Published:Updated:

`கைக்குழந்தையுடன் வந்த மாணவி; ஆச்சர்யத்தில் மூழ்கிய கல்லூரி' - பெங்களூரு பெண்ணின் துணிச்சல்!

கல்லூரி மாணவர் ஹர்ஷிதா குழந்தையுடன்
கல்லூரி மாணவர் ஹர்ஷிதா குழந்தையுடன்

பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரசவம் முடிந்த அடுத்த நாள் தேர்வுக்கு வந்து அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்ஸி இறுதியாண்டு படித்து வருகிறார். திருமணம் முடித்த கையோடு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமானார். தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த தேர்வில் மாணவி பங்கேற்றார். அன்றைய தினம் மாணவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த தேர்வுக்கு மாணவி தன் குழந்தையுடன் வந்து ஆச்சர்யமளித்துள்ளார்.

குழந்தை
குழந்தை

மாணவி தன் தாயாரின் உதவியுடன் குழந்தையைத் தூக்கி வந்துள்ளார். மாணவி மூன்று மணி நேரம் தேர்வு எழுதினார். அரைமணி நேரம் இடைவெளியில் பக்கத்தில் உள்ள அறைக்குச் சென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். மாணவிக்குத் தேவையான உதவிகளை கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்தது. டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவிக்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய மாணவி ஹர்ஷிதா, ``தேர்வை இப்போதே எழுதி முடிக்க வேண்டும் என நினைத்தேன். இப்போது இதைத் தவறவிட்டால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும்போது தேர்வுக்காகப் படித்தேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்” என்றார்.

Representation Image
Representation Image

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், ``தேர்வெழுத வருவார் என நாங்கள் உறுதியாக நினைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். புதன்கிழமையன்று அவருக்குக் குழந்தை பிறந்தது. வியாழக்கிழமை தேர்வு எழுத வந்துவிட்டார். அவர் தீடிரென வந்துவிட்டதால் எங்களால் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், நாங்கள் அவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

தேர்வெழுத வந்தது மட்டுமல்லால் அவர் மேலும் ஆச்சர்யம் அளித்தார். எல்லா மாணவர்களையும்போல மரப்பலகையில் அமர்ந்து தேர்வெழுதினார். இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பிரசவம் முடித்து வந்து மரப்பலகையில் அமர்ந்து மூன்று மணி நேரம் தேர்வெழுதுவது என்பது கடினமானது. சாய்மானம் கூட இருக்காது. மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு