`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்.
மார்ச் 8... உழைக்கும் மகளிர் தினம். பூங்கொத்துகளும், பரிசுப் பொருள்களும், வாழ்த்து அட்டைகளும், ஆடை, அணிகலன்களுக்கு டிஸ்கவுன்ட்களும், `மனைவிக்கு மிக்ஸி வாங்கிக் கொடுங்க' விற்பனை யுக்திகளும், கார்ப்பரேட் அலுவலகங்களில் பிங்க் நிற ஆடைகளில் கொண்டாட்டங்களும், சோஷியல் மீடியாவில் `பெண் என்பவள்...' போஸ்ட்களும், வாட்ஸ்அப்பில் `உங்கள் அம்மா/மனைவி/மகள்...' ஃபார்வேர்டுகளும்... அப்படியே பிரேக் போட்டுவிட்டு, சில டேட்டாக்களைப் பார்ப்போம்.
லிங்க்ட்இன் - ஜி.எஃப்.கே நிறுவனங்கள் இணைந்து 2021-ல் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவில், ஆண்களைவிட தங்களுக்குக் குறைவாக சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக 37% பெண்கள் தெரிவித்துள்ளனர். வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம்மின் குளோபல் ஜெண்டர் கேப் அறிக்கை 2021, இந்தியாவை மிக அதிக விகிதாசாரத்தில் பாலின ஊதியப் பாகுபாடு நிலவும் நாடாகக் குறிப்பிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணியிடத்தில் பாலியல் தொல்லைப் புகார்களைப் பெண்கள் பதிவு செய்வதற்கான சூழல் கடினமாக உள்ள நிலையில், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2019-ல் 505 பணியிடப் பாலியல் புகார்களே பதிவாகியுள்ளன என்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவில், பணியிடங்களில் பதிவாகும் பாலியல் புகார்கள் குறித்த ஒருங்கமைக்கப்பட்ட தரவு எதுவும் அரசிடம் இல்லை என்ற அவலம் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபணியில் வளர்ச்சி, பணி உயர்வு என்று வரும்போது 85% பெண்கள் பாலினம் காரணமாக அதிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாகக் கூறுகிறது, `லிங்க்டுஇன் ஆப்பர்ச்சுனிட்டி இன்டெக்ஸ் 2021' அறிக்கை. ஆசிய - பசிபிக் நாடுகளில் இந்த சராசரி 60% என்ற நிலையில், இந்தியாவில் அது 85% என்பது அதிர்ச்சியளிக்கிறது.
முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எனில், முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாட்டில் உள்ள உழைக்கும் பெண்களில் 95% பேர், முறைப்படுத்தப்படாத பணிகளில்தான் கிடந்துழைத்து வருகிறார்கள். அவர்களுக்கான கூலி நிர்ணயம் முதல் பாதுகாப்பு வரை அனைத்தும் கேள்விகளற்றுக் கிடக்கின்றன.

இந்தியாவில் உழைக்கும் பெண்கள் 21% பேர் இருக்கிறார்கள். மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நாடான, அதில் சரிபாதி பெண்களைக் கொண்டுள்ள நாடான இந்தியாவில், 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிலிருக்கும் 79% பெண்கள் வருமானம் தரும் உழைப்பில் பங்கெடுக்கவில்லை என்பது, அவர்களுக்கு அதற்கான சூழலை இங்கு இன்னும் உருவாக்கித் தரவில்லை என்பதையே காட்டுகிறது.
தற்போது `பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.5%-லிருந்து 9% ஆக உயர்த்தும்; அதன் மூலம் 2025-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி (GDP Gross Domestic Product) 700 பில்லியன் டாலராக அதிகரிக்கும்' என்கிறது உலக வங்கியின் அறிக்கை. நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களைப் பங்களிக்கச் செய்ய, அவர்களுக்குப் பணியிடத்தில் உள்ள சிக்கல்களைக் களைய வேண்டியது முக்கியமாகிறது. அதுவே, பெண்களின் உழைப்புப் பங்களிப்பை (LFPR Labour Force Participation Rates) அதிகரிக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், போராட்டக்களத்தில் இருந்து தோன்றிய மார்ச் 8, இன்று பூக்களுடன் கொண்டாடப்படும் போக்கை சுட்டிக்காட்டித் திசைதிருப்ப வேண்டியது அவசியமாகிறது. களையப்பட வேண்டிய பெண்களின் பிரச்னைகளை சபைக்கு அனுப்பும் நாளாக இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவள் விகடன் இந்த மார்ச் 8-ல் முன்னெடுக்கும் பிரசாரம்... #StopExploitingWomen
தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் பெண்களுக்கு, பணியிடங்களில் உரிய அங்கீகாரம், உரிமை, பாதுகாப்பை உறுதி செய்வது அரசின், நிறுவனங்களின் கடமை. பெண்களுக்கு இவை கிடைக்காத சூழலையும், அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதையும், அதற்கான தீர்வுகளையும் பேசுவதே அவள் விகடனின் #StopExploitingWomen பிரசார நோக்கம்.

`உங்கள் உழைப்பு வேண்டும். ஆனால், உங்கள் உரிமைகளைக் கண்டுகொள்ள மாட்டோம், கொடுக்க மாட்டோம்' என்று நடந்து கொள்ளும் நிறுவனங்களை நோக்கிக் கேள்விகளைத் தொடங்குவோம்; பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்களுக்கான தீர்வை நோக்கி நகர்வோம். அவள் விகடன் இதழ், விகடன் வலைதளம், அவள் விகடன் யூடியூப், அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில்... கட்டுரைகள், பேட்டிகள், சர்வேக்கள் என இந்தப் பிரசாரத்தில் நீங்களும் இணைந்திருங்கள்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்களுக்கு எழுப்புவோம் எதிர்க்குரல்!
- அவள்