Published:Updated:

மேகா ஆகாஷ் முதல் அனிதா சம்பத் வரை... பாலியல் சீண்டல்களைச் சமாளித்தது எப்படி? #SpeakUp

#SpeakUp
#SpeakUp

"மண்ணில் இருப்பவை ஆணும் பெண்ணுமென இரண்டே இனங்கள்தான். இதில் ஓர் இனம், காலங்காலமாக இன்னொரு இனத்தின் உடலையும் உயிரையும் தன் பாலியல் வேட்கைக்காக வன்கொடுமை செய்துகொண்டே இருப்பதை இனியும் பொறுப்பதற்கில்லை."

ஹைதராபாத் பெண் மருத்துவர் (திஷா) மரணத்துக்குப் பிறகு, `பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு எப்போதுதான் முடிவு' என்கிற கோபம், பெண்களுக்கும் பெண்கள் பாதுகாப்பு மீதான அக்கறைகொண்டவர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. நன்மை, தீமை தெரிந்த பகுத்தறிவுடன் மண்ணில் இருப்பவை ஆணும் பெண்ணுமென இரண்டே இனங்கள்தான். இதில் ஓர் இனம், காலங்காலமாக இன்னொரு இனத்தின் உடலையும் உயிரையும் தன் பாலியல் வேட்கைக்காக வன்கொடுமை செய்துகொண்டே இருப்பதை இனியும் பொறுப்பதற்கில்லை.

`பாலியல் வன்கொடுமைக்குத் தூக்கு!' - திஷா பெயரில் ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

திஷாவின் உடலில் அந்த நால்வர் வைத்த நெருப்பு, இந்தியாவில் இருக்கிற அத்தனை பெண்களின் மனதிலும் எரிந்துகொண்டிருக்கிறது. அவர்களில் சிலர், நடந்த கொடுமைதொடர்பான தங்கள் கருத்துகளையும் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை எப்படிச் சமாளித்தார்கள் என்பதையும் பகிர்கிறார்கள்.

"கன்னத்துல ஓங்கி ஓர் அறை வெச்சேன்!" - வைஷாலி, நடிகை மற்றும் தொகுப்பாளினி

"வீட்டைவிட்டு வெளியில போறதே பெரிய விஷயம்னு சொல்ற அளவுக்கு கட்டுப்பாடான குடும்பத்துலதான் பிறந்தேன். ஆனா என்னோட அப்பா மாடர்ன் சிந்தனைகள் இருக்கிறவர். என்னை நல்ல காலேஜ்ல சேர்த்து படிக்க வெச்சதோட, சுதந்திரமாகவும் வளர்த்தார். மாடலிங், ஆங்கர்னு வாய்ப்புகள் வந்தப்பகூட, 'பிடிச்சிருந்தா பண்ணு'ன்னு அப்பாதான் உற்சாகப்படுத்தினார். ஒரு டிவி நிகழ்ச்சிக்காக டிராவல்ஸ்ல பஸ் புக் பண்ணி வெளியூர் போயிருந்தோம்.

வைஷாலி, நடிகை
வைஷாலி, நடிகை
Anitha Photography

அந்த யூனிட்ல கிட்டத்தட்ட 25 பேர் இருந்தோம். ஷூட் முடிஞ்சு, ராத்திரி அதே பஸ்ல திரும்பி வந்துகிட்டு இருந்தோம். அட்டாச்டு டாய்லெட் இருக்குற அந்த பஸ்ல, மிட் நைட் டாய்லெட் யூஸ் பண்றதுக்கு எழுந்துபோனேன். கிட்டத்தட்ட எல்லாரும் தூங்கிட்டு இருந்தாங்க. நான் மட்டும் தனியா சீட்டுகளுக்கு இடையில மெதுவா நடந்து போயிகிட்டிருந்தேன். டாய்லெட்கிட்ட போனதும், பின்னாடி யாரோ வர்ற மாதிரி இருக்குதேன்னு சட்டுன்னு திரும்பிப் பாத்தா, கூட வந்த ஒரு நடிகர் ரொம்ப நெருங்கி வந்து 'பேட் டச்' பண்ண வந்தான். உடனடியா அவனோட நோக்கம் புரிஞ்சு சுதாரிச்சுகிட்டு, அவன் கன்னத்துல ஓங்கி ஓர் அறை விட்டேன். அமைதியா ஒண்ணும் தெரியாத மாதிரி போயிட்டான்.

