Published:Updated:

``செங்கொடியை நினைச்சு அறிவு ரொம்ப வருத்தப்பட்டான்!" அற்புதம்மாள் #SenkodiMemories

Senkodi
Senkodi

செங்கொடியின் எட்டாம் ஆண்டு நினைவு தினக் கட்டுரை.

2011 செப்டம்பர் 9

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை இந்திய ஜனாதிபதி தள்ளுபடி செய்ய, இந்த நாளில்தான் மூவருக்கும் தூக்கு எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தூக்கிலிடுவதற்கான நடைமுறைகளைப் பற்றிய செய்திகள் நாள்தோறும் வெளியாகிக்கொண்டிருந்தன. தமிழகத்தின் பல இடங்களில் தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. சென்னை கோயம்பேடு அருகில் தனியார் கட்டடத்தில் வழக்கறிஞர்கள் கயல்விழி, வடிவம்பாள், சுஜாதா ஆகியோர் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பலரின் கவனத்துக்குச் சென்றது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் களத்தில் இறங்கின. காஞ்சிபுரம் மக்கள் மன்றமும் அவற்றில் ஒன்று. அதில் தீவிரமாக இயங்கியவர்தான் செங்கொடி. அதே பகுதியிலுள்ள ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமனின் மகள். சிறுவயது முதலே சமூகச் சிந்தனையோடு வளர்ந்த செங்கொடி, மக்கள் மன்றம் அமைப்புக்குள் வந்ததும் போராட்டங்களிலும் முன்னிலையில் நிற்பவராக மாறினார்.

Senkodi
Senkodi

இருளர் பழங்குடி மக்களின் பிரச்னைகளுக்காகவும் இலங்கையில் தமிழர்கள் குண்டுகளால் கொல்லப்பட்டபோதும் அவற்றுக்கு எதிராக வலுவாகத் தம் குரலைக் கொடுத்தவர். மிக நன்றாகப் பாடக்கூடியவர்; மிகச் சிறப்பாகப் பறை இசைக்கக்கூடியவர். மக்கள் மன்ற நிகழ்ச்சிகளில் செங்கொடியின் பறையாட்டம் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுவிதமாக இருக்கும். அடிப்படையில் கலை மனதை ஏந்தி வாழ்ந்தவர் செங்கொடி. எதுவொன்றையும் உணர்வுபூர்வமாக அணுகும் கலைஞர்களின் குணம் செங்கொடியுடையது என்பதால் அப்படியொரு முடிவெடுத்தார் என்று சிலர் சொல்வர்.

"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்."
இப்படிக்கு, தோழர் செங்கொடி
Senkodi's letter
Senkodi's letter

2011 ஆகஸ்ட் 28

மூவர் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதை எப்படியேனும் நிறுத்தியாக வேண்டும் என்ற உணர்வின் உச்சத்தில் இருந்த செங்கொடி, மாலை 6 மணியளவில் வட்டாட்சியர் அலுவலத்துக்கு வந்தார். தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, பற்ற வைத்துக்கொண்டார். கடும் பாதிப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிர் பிரிந்தது. அவரின் உயிரிழிப்பு தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, 2009-ம் ஆண்டில், இலங்கையில் தமிழர்கள் மீது கடும் யுத்தம் தொடுக்கப்பட்டு, ஏராளமானோர் கொல்லப்பட்டதை எதிர்த்து, முத்துக்குமார் எனும் இளைஞர் அதே ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சென்னை, சாஸ்திரி பவன் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அது தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்களை ஒன்றிணைத்துப் போராட வைத்தது. அதேபோல தனது உயிர்த்தியாகமும் அவ்வாறு செய்யக்கூடும் என்று செங்கொடி எண்ணியிருந்தார். அதன் வெளிப்பாடுதான் முத்துக்குமார் போலவே, ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், "தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று எழுதியிருந்தார்.

செங்கொடியின் எண்ணப்படி மூவர் தூக்குத்தண்டனைக்கு எதிரான குரல் வலுவடைந்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு மாறியது. அதனால், மூவரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும் இன்று வரை சிறையில்தான் இருக்கின்றனர்.

Muthukumar, Senkodi
Muthukumar, Senkodi

இன்று செங்கொடி தன் உயிரை மாய்த்துக்கொண்ட எட்டாம் ஆண்டு நினைவு தினம். அற்புதம்மாள் வீட்டின் பெயரே செங்கொடி வீடுதான். செங்கொடியின் நினைவுகளை, பேரறிவாளனின் தாய், அற்புதம்மாள் பகிர்ந்துகொள்கிறார்.

"இன்னிக்கு காலையிலிருந்தே செங்கொடியின் ஞாபகமாவே இருக்குப்பா. இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு யாருமே எதிர்பார்க்கல. தூக்குத் தண்டனைக்கு எதிரான நிகழ்ச்சிகள்ல நான் கலந்துக்கும்போது பறையடிச்சி, ஆடிட்டு என் பக்கத்துல வந்து உட்கார்ந்துப்பா. அது அப்படியே இப்பக்கூட என் கண்ணுக்குள்ளேயே இருக்கு" என்றவர் சில நொடிகள் மெளனித்து, பின் தொடர்கிறார்.

 Arputham Ammal
Arputham Ammal

"அன்னிக்கு, மக்கள் மன்றத்திலேருந்து சென்னையில நடந்த பட்டினிப் போராட்டத்துக்குக் கிளம்பினாங்க. செங்கொடி மட்டும் வரலன்னு சொல்லிட்டாளாம். இவங்க எல்லாம் வந்தபிறகுதான் தன்னையே தியாகம் பண்றதுக்குப் போயிருக்கா. அந்தச் செய்தியயைக் கேட்டு பதறிட்டேன். என்ன நடக்குதுன்னே ஒரு நிமிஷம் புரியல. மனசுக்குள்ள எவ்வளவு உணர்ச்சி இருந்தா இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாள். கிண்டியிலேருந்து வேலூருக்கு இரு சக்கர வாகனப் பேரணியில செங்கொடியும் கலந்துகிட்டாளாம். ஆனா, அறிவப் பார்க்க அனுமதி கிடைக்கல. 'என்னை மட்டும் செங்கொடி பார்த்திருந்தா, தன்னையே மாய்ச்சிக்கிற முடிவு எடுக்க விடாம செஞ்சிருப்பேன்'னு அறிவு அடிக்கடி சொல்லுவான். செங்கொடியைப் பத்தி எப்பப் பேசினாலும் ரொம்ப வருத்தப்படுவான். 'எங்களுக்காக உயிரையே கொடுத்துடுச்சே'னு கலங்குவான்.

செங்கொடி நம்மள விட்டுப்போய் எட்டு வருஷமாச்சு. ஆனா, அவ எதுக்காக உயிரைத் தியாகம் செய்தாளோ அது இன்னும் நிறைவேறல. ஆமாம்ப்பா! மூன்று பேரும் விடுதலையாகணும்னு ஆசைப்பட்டுதான் அந்த முடிவு எடுத்தா. அதுக்குதான் இன்னும் வழி பொறக்கல.
அற்புதம்மாள்
Senkodi
Senkodi

நானும் ஏறாத ஆபீஸ் இல்ல, பார்க்காத ஆளுங்க இல்ல. இன்னும் விடுதலைக்கான வாசல் திறக்கவே இல்ல. இந்தக் கொலை தொடர்பா இவங்க வாக்குமூலத்தைப் பதிவு செஞ்ச அதிகாரியே மாறுபட்ட கருத்துகளைச் சொல்லிட்டாரு. அப்பவே இவங்கள வெளியே விடறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கணும். அதுவும். இல்ல. எப்பதான் இதுக்கு ஒரு முடிவு வருமோ தெரியல" என்று உடைந்த குரலில் பேசுகிறார் அற்புதம்மாள்.

அடுத்த கட்டுரைக்கு