Published:Updated:

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இல்லை இடைவெளி!

இனி இல்லை இடைவெளி!
பிரீமியம் ஸ்டோரி
இனி இல்லை இடைவெளி!

- புதிய பகுதி

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இல்லை இடைவெளி!

- புதிய பகுதி

Published:Updated:
இனி இல்லை இடைவெளி!
பிரீமியம் ஸ்டோரி
இனி இல்லை இடைவெளி!

வாழ்வின் சவாலான காலகட்டம் எது? - இந்தக் கேள்விக்கு ‘டீன்ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது’ என்று பெற்றோரும், ‘டீன்ஏஜ் பிள்ளைகளாக இருப்பது’ என்று பிள்ளைகளும் பதிலளிக்கலாம். உண்மை தான்... டீன்ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற் றோருக்குமான அந்தத் தற்காலிகப் பயணம் சவால்களும் சுவாரஸ்யமும் நிறைந்தது.

வினா நூறு, கனா நூறுமாக விடலைப் பருவத்தினரும், ஆயிரம் எதிர்பார்ப்பு களோடு பெற்றோரும் கடக்கும் இந்தப் பயணத்தில் இரு தரப்பினரும் எதிர் கொள்ளும் கருத்து வேறுபாடுகள், மனத் தாங்கல்கள், வேதனைகள், இழப்புகள் ஏராளம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் சுமுகமான உறவு நிலவும்போது மனதை உறுத்தும் விஷயங்களை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், பல குடும்பங்களிலும் பல விஷயங்களும் பேசப்படாமலே மறைக்கப் படுகின்றன.

டீன்ஏஜ் தற்கொலைகளில் தெற்காசிய நாடுகளிலேயே இந்தியா முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். வாழப்பிடிக்காமல் அல்லது முடியாமல் உயிரையே விடத் துணியும் அளவுக்கு பிள்ளைகளுக்குப் பிரச்னை இருந்திருப் பதைக்கூட அறியாமலிருக்கும் பெற் றோர்கள் இங்கே ஏராளம்.

பதின்பருவ பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடை யிலான உறவு, சிக்கலின்றி, சவால்களின்றி இருக்கப்போவதில்லை. ஆனால், அவற்றை எப்படிக் கையாளலாம், பிரச்னையாக வெடிக்காமலும் உறவே அறுந்துபோகும் அளவுக்கு தீவிரமாகாமலும் எப்படித் தடுக்கலாம் என்பதுதான் பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய பாடம்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இல்லை இடைவெளி!

சென்னையைச் சேர்ந்த மருந்தியல் நிபுணரும் (Pharmacologist) உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன்ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்பு உணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறை சொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின் பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங் களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் இங்கே அலசப்போகிறார்கள்.

‘`நாங்களும் விதிவிலக்கில்லை. டீன்ஏஜ் மகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அம்மாவாக நானும் அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத மக ளாக ஆஷ்லியும் நிறைய பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறோம். இன்றும்கூட சந்திக்கிறோம். நேர்மையான, வெளிப்ப டையான உரையாடல் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்பதை இருவரும் ஒரே நேரத்தில் உணர்ந்த அந்த நொடி, நாங்கள் அம்மா-மகள் என்ற நிலையிலிருந்து தோழிகள் என்ற இடத்துக்கு நகர்ந்தோம். அதுவரை நான் செய்வதுதான் சரி என்ற நினைப்பில் எப்போதும் எதிராளியைக் குறை சொல்லிக் கொண்டிருந்த எங்கள் இருவரின் மனப்போக்கும் மாறியது. அந்த அனுபவங்களைத்தான் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறோம்.

டீன்ஏஜ் பிள்ளைகள் உள்ள வீடுகளில் பிரச்னை களாகப் பார்க்கப்படுகிற முக்கியமான சில விஷயங்களை ஒவ்வோர் இதழிலும் அலசப் போகிறோம். இந்தத் தொடரை வாசிப்பவர்களுக்கு ‘நீயா... நானா...’ என்ற சிந்தனை மாறி, ‘நீயும் நானும்’ என்ற பக்குவம் பிறக்கும். வாழ்க்கையின் பொற் காலமான பதின்பருவத்தை பிள்ளைகள் முழுமையாக ரசித்து வாழ பெற்றோரும், அதைப் பெற்றோருக்குப் போராட்ட காலமாக மாற்றாமலிருக்க பிள்ளைகளும் பழகட்டும்...

