Published:Updated:

வைரலாகும் 2K கிட்ஸ் `லவ்' வீடியோ... பிள்ளைகளை தெரிந்தே ஆபத்தில் சிக்க வைக்கிறோமா?

Video Chat (Representational Image)
Video Chat (Representational Image)

இங்கு சிறார்கள் என்று சொல்வது, வைரல் வீடியோவில் காட்சியளித்த சிறார்களைப் பற்றி மட்டும் அல்ல. அவர்களை இணையம் வழியாகப் பின் தொடரும் பல லட்சம் சிறார்களுக்காகவுமே இங்கு அக்கறைப்பட வேண்டியிருக்கிறது.

இரண்டு பேர் காதலிக்கிறார்கள். காதலன், காதலியிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேசுகிறான். அதே நேரத்தில் காதலியும் அவனிடம் பாசம் குறையாமல் பேசுகிறாள். இந்தக் காதலர்கள் இருவரின் மாமியார்களும் `மருமகளே...', `மருமகனே...' என அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு குடும்பமாக அவர்களின் காதலைக் கொண்டாடுகிறார்கள். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவுகின்றன. இதைப் பார்க்கும் பலரும் ஒவ்வொரு விதத்தில் தங்களின் கருத்தைப் பதிவிடுகிறார்கள். பலர் கேலி செய்கிறார்கள். பலர் மிகக் காட்டமாகவே கண்டிக்கிறார்கள். பெற்றோர் சம்மதத்தோடு நடக்கும் இந்தக் காதலுக்கு ஏன் இத்தனை கண்டனங்கள் என்கிறீர்களா?

நிற்க!

காதலிப்பவர்கள் 18 வயது பூர்த்தியானவர்கள் எனில், இதில் விமர்சிக்க ஏதுமில்லை. காதலிக்கும் இருவருமே சிறார்கள் எனும்போது, பதைபதைக்கச் செய்கின்றன அந்தக் காட்சிகள்.

Instagram
Instagram
Photo by Brett Jordan from Pexels

சிறுவன் ஒருவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக வீடியோ காலின் மூலமாகத் தன்னுடைய காதலிக்குப் போன் செய்து அழுகிறான். காதலியும் சிறுமிதான். அவனை தேற்றும் விதமாக, `அவரை அழ வேணாம்னு சொல்லுங்க அத்தை’ என அந்தச் சிறுமி அந்தச் சிறுவனின் தாயிடம் கூறுகிறாள். வீடியோ கால் வழியாக இதைக் கவனிக்கும் சிறுவனின் தாய், `மருமகளே...’ என்று பதிலுக்கு அழைத்து சிறுமியிடம் பேசுகிறார். இப்படியாக முதல் வீடியோ வைரல் ஆகிறது. அதன் பின்பு தொடர்ச்சியாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்த கதையும், அதற்கு அவர்களின் பெற்றோர் சம்மதித்த கதையும் அடுத்த வீடியோவாக வெளிவருகிறது. சிறுவர்கள் இருவருமே அதை வீடியோவில் பகிர்ந்து, அந்த வீடியோவையும் பகிர்கிறார்கள்.

பிறகு, அந்தச் சிறுவனும் சிறுமியும் டூயட் பாடல் ஒன்றின் பின்னணியில் தங்கள் காதலை வெளிப்படுத்துகிற வகையிலான வீடியோ ஒன்றும் வெளியாகிறது. அதோடு நிற்கவில்லை. உச்சகட்டமாக, சிறுவன் சிறுமியின் பெயரை நெஞ்சில் டாட்டூ குத்திக்கொண்டு, கூடவே இதயம் வரைந்துகொண்டு காதலியோடு வீடியோ காலில் பேசுகிறான். இதைப் பார்க்கும் சிறுமி, தான் அதைப் பார்த்து வருத்தம் கொள்வதாகத் தன் தாயிடம் சொல்கிறாள். சிறுவனோ, `அத்தை நீங்க சொல்லுங்க… எப்படி இருக்கு?’ என்று கேட்கிறான். உடனே சிறுமியின் அருகில் இருக்கும் அவளுடைய தாய் வீடியோ காலில் தோன்றி, `உனக்கு வலிக்கலையா?’ என்று அந்தச் சிறுவனிடம் கேட்க, `வலிச்சது அத்தை. அவளுக்காகப் பொறுத்துக்கிட்டேன்’ என்கிறான். `அத்தை'யும் அவன் சொல்வதைக் கவனிக்கிறார்.

இப்படியான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும்போது உளவியல் ரீதியாகப் பல்வேறு தரப்பினரும் அதைப் பல்வேறு கோணங்களில் விவாதிக்கிறார்கள். `பிஞ்சிலே பழுத்தவர்கள்' என்றும், `பெற்றவர்களே சிறார்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள்' என்பதுமாக ஏகத்துக்கும் வசைகள் வந்துவிழுகின்றன. 90-களில் பிறந்தவர்கள் பலர், `நாங்க இன்னும் சிங்கிளாவே சுத்திட்டு இருக்கோம், ஆனா, இந்த 2k கிட்ஸ் அராஜகம் தாங்கலை’ என்ற புலம்பல்களுடன் வீடியோவை வேகமாக வைரல் ஆக்குறார்கள்.

Representational Image
Representational Image

மனிதர்கள் காதலிப்பது இயற்கையில் நடக்கக்கூடிய ஒன்றுதான். காதலுக்கு சாதியோ, மதமோ, இன்ன பிற விஷயங்களோ தேவையில்லை எனலாம். ஆனால், காதலுக்கு நிச்சயம் தேவை... வயது. காதல் பிறக்கிற வயதுதான் இங்கு பேசுபொருள். ஆண், பெண் இருவருக்குமே இந்த வயதில்தான் காதல் பிறக்கும் என்று யாராலும் உறுதியாக அறிவியல்பூர்வமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், இந்த வயதில் வரும் காதல் செயல்பாடுகள் எந்த அளவுக்கு ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதை சிறார்களுக்குப் புரிய வைப்பதில் தவறேதுமில்லை.

மேற்சொன்ன வீடியோக்களை அடுத்து, இரண்டு தரப்புகளிடம் அவசியம் பேச வேண்டி இருக்கிறது. ஒன்று, சிறுவர்கள் தரப்பு. இன்னொன்று, பெற்றோர்கள் தரப்பு.

சிறுவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் காதல் வந்திருந்தாலும், அதை அவர்கள் பெற்றோரேகூட அனுமதித்திருந்தாலும் கல்வி, லட்சியம், வேலை, குடும்பம், சமூகத்தை அணுகும் விதம் எனப் பல படிகள் குறித்து இந்த வயதில் அவர்கள் போதுமான அளவுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனதளவில் முதிர்ச்சியடையாத இவர்கள், `காதல்’ என்கிற பெயரில் பேசிக்கொள்வதும் பழகிக் கொள்வதும், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட சில பொழுதுபோக்கு காட்சிகளின் நகல்களாகவே இருக்க முடியும்.

தவிர, வெறும் நெஞ்சில் பெயரை பச்சை குத்திக் கொள்வதும், மூச்சுக்கு முந்நூறு முறை `ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொள்வதும் மட்டும் காதல் அல்ல. காதல் என்பது ஒருவருக்கொருவர் சமன் செய்ய வேண்டிய பொறுப்புணர்வு. அந்தப் பொறுப்புணர்வுக்கு நிச்சயமாக போதிய வயது தேவை.

இளம் வயதில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சிறார்கள் போதிய கல்வியறிவு இல்லாமல், சரியான வேலையில்லாமல், வருவாய் இல்லாமல், போதுமான விழிப்புணர்வும் இல்லாமல் அறியாமையால் தவறிழைத்துவிட்டு பிறகு வருந்துகிற நிகழ்வுகளும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. குழந்தையை கருப்பை தாங்குவதற்கான உடல் தகுதியற்ற வயதில் பெண் பிள்ளைகள் திருமணம் செய்துகொண்டு, குறைபாடான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அவதியுறுவார்கள். மேலும், அவ்வாறு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு இறக்கிற இளம் வயதுப் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்கின்றன புள்ளி விவரங்கள்.

Representational Image
Representational Image
Image by Gerd Altmann from Pixabay

நிலைமை இவ்வாறாக இருக்க, போதிய கல்வியறிவு, மன முதிர்ச்சி ஏற்படாமல் உருவாகிற காதல், முதிர்ச்சியான வயதில் வருகிற காதலுக்கு இணையாகாது. `சிறார் திருமணம்தானே தவறு, சிறார் காதலில் என்ன தவறு?' என்று அடுத்த கேள்வி எழலாம். சிறார் காதல், முதிர்ந்த காதல் என தனிநபர் எவருக்குள்ளுக்கும் எழுகிற காதல் குறித்து விமர்சனம் வைக்க இயலாதுதான். ஆனால், சிறார் திருமணம் இங்கு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியிருக்க, இதுமாதிரியான வீடியோக்கள் வைரலாகும்போது என்ன ஆகும்? குழந்தைகள் சினிமாவில், அல்லது தங்களுடைய கைப்பேசியில் பார்த்துத் தெரிந்துகொண்ட காதலை, இப்போது தங்கள் வயது குழந்தைகளே, நிஜத்தில் அந்தக் காதலை அரங்கேற்றுவதைப் பார்க்கும்போது, மற்ற குழந்தைகளும் அதே வழியில் தாங்களும் செல்வதற்கான வாய்ப்புகளும் நிகழலாம்.