இதுல கொடுமை என்னன்னா, என் அம்மாவும் என்னோட அதே பஸ்லதான் இருந்தாங்க. அது தெரிஞ்சும் இப்படி அப்ரோச் செய்றான்னா, நாம தனியா இருக்கிறப்போ இவனுங்க என்ன வேணும்னாலும் செய்வாங்கதானே. இன்னொருதரம் ஒரு பி.ஆர்.ஓ, 'அட்ஜஸ்மென்ட் உங்களுக்கு ஓகேவா'ன்னு மெசேஜ் போட்டாரு. 'நோ மீன்ஸ் நோ' மோடில் ஒரு ரிப்ளை குடுத்துட்டு, போன், ஃபேஸ்புக்குன்னு அவரோட அத்தனை கான்டாக்டையும் பிளாக் பண்ணிட்டேன்.

பொள்ளாச்சி முதல் தெலங்கானா வரை... 2019-ல் இந்தியாவை உலுக்கிய  பாலியல் வன்முறைக் குற்றங்கள்!

யாராச்சும் உரசிகிட்டு இல்லைன்னா இடிச்சிகிட்டு போகும்போது குறைந்தபட்சம் ஒரு 'ப்ச்' அப்புறம் ஒரு முறைப்பு இவ்வளவுதான் நம்ம ரியாக்‌ஷனா இருக்கு. ஆனா, அப்ரோச் இப்படி விதவிதமாக இருந்தாலும் அவங்க எல்லோரோட நோக்கமும் ஒண்ணுதான். அதனால இனிமே நம்ம ரியாக்‌ஷனும் ஒரேமாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட அனுபவத்துல மீடியான்னு இல்ல, எந்தத் துறையில வேலை செஞ்சாலும், தனியா வீட்ல இருந்தாலும், ரோட்டுல நடந்து போனாலும் நாம ஒரு மனுஷி என்பதைத்தாண்டி நாம ஒரு பொண்ணுங்கிறதை 24 மணி நேரமும் நமக்கு நினைவுபடுத்திக்கிட்டே இருக்கிற சமூகம் இது.

'என்னோட அப்பா ஷூட்டிங் முடிஞ்சு லேட்டா ஆச்சுன்னா, அந்த ஏரியாவில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தங்கிவிட்டு, விடிஞ்சதும் திரும்பி வா'ன்னு சொல்றார். அந்தளவுக்கு திஷாவின் நிலை ஒவ்வொரு பெண்ணையும் மட்டுமல்லாமல், அவளுடைய குடும்பத்தினரையும் மிரள வைச்சிருக்கு.''

"எனக்கும் நடந்திருக்கு பாலியல் துன்புறுத்தல்!" - திவ்யா ஸ்வப்னா, சமூகச் செயற்பாட்டாளர்

"திஷாங்கிறது (ஹைதராபாத் மருத்துவர்) இன்னுமொரு கேஸ். தண்டனைகள் பலமானால், குற்றங்கள் குறையும். கல்ஃப் நாடுகள்ல நடுரோட்டில நிறுத்தி எல்லோர் முன்னாடியும் கொல்றாங்க. இங்க அந்த மாதிரிதான் சட்டம் வரணும். உடனே, மனித உரிமைகள் ஆணையம் தலையிடும். இந்த ஆணையம், ஆண்களுக்காக மட்டும்தான் இயங்குதுபோல.

