Published:Updated:

``இவங்களைப் பார்க்குறப்பதான் படிப்போட அருமை என்னன்னு புரியுது"- உணர்ச்சி பொங்கக்கூறிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

``இந்த மாதிரியான பழங்குடிச் சமூகத்திலிருந்து படிச்சு வர்றவங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யணும். சாதிப்பாகுபாட்டைக் களையணும். ஆசிரியர்கள்கூட சாதியைக் கேட்குறது ரொம்ப கேவலமானது. சமூக மாற்றத்துக்கான உதாரணமாக இவங்க ரெண்டு பேரும் தெரியுறாங்க..."

``இவங்களைப் பார்க்குறப்பதான் படிப்போட அருமை என்னன்னு புரியுது"- உணர்ச்சி பொங்கக்கூறிய விஜய் சேதுபதி

``இந்த மாதிரியான பழங்குடிச் சமூகத்திலிருந்து படிச்சு வர்றவங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யணும். சாதிப்பாகுபாட்டைக் களையணும். ஆசிரியர்கள்கூட சாதியைக் கேட்குறது ரொம்ப கேவலமானது. சமூக மாற்றத்துக்கான உதாரணமாக இவங்க ரெண்டு பேரும் தெரியுறாங்க..."

Published:Updated:
விஜய் சேதுபதி

திறமை, ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிற பெண்களைக் கௌரவிக்கும் விதமாக `அவள் விருதுகள்' வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 5-ம் ஆண்டு `அவள் விருதுகள்' விழா கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் சமூக சவால்களைத் தாண்டி கல்வியால் தங்களை முன்நிறுத்திக்கொண்ட இந்திரா காந்தி - சுனிதா ஆகியோருக்கு `சூப்பர் வுமன்' விருது வழங்கப்பட்டது.

நாடோடிப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த இந்திரா காந்தி, வனக்காப்பாளராகவும், சுனிதா தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கல்வியே கிடைக்கப்பெறாத அச்சமூகத்திலிருந்து, முதல் அரசு ஊழியராக இந்திரா காந்தியும், இரண்டாவது அரசு ஊழியராக சுனிதாவும் முன்னேறி வந்திருக்கின்றனர். இருவரும் இணைந்து தங்கள் சமூக மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பட்டதாரிகளை உருவாக்கும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இருவருக்கும் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கிச் சிறப்பித்தார்.

சூப்பர் வுமன் விருது பெறும் இந்திரா காந்தி
சூப்பர் வுமன் விருது பெறும் இந்திரா காந்தி

விருதைப் பெற்றுக்கொண்ட வனக்காப்பாளரான இந்திரா காந்தி, பேச வார்த்தைகள் வராமல் உணர்ச்சி மேலோங்க அழுதார். அவரைத் தேற்றிய விஜய் சேதுபதி, ``உங்களைப் பத்தின வீடியோல நீங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஓட்டுறதும், உங்களைப் பத்தி வீடியோல சொல்லியிருக்கிறதும் மாஸா இருந்துச்சு. அவ்வளவு துணிச்சலான நீங்க இப்ப விருதும் வாங்கியிருக்கீங்க... ஏன் அழுகுறீங்க" என்று அவரை அரவணைத்தபடி கூறினார்.

``உங்கள்ல எத்தனை பேருக்கு இவங்களோட கதை தெரியும்னு தெர்ல... இவங்க 1-வது படிக்கும்போது 47 வயசு ஆணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்திருக்காங்க. குழந்தையா இருக்கப்பவே வீட்டைவிட்டு ஓடிப்போய் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருக்காங்க. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குக்கூட இவ்வளவு துணிச்சல் இருக்குமான்னு தெரியல. அப்படி ஓடிப்போய் படிக்கணும்னு ஏன் நினைச்சீங்க?" என்று விஜய் சேதுபதி, ஆங்கராகவே மாறி இந்திராகாந்தியிடம் கேள்வி கேட்டார்...

``கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு சொல்லியிருக்காங்க. பிச்சையெடுத்தாவது படிக்கணும்... ஏன்னா கல்வி அழியாத செல்வம். நான் படிக்காமல் போயிருந்தேன்னா இன்னைக்கு இந்த இடத்துல நின்னிருக்க மாட்டேன்" என்றார் இந்திராகாந்தி.

``கீழ உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தபோது, காட்டுல பாம்பெல்லாம் உங்க மேல ஏறிப்போயிருக்குன்னு சொன்னீங்களே... பாம்பைப் பார்த்துகூட பயம் இல்லையா?" என விஜய் சேதுபதி கேட்க...

``நிறைய பாம்பைப் பார்த்திருக்கேன் சார்... அதைப் பார்த்தெல்லாம் பயமே இருந்ததில்லை. தூங்கும்போது கட்டுவிரியன் பாம்புகூட ஏறிப்போயிருக்கு. பாம்பு ஒன்னும் பண்ணாது சார். நாம சீண்டுனாத்தான் அது நம்மளை சீண்டும். காட்டுல இருக்கிற விலங்குகளைக்கூட நம்பி வாழலாம். ஆனா, நாட்டுல இருக்கிற மனுசங்களை நம்பி வாழ முடியாது" என தன் வேதனையை வார்த்தைகள் வழியே வெளிப்படுத்தினார் இந்திராகாந்தி.

சுற்றுச்சூழல் அக்கறையுடன் மணல் கடத்தலுக்கு எதிராகப் போராடி வரும் இந்திரா காந்தி, அப்போரில் தன் மகனையே இழந்திருக்கிறார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டியது.

மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றுகிற சக விருதாளர் சுனிதா...

``பெண் குழந்தைகளுக்கு 7 வயசுலயே கல்யாணம் பண்ணி வைக்குற நிலையில, எங்கப்பாதான் என்னைப் படிக்க வெச்சார். அப்படி நான் படிச்சதாலதான் இன்னைக்கு அரசுப் பணியில இருக்கேன். எங்க சமூகத்துலயே நானும் இந்திராகாந்தி அக்காவும்தான் அரசுப் பணியாளர்களா இருக்கோம். கல்வி வெளிச்சம் கிடைச்சு பலரும் அரசுத்துறைகளுக்கு வந்தால்தான் எங்க சமூகம் முன்னேறும். அதுக்காக நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலைகளை செஞ்சுகிட்டு இருக்கோம்" என்றார் சுனிதா.

சூப்பர் வுமன் விருது பெறும் சுனிதா
சூப்பர் வுமன் விருது பெறும் சுனிதா

``படிப்போட அருமை என்னன்னு இவங்களை மாதிரி ஆட்களைப் பார்க்குறப்பதான் புரியுது. இந்த மாதிரியான பழங்குடிச் சமூகத்திலிருந்து படிச்சு வர்றவங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யணும். சாதிப்பாகுபாட்டைக் களையணும். ஆசிரியர்கள்கூட சாதியைக் கேட்குறது ரொம்ப கேவலமானது. சமூக மாற்றத்துக்கான உதாரணமாக இவங்க ரெண்டு பேரும் தெரியுறாங்க" என்றார் விஜய் சேதுபதி.

``எங்கப்பாவுக்கு அப்புறம் என் கணவர்தான் என்னோட படிப்புக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். என்னை, நைட் காலேஜ்க்கு அனுப்பி வெச்சார். காலேஜ் முடியுறதுக்கு 10 மணிக்கு மேல ஆனாலும் வந்து கூட்டிட்டுப்போவார். அவரோட சப்போர்ட் இல்லாம என்னால இந்த இடத்தை அடைஞ்சிருக்கவே முடியாது... இந்தத் தருணத்துல அவரையும் மேடையேத்தணும்னு விரும்புறேன்" என சுனிதா கோரிக்கை வைக்கவே, சுனிதாவின் கணவரும் குழந்தைகளும் மேடையேறிய தருணம் மேலும் சிலிர்ப்பை உண்டாக்கியது.

தனியொருத்தியாகத் தன் மகள் ஐஸ்வர்யா ராஜேஷின் திரை ஆர்வத்துக்கு ஊன்றுகோலாக இருந்து, அவரின் வெற்றிக்காகப் பங்காற்றிய அவரின் தாய் எம்.நாகமணிக்கு `பெஸ்ட் மாம்' விருது வழங்கப்பட்டது.

ஐஸ்வர்யாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போதே தன் கணவரும், தெலுங்குப்பட நடிகருமான ராஜேஷ் இறந்துவிடவே, தனியொருத்தியாக மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் அடங்கிய தன் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தும் பொறுப்பை ஏற்றார் நாகமணி. புடவை வியாபாரம், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், ரியல் எஸ்டேட் என ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த தன் இரண்டு மகன்களின் இழப்பு அவரை நிலைகுலையை வைத்தது.

கடினமான இந்தச் சூழலில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஓடினார். தன் மகளை ஒரு நடிகையாக்க வேண்டும் என்பதில் இவரின் முன்னெடுப்புகள் முதன்மையானவை. இத்தனை தடைகளைக் கடந்து ஐஸ்வர்யா ராஜேஷ் எனும் ஒரு நடிகையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்த விதத்தில் பாராட்டுக்குரியவராகிறார் நாகமணி.

எம்.நாகமணி பெஸ்ட் மாம் விருது வாங்கிய தருணம்.
எம்.நாகமணி பெஸ்ட் மாம் விருது வாங்கிய தருணம்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, வடிவுக்கரசி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நாகமணிக்கு `பெஸ்ட் மாம்' விருதை வழங்கிச் சிறப்பித்தனர். நாகமணி, தான் கடந்து வந்து வலிகளின் வழியே கிடைத்த இவ்வெற்றியைப் பற்றிக் கூறியது அரங்கையே நெகிழ்வுறச் செய்தது.

ஆனந்தக்கண்ணீர் மேலோங்க, ``இது என் பொண்ணோட பெருமை. அவ ஜெயிச்சதாலதான் நான் இங்க வந்திருக்கேன். கஷ்டப்பட்டு வந்தவங்க கெட்டுப்போனதில்லை" என நெகிழ்ந்தபோது அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது.