ஆண்மையின்மையை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடிப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு குறித்து விசாரித்தபோது, மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஏகப்பட்ட நகை, சீர்வரிசை பொருள்கள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், கணவர் மனைவியோடு சேர்ந்து வாழவில்லை. புகுந்த வீட்டிலுள்ளவர்கள் பல கொடுமைகளைச் செய்துள்ளனர்.
இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் கணவர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனைவி, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், மோசடி செய்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி அப்பெண், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ``கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். என் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. என்னுடன் குடும்பம் நடத்துவதில் அவருக்கு ஆர்வம் இல்லை.

அவருக்கு ஆண்மைக்குறைவால் முதல் திருமணம் தோல்வியில் முடிந்துள்ளது. அதை மறைத்து உண்மையைக் கூறாமல் கணவரும் அவர் குடும்பத்தினரும் என்னை மணம் முடித்தனர். இதைத் தெரிந்துகொண்டதால், என்னை தலாக் மூலம் விவகாரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது நான் கொடுத்த புகார், சாதாரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏமாற்றி மோசடி செய்தல் போன்ற பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
அரசுத்தரப்பில், ``இந்த புகார் முதற்கட்ட விசாரணைக்காக சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும் எப்.ஐ.ஆரில் மாற்றம் செய்வது குறித்து காவல்துறையினர் பரிசீலிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

திருமணத்துக்கு பின்பு இந்த விஷயம் தெரியவந்த நிலையில் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
ஆகவே, மனுதாரர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 417, 420 ஆகிய பிரிவுகளை வழக்கில் சேர்க்க வேண்டும். 4 மாதங்களில் விசாரணை நடதி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கல்வி, வேலை, உடல்நலத் தகுதியை மறைத்து மோசடியாக திருமணம் செய்பவர்களுக்கு இந்த வழக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்.