்தன. அவர்களுக்குப் பயந்து நிறைய பேர் தங்களுடைய கனவுகளையே தொலைச்சு இருக்காங்க. இதற்கான மாற்றத்தை நோக்கி எல்லோரும் பயணிக்க ஆரம்பிச்சோம். நக்சலைட்டுகளுக்கு பயந்து எங்களோட கனவுகளை ஏன் தொலைக்கணும்னு துணிஞ்சு போராட ஆரம்பிச்சோம். அதன் ஒரு பகுதி என்னுடைய வெற்றியும்" எனக் கூறியிருக்கிறார்.

நவீன் பட்நாயக் பாராட்டு:

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும், தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அனுப்பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு