`பெண் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தால் தினமும் 100 ரூபாய்!' - அசத்தும் அஸ்ஸாம் அரசு

தவிர, பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும் அஸ்ஸாம் மாநில அரசு மும்முரமாகச் செயல்படுத்தி வருகிறது.
ஆணும் பெண்ணும் சமம் என்று எவ்வளவுதான் மார்தட்டிக்கொண்டாலும் ஸ்மார்ட்ஃபோன், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ச்சியடைந்தாலும், பெண் பிள்ளைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. இதனாலேயே மாநில அரசுகள் பெண் பிள்ளைகளை பள்ளி நோக்கி ஈர்ப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் அஸ்ஸாம் அரசு பெண் குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பதற்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அதாவது, பெண் பிள்ளைகள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இதுபோன்ற ஊக்கத்தொகை, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்கிறார் அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால். மேலும், சென்ற வருடமே இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைத்ததாகவும், ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக செய்ய முடியாமல் போனதாகவும் கூறியிருக்கிறார்.
தவிர, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பெண் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும் அஸ்ஸாம் மாநில அரசு மும்மரமாகச் செயல்படுத்திவருகிறது. இதுவரைக்கும் 948 பெண் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் மேலும் 15,000 மாணவிகளுக்கு இருசக்கரவாகனங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
`ஆண் பிள்ளைகளும் சரி, பெண் பிள்ளைகளும் சரி இருவருமே சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். பல பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். குறிப்பாக, ஆண் பிள்ளைகள் மட்டுமே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றும் நினைக்கின்றனர். இந்தத் தவறான எண்ணங்களைக் களையவும், பெண் பிள்ளைகளின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுக்கவும் எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும்' என்று அம்மாநிலக் கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப் போலவே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பல திட்டங்களையும் செயல்படுத்தவிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
இதற்கான முன்னோட்டமாக பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் இந்த மாத இறுதிக்குள் முறையே 1,500 மற்றும் 2,000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும் இந்தப் பணம் அவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வாங்க உதவியாக இருக்கும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அம்மாநில மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நல்ல செய்தி!