 திவ்யா ஸ்வப்னா, சமூகச் செயற்பாட்டாளர்
திவ்யா ஸ்வப்னா, சமூகச் செயற்பாட்டாளர்

எனக்கு 11 வயசுல பாலியல் துன்புறுத்தல் நடந்துச்சு. இப்போ எனக்கு 38 வயசாச்சு. இன்னமும் என் அடிமனசுல அந்த நிகழ்வு மறக்க முடியாம இருக்கு. பல பெண்களுக்கும் இதுதான் நிலை. திஷா மாதிரி சம்பவங்களைக் கேள்விப்படறப்போ, எனக்கு அந்தப் பழைய ஞாபகம் வந்துடுது. மூணு வருஷத்துக்கு முன்ன, அந்த ஆள் இருக்கிற இடத்தைத் தேடிப்போனேன், என் மனசார தண்டிக்கணும்னு. ஆனா, செத்துப்போயிட்டதா சொன்னாங்க. அவ்வளவு ஆத்திரம் என்மனசுல இருக்குங்க" என்றவர், "ஐரோப்பிய நாடுகள்ல, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையா பொதுவெளியில சொல்றாங்க. ஆனா, நம்ம நாட்டுல, மானம் போயிடுமேன்னு பயப்படுறாங்க. இந்த பயம், குற்றவாளிகளுக்குச் சாதகமா இருக்கு. மீ டூ வந்துச்சு. வந்த வேகத்துல போயிடுச்சு. எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னு யாரெல்லாம் புகார் தந்தங்களோ, அவங்க வாழ்க்கையெல்லாம் போயிருச்சு. யார்மேல பழிசுமத்தினாங்களோ அவங்கயெல்லாம் ஜாலியா சுத்துறாங்க. சட்டங்களைத் தீவிரமாக்கினா மட்டும்தான் இது மாறும்.

தவிர, எதார்த்தமா பேசணும்னா, ஆபாசப்படம் பார்த்து காமத்தைத் தணிச்சிக்கிட்டவங்களுக்கு இப்போ அதுக்கும் வழியில்லை. போர்னோகிராஃபியைத் தடை பண்ணிட்டாங்க. எல்லாப் பக்கமும் தடை மனிதர்களை இந்த மாதிரி மிருகங்களா ஆக்கிடுது. சில நகரங்கள்ல மட்டுமே விபசாரம் லீகல். நாடு முழுவதும் விபசாரத்தை லீகலாக்கிடலாம். இதைச் செய்தால், பாலியல் கொடுமை முடிவுக்கு வருமான்னு தெரியலை. குறையலாம்.''

"உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சைக்கிளை மிதிப்பேன்" - உமாதேவி, திரைப்பட பாடலாசிரியர்

''பாலியல் வன்முறைத் தொடர்பாகக் கருத்து சொல்ல வேண்டுமென்று நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. தனக்குக் கீழே ஒருவர் இருக்க வேண்டும் என்கிற இந்திய மனநிலைதான் இதற்கெல்லாம் காரணம். பல காலங்களாக வீட்டுக்குள்ளே இருந்த பெண்கள் இப்போதுதான் கல்வி, வேலைவாய்ப்பு என்று வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் அறிவு, திறமை எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, அவள் பெண் உடலைக்கொண்ட ஒரு காரணத்துக்காகவே அவளை பாலியல் வன்கொடுமை செய்வது, முகத்தில் ஆசிட் வீசுவது என்றிருக்கிறது இந்தச் சமூகம். ஒரு திஷா அல்ல, பல திஷாக்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான அத்தனை கதவுகளும் இந்தியாவில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணாக, ஒரு பேராசிரியராக, நம் அடுத்த தலைமுறையை இந்த மண்ணில் எப்படி வாழ வைக்கப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது.

உமாதேவி, திரைப்பட பாடலாசிரியர்
உமாதேவி, திரைப்பட பாடலாசிரியர்

கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே பாலியல் தொல்லைகளை சந்தித்திருப்பார்கள். எனக்கும் அப்படி நிகழ்ந்திருக்கிறது. நான் கல்லூரிப் படிப்புக்காக என்னுடைய கிராமத்திலிருந்து டவுனுக்குத்தான் தினமும் சென்று வர வேண்டும். சைக்கிளில்தான் செல்வேன். மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் சீக்கிரமே இருட்டிவிடும். நான் வருகிற வழியில் ஆண் கும்பலொன்று உட்கார்ந்திருக்கும். அவர்களைக் கடக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் சைக்கிளை மிதிப்பேன். கேலி செய்வதைத்தாண்டி, என் சைக்கிள் பின்னால் கத்திக்கொண்டு ஓடி வருவது, இன்னொரு சைக்கிளில் என்னைத் துரத்துவது, என் மீது கல்லை விட்டெறிவது என்று என்னைத் தொல்லை செய்வார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து ஊருக்குள் நுழைவதற்குள் தினம் தினம் செத்துப் பிழைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்து, அந்தச் சம்பவத்தை விவரிக்கும்போது இப்போதும் எனக்கு படபடப்பாக வருகிறது.''

''பிள்ளைகளை வெளியே அனுப்ப பயமா இருக்கு'' - தேவதர்ஷினி, நடிகை

''திஷாவோட மரணம் வரைக்குமே குரூரமான பாலியல் வன்முறைகள்ல கவனிச்சீங்கன்னா, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ட்ரிங்க் பண்ணியிருப்பாங்க. ஆல்கஹால் ஷாப்ஸை மூடறது, சட்டங்களைக் கடுமையாக்கிறதுன்னு ஏதாவது செஞ்சாதாங்க பெண்களையும் குழந்தைகளையும் காப்பாத்த முடியும். நைட் 8 மணிக்கு, 9 மணிக்குக்கூட இப்படியொரு கொடுமை நடக்குதுன்னா, பெண்கள் மறுபடியும் வீட்டுக்குள்ளேயே போயிடணுமா? இன்னொருவரின் உடலை அப்யூஸ் செய்வதற்கு நமக்கென்ன உரிமை இருக்கு? பிள்ளைகளை வெளியே அனுப்ப பயமா இருக்குங்க. யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படத் தோணுது'' என்றவர் தன் வாழ்வில் நிகழ்ந்த அந்த வலி மிகுந்த சம்பவத்தையும் சில வரிகளில் பகிர்ந்தார்.

தேவதர்ஷினி, நடிகை
தேவதர்ஷினி, நடிகை

''வளர்ந்த பிறகும் சரி, வேலைபார்க்கிற இடங்கள்லயும் சரி, எனக்கு எந்தக் கசப்பான அனுபவமும் நிகழ்ந்ததில்லை. என்னோட இயல்புகூட இதுக்குக் காரணமா இருக்கலாம். பாலியல் தொல்லைகளைப் பொறுத்தவரைக்கும் இவங்களுக்கு ஏன் நடக்குது; அவங்களுக்கு ஏன் நடக்கலைங்கிறதுக்கு காரணங்கள் சொல்ல முடியாது. அதுதான் வயசு வித்தியாசம் இல்லாம நடக்குதே... நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்போ இப்படியொரு கசப்பான அனுபவம் எனக்கும் நிகழ்ந்திருக்கு. ஆனா, என்னோட பேரண்ட்ஸ் நான் சொன்னதை காதுகொடுத்து கேட்டு, எனக்கு சப்போர்ட்டா இருந்ததால, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வந்துட்டேன். ஆனா, அந்தப் படபடப்பு, சைக்காலஜி படிச்ச என் மனசுக்குள்ள இன்னமும் இருக்குங்கிறதுதான் உண்மை.''

''அந்தத் தயக்கத்துலயே நகர்ந்து வந்திடுவேன்'' - அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர்.

''திஷா மரணத்துக்கு அப்புறம் அந்தப் பொண்ணு தன் சகோதரிக்கு போன் பண்ணதைவிட போலீஸ்க்கு போன் பண்ணியிருக்கலாம், பெப்பர் ஸ்பிரே வெச்சிருந்திருக்கலாம்னு நிறைய பேர் சொல்றதைக் கேட்டேன். அதாவது, பொண்ணுங்க நீங்கதான் உங்களைப் பாதுகாத்துக்கணும்னு சொல்றாங்களே தவிர, பாலியல் வன்முறை தப்புன்னு ஆண்கள்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாங்க. சமீபத்துல ஒருவர், கேர்ள்ஸ் உங்க பேக்ல காண்டம் வெச்சுக்கோங்க. யாராவது பாலியல் தொல்லை கொடுத்தா பயன்படுத்திக்கோங்க. நீங்க போலீஸ்ல புகார் பண்ணிடுவீங்களோன்னுதான் ஆண்கள் கொலை பண்றாங்கன்னு சொல்லிருக்கார். இந்த மாதிரி ஆண்களை என்ன சொல்றதுன்னே தெரியல. டீன் ஏஜ்ல இருக்கிற சின்ன பசங்ககூட இந்த மாதிரியான செயல்கள்ல ஈடுபடறதைப் படிக்கிறப்போ பயமா இருக்கு.

அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர்.
அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டீங்கன்னா, இப்போ கே.ஜி படிக்கிற ஆண் குழந்தைங்க வெச்சிருக்கிட்டிருக்க பெற்றோர் எல்லாரும், இப்போதிருந்தே தங்களோட ஆண்குழந்தைகளுக்கு பெண்கள்கிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு சொல்லித்தர ஆரம்பிக்கணும். அப்போதான் 20 வருஷம் கழிச்சு, இந்த அசிங்கமெல்லாம் தெரியாத ஓர் ஆண் தலைமுறை உருவாகும். பாலியல் தொல்லையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு சொல்லிக்கிற மாதிரி பெருசா நடந்ததில்ல. ஆனா, பஸ்ல போகும்போது சில உரசல்கள்... திரும்பிப் பார்த்தா நம்ம அப்பா மாதிரியோ, தம்பி மாதிரியோ ஒருவர் நின்னுக்கிட்டிருப்பார். அவங்கதான் நம்மளை உரசினாங்களான்னும் தெரியாது. வேற யாராது உரசிட்டு கிராஸ் பண்ணிப் போயிருக்கலாம். நாம, நம்ம பின்னாடி நிக்கறவங்களைத் திட்டி காயப்படுத்திட்டா சங்கடம்னு எதுவும் பேசாம நகர்ந்து வந்திருக்கேன்.''

''என்னை டார்கெட் பண்றவங்களை நேருக்கு நேரா பார்த்துப் பேசுவேன்'' - சரண்யா, சின்னத்திரை நடிகை

''திஷா சம்பவத்துல நாலு பேர என்கவுன்டர் செஞ்சவுடனே எல்லாரும் கொண்டாடினதுக்கு காரணம், மக்களுக்கு நீதித்துறை மேலே நம்பிக்கை போயிடுச்சு அல்லது பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்யறவங்களுக்குக் கொடுக்கப்படுற தண்டனைகள் மக்களுக்கு திருப்தியா இல்லைங்கிறதுதான் என் கருத்து. இப்படி என்கவுன்டர் நடந்ததால, மறுபடியும் குற்றங்கள் நடக்காம நின்னுடுச்சா என்ன... மறுநாளே காஞ்சிபுரத்துல இன்னொரு சம்பவம். ஒரு திஷாக்குத்தான் இப்படி நடந்திருக்கு. மத்தபடி, இந்தியா ரொம்ப பாதுகாப்பா இருக்கு என்ற மாதிரிதான் இருக்கு இந்த என்கவுன்டர். இது நம்மளை நாமே ஏமாத்திக்கிற விஷயம். ஷங்கர் படம் பார்த்தவுடனே இந்தியா வல்லரசு ஆயிடுச்சுன்னு ஒரு ஃபீலிங்கோட தியேட்டரைவிட்டு வருவோம் பாருங்க. அந்த மாதிரிதான் இதுவும் இருக்கு. ஒரு என்கவுன்டர் நடந்ததும் இந்தியாவுல இருக்கிற அத்தனை பெண்களும் இனிமே பாதுகாப்பா இருந்திருவாங்களா?

சரண்யா, சின்னத்திரை நடிகை
சரண்யா, சின்னத்திரை நடிகை

என்னை மாதிரி மீடியாவுல இருக்கிற பெண்கள், மத்த பெண்களைவிட இன்னமும் அதிக கவனமா இருக்கணும். ஆனா, நான் எல்லாரையும் கண்கள் பார்த்துப் பேசுற பொண்ணு. என் முகத்துலேயே நான் தைரியமான பொண்ணுங்கிறது தெளிவா தெரியும். என்னோட பாடி லாங்வேஜ்ல பயமே இருக்காது. என்னை டார்கெட் பண்றவங்களையும் நேருக்கு நேரா கண்ணைப் பார்த்துதான் பேசுவேன். தவிர, எனக்கே இந்த நபர், இந்தச் சூழ்நிலை நமக்குப் பாதுகாப்பில்லைன்னு தெரிஞ்சா அந்தப் பக்கம் தலைவெச்சும் படுக்க மாட்டேன்.''

