Published:Updated:

`புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தேடி ஆய்வு'- களமிறங்கி சாதித்த பத்மபாரதி

கரசூர் பத்மபாரதி

தமிழ் விக்கி தூரன் விருதை முதல் நபராகப் பெறும் இன வரைவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி தன் ஆய்வுப்பணிகள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்.

`புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தேடி ஆய்வு'- களமிறங்கி சாதித்த பத்மபாரதி

தமிழ் விக்கி தூரன் விருதை முதல் நபராகப் பெறும் இன வரைவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி தன் ஆய்வுப்பணிகள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்.

Published:Updated:
கரசூர் பத்மபாரதி
பொதுச்சமூகத்தினரால் புறக்கணிப்புக்குள்ளாகும் நாடோடி பழங்குடியினர் மற்றும் திருநங்கையர் குறித்து இன வரைவியல் நோக்கில் ஆய்வு மேற்கொண்டு நூலாக வெளியிட்டுள்ளார் புதுவை மாநிலம் கரசூரைச் சேர்ந்த பத்மபாரதி.

பெண்களால் கள ஆய்வு மேற்கொள்வது சாத்தியமில்லை என்கிற கருத்து நிலவி வந்த 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இந்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். `நரிக்குறவர் இன வரைவியல்' மற்றும் `திருநங்கையர் சமூக வரைவியல்' ஆகிய இரு ஆய்வு நூல்களும் தமிழில் வெளியான மிக முக்கிய ஆய்வுகளாகக் கருதப்படுகின்றன. இவரது பணிக்காக தமிழ் விக்கி இணையதளத்தின் சார்பாக வழங்கப்படவிருக்கிற தூரன் விருதினை முதல் நபராகப் பெறுகிறார். இந்த ஆய்வுப்பணிகள் சார்ந்து பத்மபாரதியிடம் பேசினோம்...

கரசூர் பத்மபாரதி
கரசூர் பத்மபாரதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"புதுவைப் பல்கலைக்கழக்கத்தில் ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் படித்தேன். அதன் இறுதியாண்டில் ஆய்வொன்றினை சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் இலக்கியங்களைத் திறனாய்வு செய்து சமர்ப்பிப்பார்கள். எனக்குக் கள ஆய்வில்தான் ஈடுபாடு இருந்தது. நாட்டுப்புறவியல் தொடர்பாகக் கள ஆய்வு செய்யலாம் என நினைத்த போதுதான் நாடோடிப் பழங்குடியினர் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். பேருந்து நிலையங்களில் அவர்களைப் பார்த்திருக்கிறேன். நாடோடிகளான அவர்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையில் ஏன் இருக்கிறார்கள் என்கிற கேள்வி இயல்பாகவே எனக்குள் இருந்தது. எங்கள் பேராசிரியர் அறிவுநம்பி ஐயாவிடம் கேட்டபோது ’நீ பொண்ணு, உன்னால இந்த ஆய்வை ஆறு மாசத்துல பண்ண முடியாது. தமிழ் முதுநிலை ஆய்வுங்கிறதால சாதாரணமா எதையாவது பண்ணுனாலே போதும்’ என்றார். நாடோடிப் பழங்குடியினரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை மட்டும் மையப்படுத்தி 6 மாதங்களில் ஆய்வு செய்து சமர்ப்பித்தேன். பின்னர், தோற்றம், தொன்மம், பிரிவுகள், சடங்குகள், வழக்காறுகள் என அனைத்தையும் ஆராய்ந்து ஆராய்ந்து முழுமையான இன வரைவியல் ஆய்வாக அதை மாற்றினேன்" என `நரிக்குறவர் இன வரைவியல்' ஆய்வு நூல் குறித்துக் கூறுகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"70களில் வெளியான 'கசடதபற' இலக்கிய இதழில் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளில் சிலவற்றை மையப்படுத்தி அதனைத் திறனாய்வுப் போக்கில் ஆராய்ந்து இளமுனைவர் பட்டம் பெற்றேன். முனைவர் பட்ட ஆய்வினைப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து மேற்கொண்டேன். மானுடவியல் ஆய்வாளரான பேராசிரியர் பக்தவத்சல பாரதி எனக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தார். முனைவர் பட்ட ஆய்வுக்காக அடித்தள மக்களின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம் என்கிற தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

