Published:Updated:

வீட்டிற்கே சென்று உதவிகள்... பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்களை மீட்கும் காவல்துறையின் `தோழி’

'தோழி' திட்டம்
'தோழி' திட்டம்

வேலைக்குச் சென்ற இடத்திலும் அந்த சிறுமி மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். அந்த சிறுமியின் கதையைக் கேட்டதும் நான் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டேன்.

சிறுமிகளும் பெண்களும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பாலியல் குற்றங்களை நிகழ்த்தும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நினைக்கும் நம் சமூகம், பாதிப்புக்குள்ளான பெண்கள் சகஜமாக வாழ வழி விடுவதில்லை. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை ஏதோ காலாவதியாகிவிட்ட பொருளைப் போல பார்க்கும் மனோபாவம் இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. குற்றவாளிகளைத் தண்டிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையளித்து சகஜமாக வாழ வைப்பது. `தோழி’ என்ற திட்டத்தின் மூலம் அந்த பணியை முன்னெடுத்திருக்கிறது சென்னை காவல்துறை.

தோழி
தோழி

"பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் வீடுகளுக்கே சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் பேசி நம்பிக்கையை விதைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணியில், 70 பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் இதுவரை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் என 400 பேரைச் சந்தித்து, உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்கியுள்ளனர்" என்று அறிவித்திருக்கிறார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்.

இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த கூடுதல் கமிஷனர் தினகரனிடம் பேசியபோது, ``குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக `போக்ஸோ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்குவது, அவர்கள் மறுவாழ்வுக்கான உதவிகளைச் செய்வது, குற்றம் ஏற்படாமல் தடுப்பது எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்டது போக்ஸோ சட்டம். இதில் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கும்தான் அதிகளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

கூடுதல் கமிஷனர் தினகரன்
கூடுதல் கமிஷனர் தினகரன்

கடந்த வருடம் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சந்தித்தேன். ஏழ்மையான குடும்பம். நன்றாகப் படிக்கக் கூடியவள். படிப்பில் தீவிரமாக இருந்த அந்த சிறுமி, ஓர் அரக்கனால் பாலியல் கொடுமைக்கு ஆளாயிருக்கிறாள். `அது உன் தவறு இல்லை’ என்று தைரியம் சொல்லி அந்த சிறுமியை பள்ளிக்கு அனுப்பவேண்டிய அவளின் பெற்றோரோ, படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பியிருக்கின்றனர். வேலைக்குச் சென்ற இடத்திலும் அந்த சிறுமி மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். அந்த சிறுமியின் கதையைக் கேட்டதும் நான் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டேன்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுமிகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்களது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மனதளவில் சிதைந்துபோயிருக்கும் சிறுமிகள் படிப்பைக் கைவிட்டுவிட்டாலோ குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டாலோ அவர்கள் எதிர்காலம் அவ்வளவுதான்.

எனவே, அப்படியான குழந்தைகளைக் கண்டறிந்து மறுவாழ்வுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. அப்போது உருவானதுதான் `தோழி’ திட்டம். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடுகளுக்கு வாரம் இருமுறை பெண் காவலர்களை சாதாரண உடையில் அனுப்பி, அந்த சிறுமிகளுடன் உரையாட வைத்து அவர்கள் சூழலுக்கேற்ப ஆலோசனைகளையும் சட்ட ரீதியான உதவிகளையும் வழங்கலாம் என முடிவு செய்தேன்.

அப்போதைய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் இதைச் சொன்னபோது, உடனே ஆரம்பிக்கலாம் என்று ஆர்வத்துடன் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இப்போதைய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலும் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்துகிறார். மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் 70 பெண் காவலர்களுக்கு இதற்காக பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 400 குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

`தோழி’ திட்டம்
`தோழி’ திட்டம்

`நீ பாதிக்கப்பட்டவள்தான்... உன் மீது எந்தத் தவறும் கிடையாது' என்று அவர்களுக்குப் புரிய வைக்கும்போது, அதுவும் போலீஸே நேரில் சென்று சொல்லும்போது அவர்கள் தன்னம்பிக்கை பெறுகின்றனர். குற்றவாளிகள் குடும்பத்தினரிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தாலும் எங்களுக்குத் தெரியப்படுத்துகின்றனர். இந்த திட்டம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது” என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது மட்டுமல்ல, அவர்களுக்கு பக்கபலமாகவும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த திட்டம்.

அடுத்த கட்டுரைக்கு