ஹேப்பி பேரன்ட்டீனிங்!

கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் பரிமாற்றம் ஏன் அவசியம்?

நல்ல கம்யூனிகேஷன், பெற்றோருக்கும் பிள்ளைக்கு மான உறவை மேம்படுத்தலாம். அதுவே மோசமான உரையாடல், அதை உடைத்து நொறுக்கலாம். ஒரு குடும்பத்தில் ஆரோக்கியமான, பாசிட்டிவ்வான கலாசாரத்தை உருவாக்க நல்ல கம்யூனிகேஷனே அடிப்படை. யாருக்காவது ஏதாவது பிரச்னையா... பேசித் தீர்த்துவிடலாம். ஆனாலும், டீன்ஏஜ் பிள்ளைகளும் பெற்றோரும் கம்யூனிகேஷன் என்ற விஷயத்தில் மிகவும் தடுமாறுவது ஏன்?

டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனாலும் பெற் றோரிடம் அதைத் தேடிப்போகும்போது தங்களை அவர்கள் ஜட்ஜ் செய்துவிடுவார்களோ என்று பயப் படுகிறார்கள். பிள்ளைகளுக்கான வழிகாட்டுதலைக் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கோ வேறுவிதமான தயக்கம். ‘நாம சொல்றதை எங்கே கேட்கப்போறாங்க... அவங்களுக்கு அவங்க ஃபிரெண்ட்ஸ் சொல்றதுதான் பெருசு’ என்ற தயக்கம். விளைவு..? இருவருக்குமிடையில் ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் காணாமல் போகிறது.

ஆஷ்லி...

‘`ஸ்லீப் ஓவர் (நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று இரவு தங்கும் டீன்ஏஜ் கலாசாரம்) என்ற பேர்ல யார் வீட்டுக்கும் போகக் கூடாதுனு எங்க அம்மா எனக்கொரு வித்தியாசமான ரூல் போட்ருந் தாங்க. டீன்ஏஜ் வர்ற வரைக்கும் அது பெருசா தெரியலை. நானும் டீன்ஏஜ்ல அடியெடுத்து வெச்சதும், அம்மா போட்ட கண்டிஷன் கடுப்பா இருந்துச்சு. சோஷியல் மீடியாவுல என் ஃபிரெண்ட்ஸ் பலரும் ஸ்லீப் ஓவர் அனுபவங்களைப் பத்தி ஷேர் பண்ண விஷயங்களைப் பார்த்தபோது நான் மட்டும் அந்த ஃபன்னை எல்லாம் மிஸ் பண்றேனேனு தோணுச்சு. பாதுகாப்புங்கிற பேர்ல அம்மா ஓவரா பண்றாங்கனுகூட யோசிச்சிருக்கேன்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இல்லை இடைவெளி!

ஒருநாள் தாங்க முடியாம அதைப் பத்தி அம்மாகிட்டயே கேட்டுட்டேன். அந்தப் பேச்சு எப்படியும் சண்டையிலதான் முடியும்னு எதிர்பார்த்த எனக்கு ஆச்சர்யம். அம்மா என்கிட்ட மனசுவிட்டுப் பேசினாங்க. அவங்க டீன்ஏஜ்ல இருந்தபோது இதே மாதிரி ஒரு ஃபிரெண்டு வீட்ல போய் பாதுகாப்பில் லாம மாட்டிக்கிட்டதையும் உதவினு கூப்பிட ஆளில்லாம தவிச்சதையும் அப்புறம் ஒருவழியா தப்பிச்சு வந்ததையும் சொன்னாங்க. ‘வேணும்னா உன் ஃபிரெண்ட்ஸை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா... என்ஜாய் பண்ணு’னு அம்மா சொன்னாங்க. என்னை மதிச்சு என்கிட்ட தன் பர்சனல் விஷயத்தை ஷேர் பண்ணிக்கிட்ட அம்மா மேல அந்த நிமிஷம் மரியாதை கூடுச்சு. ஒருவேளை நான் அம்மாகிட்ட பேசாமலே இருந்திருந்தா, அம்மா ரொம்ப ரூடு... நியாயமே இல்லாத வங்க...’னு தப்பாவே நினைச்சிட்டிருந் திருப்பேன்ல...’’

