சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடலிங் துறைகளில் நுழைய விரும்பும் பெண்கள் பலருக்கும் எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களை டார்கெட் செய்து தங்கள் வலைக்குள் விழவைக்கும் பல நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது சாயத் என்பவர் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 40-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். 26 வயதேயான முகமது சயாத் மாடலிங் செய்து வந்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஓட்டேரியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படை மூலம் சயாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பல பெண்களைத் தொடர்புகொண்டு மாடலிங் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றி, தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்தும், ஸ்டார் ஹோட்டல்களுக்கு வரவழைத்தும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார். கடந்த 6 மாதங்களில் மட்டும் நட்சத்திர ஹோட்டல்களில் 100 முறை ஆன்லைன் புக்கிங் செய்து பெண்களை அங்கு வரவழைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு செல்லும் பல பெண்களை நிர்வாணமாக போட்டோ எடுத்துள்ளார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று ஏமாற்றியிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தது. ஆனால், அவரது செல்போனில் இருந்த பணப் பரிமாற்றங்களைக் கணக்கிட்டால் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் தொழிலதிபர்களின் மகள்கள் என்பது தெரியவந்துள்ளது. முகமது சயாத் கைது செய்யப்பட்டதையடுத்து பல பெண்கள் தைரியமாக ஆன்லைன் புகார் அளித்து வருகின்றனர். சயாத் மட்டுமல்ல இதுபோன்று பல சம்பவங்கள் அவ்வப்போது மீடியா வெளிச்சத்துக்கு வருகின்றன.
மாடலிங் மற்றும் திரைத்துறையில் கால் பதிக்க விரும்பும் பெண்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு பெண் மாடலிங் ஒருங்கிணைப்பாளர் கூறியது: ``மாடலிங் மற்றும் திரைத்துறையிலும் போட்டோகிராபர், மேக்கப்மேன், புரொடக்ஷன் மேனேஜர் போன்றவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்தத் துறையில் பெண்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புள்ள வேலைகளைச் செய்யும் இவர்களிடம் பெண்களை ஏமாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஏதாவது இடத்துக்குத் தனியாக வரச் சொன்னால் போகக் கூடாது. துணைக்கு யாராவது ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
அதே போன்று சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களுக்கு போட்டோக்களை பகிரக்கூடாது. சமூக வலைதளங்களில் போட்டோக்களை வாங்கி மார்ஃபிங் செய்து சட்ட விரோத செயல்களுக்குப் பயன்படுத்த வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவிடுவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி யாரேனும் பெண்களை அணுகினால் அந்த நபரைப் பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில், பெண்கள் பிரிவில் விசாரித்துப் பார்க்க வேண்டும். பொதுவாக சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடலிங் போன்ற அனைத்துத் துறைகளிலும் காஸ்டிங் இயக்குநர்கள்தான் நடிகர்களை, மாடல்களை ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்வார்கள். அதனால் ஏஜென்ட்டுகளிடம் மாடலிங் பெண்கள் போட்டோக்களைப் பகிரக்கூடாது.

காஸ்டிங் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட காஸ்டிங் இயக்குநர்களிடம் மட்டுமே போட்டோக்களைப் பகிர வேண்டும். காஸ்டிங் இயக்குநர் என்று கூறிக்கொண்டு வாய்ப்பு வாங்கித் தருவதாக யாரேனும் தொடர்புகொண்டால் அவர்களிடம் சங்கத்தில் பதிவுசெய்த சான்றைக் கேட்டு வாங்கி செக் செய்யலாம். பெரும்பாலும் அந்தச் சான்றை நேரில் பார்த்து உறுதிசெய்துவிடுவது நல்லது. போட்டோக்கள் போன்று வீடியோக்களையும் பகிரக்கூடாது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே சட்டபூர்வமாகக் கையாள வேண்டும்" என்றார்.