''காவல் நிலையம் வரை சென்றிருக்கிறேன்'' - ஷெரின், நடிகை

''ஒவ்வொரு நாள் செய்தித்தாளைப் பார்க்கும்போதும் சரி, நியூஸ் ஆப்களைத் திறந்தாலும் சரி தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்த செய்திகளை அதிகம் பார்க்கறோம். இந்தியா போன்ற நாட்டில் ஏன் இதுபோன்ற சம்பவங்கள் குறையாமல் அதிகரிச்சிகிட்டே இருக்குன்னுதான் எனக்குப் புரியலை. திஷா சம்பவத்துக்குப் பிறகு இருட்டான பகுதிக்குப் போகவே பயமா இருக்கு. இந்த முழு விவகாரத்திலும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஒருபுறம் கொடூரமான பாலியல் வன்முறையும் கொலையும் அரங்கேறியிருக்கு. அதற்கான தண்டனையாக என்கவுன்டரைப் பலர் வரவேற்கிறாங்க. பலர் மாற்றுக்கருத்துகளையும் தெரிவிச்சிருக்காங்க. அதனால், இந்த என்கவுன்டர் சம்பவத்தை எப்படி எடுத்துக்கிறது என்ற குழப்ப நிலையிலேயே இருக்கேன்.

ஷெரின், நடிகை
ஷெரின், நடிகை

இதுபோன்ற பெரிய அளவிலான சம்பவங்கள் எதுவும் என் வாழ்க்கையில் நடந்ததில்லை. கல்லூரியில் படிச்சிகிட்டிருந்தபோது பேருந்தில் சில சீண்டல்கள் எனக்கும் என் தோழிக்கும் நடந்திருக்கு. அந்த நபரைப் பற்றி காவல்நிலையத்தில் புகார் தெரிவிச்சு நடவடிக்கை எடுக்க வெச்சோம். இப்போ நான் எங்கே போனாலும் தனியாகப் போகமாட்டேன். என் குடும்பத்தினர், நண்பர்கள்னு எனக்கு ஏற்ற பாதுகாப்போடுதான் போறேன். அதனால் பாதுகாப்பாக இருக்க முடியுது.''

"டச் பண்றது, கிள்றதுன்னுகூட எல்லை தாண்டியிருக்காங்க" - மேகா ஆகாஷ், நடிகை

"எல்லாப் பெண்களிடமும் தாங்கள் அனுபவிச்ச பாலியல் கொடுமைகளைப் பத்தி சொல்றதுக்கு ஏதாவது ஒரு கதை இருக்கும். நானும் இது மாதிரி துன்புறுத்தல்களை, நான் காலேஜ் படிக்கிறபோதே நிறைய சந்திச்சிருக்கேன். தோழிகள்கூட வெளியில போறப்போ, தனியா ரோட்ல நடந்து போறப்போ, சிலர் கத்துவானுங்க, விசில் அடிப்பானுங்க. சில நேரத்துல எங்க அனுமதியே இல்லாம எங்கள வீடியோ எடுப்பானுங்க. சில பேர் எங்களை டச் பண்றது, கிள்றதுன்னுகூட எல்லை தாண்டியிருக்காங்க. சமீபத்துல என் தங்கை வெளியில போயிருந்தப்போ அவளை யாரோ கார்ல ஃபாலோ பண்றாங்கன்னு பயந்து போய் எனக்கு போன் செஞ்சா. அப்புறம் என் ஃப்ரெண்ட்ஸ் உதவியோட அவளை பத்திரமா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தோம்.

மேகா ஆகாஷ், நடிகை
மேகா ஆகாஷ், நடிகை
`பாலியல் குற்றங்களும்  சினிமாவும்...!' - ஒரேமேடையில் முரண்பட்ட கனிமொழி - குஷ்பு

இந்த மாதிரி சம்பவங்கள் தினம் தினம் நடந்துகிட்டுதான் இருக்கு. அதுல சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருது. பல விஷயங்கள் வர்றதில்ல. திஷாவுக்கு நிகழ்ந்த மாதிரி பாலியல் துன்புறுத்தல்களைப் பண்றவங்க அவங்களாத்தான் திருந்தணும். கண்டிப்பா அவங்க வீட்லேயும் பெண்கள் இருப்பாங்க. நாளைக்கு அவங்களுக்கும் இதே மாதிரி நிகழ்வுகள் நடக்கலாமில்லையா? இதை நெனச்சுப்பார்த்தாவது பெண்கள்கிட்ட பாலியல் அத்துமீறல் செய்றவங்க மாறணும். அந்த மாற்றம் நிகழ்ந்தா மட்டும்தான் பாலியல் வன்கொடுமைகள் குறையும்.''

அடுத்த கட்டுரைக்கு