நரிக்குறவர் இனவரைவியல்  புத்தகம்
நரிக்குறவர் இனவரைவியல் புத்தகம்

அடித்தட்டு மக்களின் மரபுவழி மருத்துவம் முறைப்படுத்தப்பட்டதல்ல. ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மருத்துவ முறை மாறுபடக்கூடியது. அறிவியல் சார்ந்த மருத்துவ முறை, மந்திரம், சமயம், சடங்கு சார்ந்த மருத்துவமுறை என மரபுவழி மருத்துவத்தைப் பிரிக்கலாம். குழந்தைப் பேறு இல்லையென்றால் ஆண்கள் சபரிமலைக்கும், பெண்கள் மேல் மருவத்தூருக்கும் செல்கிற நம்பிக்கை இருக்கிறது. அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இனப்பெருக்கம் சார்ந்தும், பெண்கள், குழந்தைகள் சார்ந்தும் மேற்கொள்ளப்படும் கை வைத்தியங்களை ஆய்வு செய்தேன்.

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மாதவிடாயின் மூன்றாம் நாளில் புள்ளப்பூச்சி எனும் பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சூரியன் உதிக்கும் முன்பு சாப்பிடக் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இதுபோன்று புதுச்சேரியில் பட்டியலின சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஆதி திராவிடர் சமூக மக்களின் மரபுவழி மருத்துவப் பதிவு செய்தேன். நவீன மருத்துவத்தின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் எப்படிச் சென்று சேர்ந்திருக்கிறது. இப்போது மரபுவழி மருத்துவத்தைக் கையாள்கிறார்களா என்பது குறித்தும் ஆராய்ந்து எழுதினேன்" என்கிற பத்மபாரதி இந்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

முனைவர் பட்ட ஆய்வுப் பணிகளுக்கிடையே திருநங்கையர் சமூக வரைவியல் சார்ந்த ஆய்வினையும் மேற்கொண்டுள்ளார்.

"இந்த ஆய்வை மேற்கொள்ளும் முன்பு எனக்கு திருநங்கைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்கூடத் தெரியாது. அவர்கள் எங்கே இருப்பார்கள், அவர்களை எப்படி அணுகுவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளரின் மூலம் விழுப்புரம் அருகே உள்ள திருநங்கைகள் அறிமுகம் கிடைத்தது. முதல் நாள் பயத்துடன்தான் போனேன். ஆய்வுக்காகப் பேசிய போது, நான் பயந்தது போல் இல்லாமல் `அக்கா' என என்னிடம் மிக அணுக்கமாகப் பழகினார்கள். அவர்களின் உளநிலைகள், பழக்க வழக்கங்கள், அவர்கள்மீதான சமூகப்பார்வை எனப் பலவற்றையும் அந்த ஆய்வில் பதிவு செய்தேன்" என்கிறார்.

திருநங்கையர் சமூக வரைவியல் புத்தகம்
திருநங்கையர் சமூக வரைவியல் புத்தகம்

நரிக்குறவர் இன வரைவியல் நூலுக்காகப் புதுச்சேரி மாநில தமிழ் வளர்ச்சித்துறையின் விருதினை 2004-ம் ஆண்டு பெற்றிருக்கிறார். இந்த ஆய்வுகளுக்காக நண்பர்களிடம் கேமரா கடன் வாங்கி பிலிம் ரோல் போட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். செலவுக்குக் கொடுக்கும் பணத்தைச் சேகரித்து ரெக்கார்டர் வாங்கி பேட்டி எடுத்திருக்கிறார். இப்படியாக இந்த ஆய்வுகளை முடித்ததற்குப் பின் உள்ள பத்மபாரதியின் ஈடுபாடும் அர்ப்பணிப்புமே அவரது இந்த ஆய்வுகளை சாத்தியப்படுத்தியிருக்கிறது.