வெளியில் சொல்லப்படாத அல்லது சொல்ல முடியாத குழந்தைப் பருவ காதல் குறித்தல்ல இந்த ஆதங்கம். இப்படி வெளியில் பட்டவர்த்தனமாக, இதுதான் சரி என்பதுபோல் உலாவும் குழந்தைப் பருவ காதல் குறித்த பதிவுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை. சிறார்களைவிட போதுமான விழிப்புணர்வு அந்த சிறார்களின் பெற்றோர்களுக்குத் தேவை.

இதுமாதிரியான வயதில் வரும் காதல் குறித்து தங்கள் பிள்ளைகள் தங்களிடம் பகிர்ந்துகொண்டால், உடனே அவர்களைக் கண்டிக்கிற பெயரில் கடுமையான தண்டனை தர வேண்டும் என்று அவசியமில்லை. பக்குவமாக அவர்களின் முதிர்ச்சியின்மையைப் பற்றி எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் வயதில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றம் குறித்து புரிகிற அளவுக்குப் பேசி, அவர்களை குறிப்பிட்ட வயது வரை காதலுக்காகக் காத்திருக்கச் செய்வதே பெற்றோர் செய்ய வேண்டிய முதல் முக்கியமான விஷயம். இதற்கு பிள்ளைகள் உடன்பட முன்வரவில்லை என்றால், மனநல ஆலோசகரை அணுகி அதற்கான தீர்வைத் தேடலாம். குழந்தைகளுக்கு விருப்பமான வேறு செயல்களில் அவர்களின் கவனத்தைத் திருப்ப முயலலாம்.

அதைவிடுத்து குழந்தைகளைப் போலவே நாமும் பக்குவம் இல்லாமல் அதை அங்கீகரிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் எந்த நேரத்திலும் அந்தச் சிறார்களை விபரீத முடிவெடுக்கச் செய்துவிடலாம்.

Parenting
Parenting
Image by Free-Photos from Pixabay

`எங்களிடம் போதிய பணம் இருக்கிறது. எங்கள் குழந்தைகள் கல்வி குறித்து எங்களுக்கு அக்கறை இருக்கிறது. சிறுவயதிலேயே இவனுக்கு அவள், அவளுக்கு இவன் என்று நாங்கள் பேசி வைத்துவிட்டோம், எங்கள் அனுமதியோடுதான் வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்கள் இப்போது காதல்தான் செய்கிறார்கள். மேஜர் ஆன பிறகே திருமணம் செய்து வைப்போம் அல்லது செய்யாமல்கூட போவோம். இது எங்கள் விருப்பம்' என்று இதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர் என்ன வேண்டுமானாலும் தர்க்கம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால், நிச்சயமாகப் பாதிக்கப்படப்போவது சிறார்கள் மட்டுமே.

இங்கு சிறார்கள் என்று சொல்வது, வைரல் வீடியோவில் காட்சியளித்த சிறார்களைப் பற்றி மட்டும் அல்ல. அவர்களை இணையம் வழியாகப் பின் தொடரும் பல லட்சம் சிறார்களுக்காகவுமே இங்கு அக்கறைப்பட வேண்டியிருக்கிறது. எங்கோ, ஏதோ ஒரு வீடியோவில் யாரோ ஒரு சிறுவன் குடித்தான் என்பதைப் பார்த்து அதேபோல பல குழந்தைகள் மதுவைக் குடிப்பதுபோல் வீடியோக்கள் வெளியாகின. எங்கோ, யாரோ ஒரு சிறார் ஜோடி பெற்றவர்கள் சம்மதத்தோடு காதலிப்பதைப் பார்த்து, நாளை சிறார் திருமணம் செய்து கொண்டதாகவேகூட பல நிஜ வீடியோக்கள் வெளியாகலாம். இதனால் பல குழந்தைகள் பாதிக்கப்படலாம்.

Child
Child
Image by PublicDomainPictures from Pixabay

எந்த ஒரு செயலையும் பொதுவெளியில் செய்யும் முன் அதன் முன், பின் விளைவுகள் தங்களை மட்டுமல்ல, அடுத்தவரையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனம் கொள்வது அவசியம். ஒரு வீடியோ மிஞ்சிப் போனால் மில்லியன் கணக்கில் லைக்ஸ் வாங்கித் தரலாம். ஆனால், எப்போதும் இழந்த நிம்மதியை அந்த லைக்ஸ்களால் வாங்கித் தரவே முடியாது என்பதை உணர்ந்தால் போதும்.

குழந்தைகளைவிட பெற்றோர்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரமிது.

ஏனெனில் நிஜ உலகைவிட ஆன்லைன் உலகம் ஆபத்தானது. அதில் உள்ள நல்லனவற்றை மட்டும் நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம்!

- அர்ச்சனா

அடுத்த கட்டுரைக்கு