டாக்டர் ஷர்மிளா...

‘`ஆஷ்லி குழந்தையா இருந்தவரை நான் ‘நோ’ சொன்னா அவ ஏத்துக்கிட்டா. ஆனா, அவ வளர வளர நான் சொல்ற ஒவ்வொரு ‘நோ’க்கும் ஏன், எதுக்குனு கேள்வி கேட்க ஆரம்பிச்சா. பிள்ளைங்க எவ்வளவு வளர்ந் தாலும் பெற்றோர் கண்களுக்கு அவங்க குழந்தைங்கதான். அதனாலயே அவங்க கேள்வி கேட்கறதை பெற்றோரால ஏத்துக்க முடியறதில்லை. என் மகள் குழந்தையில்லை, வளர்ந்துட்டானு உணர்ந்தபோது, அவளுக்கு அட்வைஸ் பண்ற என் அணுகுமுறையை நான் மாத்திக்கிட்டேன்.

குழந்தையா இருந்தபோது அவளுக்கு பூச்சாண்டி கதை சொன்ன மாதிரி இப்போ சொல்ல முடியாது. யதார்த்தத்தைச் சொல்லி புரிய வைக்கணும், அதே நேரம் அவளுடைய எல்லைகளை அவ உணரணும். நான் மட்டுமே ரூல்ஸ் போட்டுக்கிட்டிருக்கிறதை நிறுத்திட்டு அவ தரப்பு நியாயத்தைக் கேட்க ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் நிறைய பேசி முடிவுக்கு வந்தோம்.

சிங்கிள் மதரா எனக்கு அவளுடைய ஃபிரெண்ட்ஸை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய தன் அவசியத்தையும் புரியவெச்சேன். பெண்கள் மட்டுமே உள்ள வீடுங்கிறதால எங்க வீட்டுக்கு அவளுடைய ஃபிரெண்ட்ஸ், (ஒன்லி கேர்ள்ஸ்) வரலாம், தங்கலாம்னு அனுமதி கொடுத்தேன். அதுவரைக்கும் ஒருத்தர்மேல ஒருத்தர் புகார்களை மட்டுமே சொல்லிட்டிருந்த நாங்க, அதுக்குப் பிறகு பிரச்னைகளைப் புரிஞ்சுக்கவும் தீர்வுகளை சேர்ந்து யோசிக்கவும் ஆரம்பிச்சோம்.’’

- இடைவெளி குறைப்போம்...

****

அம்மா - அப்பாவுக்கு ஐந்து விஷயங்கள்...

* பிள்ளைகள் சொல்வதைக் கேளுங்கள்... ரியாக்ட் செய்யவோ, தீர்வுகள் சொல்லவோ வேண்டாம். தான் சொல்வதைக் கவனிக்க பெற்றோர் தயாராக இருக்க வேண்டும் என்பதே டீன்ஏஜ் பிள்ளைகளின் பிரதான எதிர்பார்ப்பு.

* பிள்ளைகள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போது குறுக்கே பேசாதீர்கள். உங்கள் பேச்சை தற்காலிகமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்.

* உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்காமல் பேச வேண்டும் என நினைத்தால் அவர்கள் பேசுவதை ஜட்ஜ் செய்யாமல் கவனியுங்கள். கருத்து சொல்லாதீர்கள்.

* பிள்ளைகள் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

* எல்லாத் தருணங்களிலும் நீங்கள் அவர்களுடன் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். சின்ன தழுவல், அன்பு முத்தம் என அதை வெளிப் படுத்தலாம். பெற்றோரிடம் எதையும் பேசலாம் என்ற நம்பிக்கையை அதுதான் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism