Published:Updated:

`கொலம்பியப் பெண்களுக்கு என் வெற்றி ஒரு வழித்தடம்' -முதல் தன்பால்ஈர்ப்பு பெண் மேயர் கிளாடியா லோபஸ்

தன்பால் ஈர்ப்பு பெண்ணான இவரின் வெற்றி ஒரு புது மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Claudia López
Claudia López

கிளாடியா லோபஸ் (Claudia López), கொலம்பியாவின் தலைநகரான போகொடாவின் முதல் பெண் மேயராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 49 வயதான கிளாடியா, 35.2% வாக்குகளுடன் தன்னை எதிர்த்து நின்ற லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்லோசை 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

போகொடாவில் மேயர் பதவி என்பது பிரதமர் பதவிக்கு அடுத்த முக்கியமான ஒரு பதவியாகக் கருதப்படுகிறது.

Claudia López
Claudia López

யார் இந்த கிளாடியா லோபஸ்?

பத்திரிகையாளரான கிளாடியா லோபஸ், க்ரீன் அலையன்ஸ் கட்சியில் சேர்ந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். எதிர்க்கட்சியின் மீதான, இவரின் காத்திரமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் துணிச்சலான பெண்ணாக இவரை அடையாளம் காட்டியது. அது மட்டுமல்லாது, தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் கிளாடியா லோபஸின் உயிருக்குப் பலமுறை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஒருமுறை நாட்டை விட்டு வெளியேரும் நிலைக்கும் தள்ளப்பட்டார் கிளாடியா. இப்படி பல சோதனைகளைக் கடந்தே இன்று மேயராகத் தேர்வாகியிருக்கிறார்.

அதிக போலீஸாரை வேலையில் சேர்ப்பது குழந்தை தொழிலாளர்களைத் தடுப்பது, 45 வயது மேலானவர்களுக்குக் கல்வி வாய்ப்பை வழங்குவது போன்ற பல நல்ல திட்டங்களை முன் வைத்துள்ளார். பெண்கள் சார்ந்தும் LGBT உரிமை சார்ந்து மட்டுமல்லாமல் எல்லாத் துறைகளின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.

Claudia López
Claudia López

முதல் பெண் மேயராக இவரின் வெற்றி, ஒட்டுமொத்தப் பெண்களின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது தன்பால் ஈர்ப்பு பெண்ணான இவரின் வெற்றி ஒரு புது மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

``இந்த வெற்றி எனக்கு ஒரு சின்ன படிதான். ஆனால் கொலம்பியப் பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய வழித்தடம்” என்று தன் வெற்றி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.