Published:Updated:

குடிக்கு அடிமையான கணவன், கல்யாணமாகியும் வீடு வாங்கித்தந்த மகள்! -நெகிழும் சென்னை இந்திரா

"பசங்களே பெத்தவங்களைக் கைவிடுற காலத்துல, பொண்ணோட அன்புதான் என் வாழ்க்கைக்குப் பெரிய பிடிப்பா இருக்கு."

indira
indira

கணவரின் மதுப்பழக்கத்தால், குடும்ப வாழ்க்கையில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த இந்திரா. `நிலைமை மாறும்' என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர், மகளை நல்ல முறையில் வளர்த்துப் படிக்கவைத்திருக்கிறார். இந்திராவை மகள் கைவிடவில்லை.

indira
indira

திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்றாலும், சொந்த வீடில்லாத பெற்றோருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கிக்கொடுத்திருக்கிறார். வீட்டின் மதிப்பு 27 லட்சம் ரூபாய்! இதுகுறித்து விகடனுக்குக் கடிதம் அனுப்பிய இந்திராவிடம் பேசினோம்.

``என் பூர்வீகம் கிருஷ்ணகிரி. பி.எஸ்ஸி படிச்சிருக்கேன். கல்யாணமானதும் கணவரின் ஊரான சென்னையில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினோம். கணவர் தனியார் நிறுவனத்துல வேலை செய்தார். நான் ஒரு ஸ்கூல்ல வேலைக்குப் போனேன். கணவருக்கு ஏற்கெனவே இருந்த குடிப்பழக்கம் ரொம்பவே அதிகமாச்சு. அதை நிறுத்த குடிமறுவாழ்வு மையத்துக்கு கூட்டிட்டுப்போனேன். எதுக்குமே அவர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கலை.

indira
indira

கணவரின் சிகிச்சை செலவுக்கு நிறைய செலவாகிடுச்சு. அவர் எந்த வேலையிலயும் நிலையா இல்லை. ஒவ்வொருநாள் வாழ்க்கையும் போராட்டமாச்சு. சிரமப்பட்டு மகளை இன்ஜினீயரிங் படிக்கவெச்சேன். படிப்பு முடியிறதுக்குள்ள வேலை வாங்கிட்டா. சில மாதங்களுக்கு முன்னாடிதான் அவளுக்கு கல்யாணம் செய்து வெச்சேன். மகளும் சென்னையில்தான் வசிக்கிறாள்.

நானும் கணவரும் வாடகை வீட்டில்தான் வசித்தோம். நாங்க சொந்த வீட்டில் வசிக்கணும்னு ஆசைப்பட்ட மகள், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்ட் வீடு ஒன்றை லோன் போட்டு எங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கா. அதற்காக, மாதம்தோறும் இ.எம்.ஐ கட்டிட்டிருக்கா. ஆண் பிள்ளைகளே பெத்தவங்களைக் கைவிடுற காலத்துல, பொண்ணோட அன்புதான் என் வாழ்க்கைக்குப் பெரிய பிடிப்பா இருக்கு" என்கிறார் இந்திரா, மெல்லிய புன்னகையுடன்.