Published:Updated:

சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த தமிழ்ப் பெண்கள்; வீரம் விளைந்த கதைகள்! #IndependenceDay2022

Independence Day ( Independence Day )

நாடு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆயத்தமாக உள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, குறிப்பாக பெண்களின் பங்களிப்பு அளப்பறியது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகங்களைச் செய்த எண்ணற்ற தமிழகப் பெண்களில் சிலர் இங்கே...

சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த தமிழ்ப் பெண்கள்; வீரம் விளைந்த கதைகள்! #IndependenceDay2022

நாடு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆயத்தமாக உள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, குறிப்பாக பெண்களின் பங்களிப்பு அளப்பறியது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகங்களைச் செய்த எண்ணற்ற தமிழகப் பெண்களில் சிலர் இங்கே...

Published:Updated:
Independence Day ( Independence Day )

வேலுநாச்சியார்

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள் வேலு நாச்சியார். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்று அறிந்தார். தன்னுடைய 16வது வயதில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதரின் மனைவியான வேலுநாச்சியார், வெள்ளை நாச்சியார் என்ற பெண் குழந்தையை பிரசவித்தார். சிவகங்கை செழிப்புடன் இருப்பதை அறிந்த ஆற்காடு நவாப் முகம்மது அலி, தனது படைகளை அனுப்பி மன்னரிடம் கப்பம் கட்ட சொல்லி உத்தரவிட்டார். கப்பம் கட்ட மறுத்த முத்துவடுக நாதர் மீது ஆங்கிலேயே படையின் உதவியுடன் படையெடுத்த நவாப் அலி, காளையார்கோவிலில் இருந்த அவரை வீழ்த்தி காளையார்கோவிலை கைப்பற்றினர்.

வேலு நாச்சியார்
வேலு நாச்சியார்

இதனையடுத்து பெரும் கோபம் கொண்ட வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் ஆலோசனையின் பேரில் தன் குழந்தையுடன், திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி என்ற ஊரில் சென்று தாங்கினார், 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த இவர், திண்டுக்கல் நவாப் ஹைதர் அலி உதவியுடன் பெரும் படையை திரட்டி கொண்டு 1780-ல் தன் படைகளை மூன்றாகப் பிரித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றார். வருடந்தோறும் விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும் பங்கு பெரும் பூசை நடைபெறுவது வழக்கம், வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் சென்றது மட்டுமல்லாமல், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய வேலுநாச்சியார் ஆங்கிலேயே கோடியை கீழிறக்கி, தங்கள் நாட்டு கொடியை பறக்கவிட்டார். இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றிபெற்ற ஒரே அரசி வேலு நாச்சியார்.

கடலூர் அஞ்சலையம்மாள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரை சேர்ந்த அஞ்சலை அம்மாள், 1890-ம் ஆண்டு பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதல் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்த அஞ்சலை அம்மாள், 1921-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இதில் கலந்து கொண்டதன் மூலம், தென்னிந்தியாவில் இருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தன்னுடையது என்று இல்லாமல் தனது குடும்பத்தினருக்கு என இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பெரும் பணத்தை செலவிட்டார்.

அஞ்சலை அம்மாள்
அஞ்சலை அம்மாள்

தொடர்ந்து 1927-ம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டம் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் தன்னுடைய ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். அங்கு சிறையிலேயே தன்னுடைய குழந்தையை வளர்த்தெடுத்த இவரை, அடிக்கடி காந்தி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1931-ம் ஆண்டு அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இவரை, 1932-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் இந்தப் போராட்டத்தின் காரணமாக ஆங்கிலேயே அரசு இவரை அனுமதிக்க மறுத்தது; இருப்பினும் இவர் காந்தியை சந்தித்தார். இதன் காரணமாக இவரை காந்தி, தென்னகத்தின் ராணி என்று அழைத்தார்.

ருக்மினி லட்சுமிபதி

சென்னையை சேர்ந்த ருக்குமினி லட்சுமிபதி 1892-ம் ஆண்டு பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பையும், கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தார். தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். பாரீசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட இவர், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். இதில் 1934-ம் ஆண்டு சென்னை மாகாண இடைத்தேர்தலிலும், 1937-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டசபை சென்றார்.

ருக்மிணி லட்சுமிபதி
ருக்மிணி லட்சுமிபதி

தொடர்ந்து 1946-47-ம் ஆண்டு அமைச்சராகப் பணியாற்றினார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமையும், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக 1930-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற இவர், உப்புசாத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சிறுவயதிலயே தந்தையை இழந்து, ஏழ்மை நிலையில் இருந்தபோதும் பள்ளிக் கல்வியை சிரமத்துடன் முடித்தார். தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் மதுரையில் பட்டம் முடித்த முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார். தொடர்ந்து தான் சார்ந்த சமூகம், ஏழைகளின் நலன் சார்ந்து இயங்கினார்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

காந்தியக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திரத்துக்காகப் போராடினார். அவரின் வழியிலேயே 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராடியதால் பல ஆண்டுகள் சிறையிலே கழித்தார். அதன்பின், வினோபா பாவேவின் நிலமற்றவர்களுக்கான பாதையாத்திரை போராட்டத்தில் கலந்து கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டர். இந்திய சுதந்திரம் பெற்ற பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றிருந்தவர் தன்னுடைய காதல் திருமணத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950வது வருடத்தில் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தன் கணவனுடன் இணைந்து ஏழை மக்களின் நலன், கல்வி மற்றும் நிலமற்றவர்களின் உரிமைக்காக பெரிதும் போராடினார்.

S. N.சுந்தராம்பாள்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் 1913-ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய தந்தை உள்ளூரில் மிக பெரும் பணக்காரராக இருந்தபோதும், எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். காந்தியின் சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர், 1928ல், 15 வயதாக இருந்தபோது, மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்காக கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.என். சுந்தராம்பாள்
எஸ்.என். சுந்தராம்பாள்

சுதந்திரப் போராட்டத்தின் போது பல போராட்டங்களில் பங்கேற்ற சுந்தராம்பாள், 1941 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பிறந்த மகனுடன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே காந்தி 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை' தொடங்கினார், அந்த போராட்டத்தில் கிருஷ்ணம்பாள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். இந்த போராட்டத்திலும் கைது செய்யப்பட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்திய இவர் ஒருபோதும் சிறை செல்ல தயங்கியது இல்லை. சுதந்திரத்திற்கு பின்னும் விவசாயிகளுக்கான பல பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அம்புஜதம்மாள்

சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்த ஸ்ரீனிவாச ஐயங்கரின் மகள் அம்புஜதம்மாள். தன்னுடைய பதினைந்து வயது வரை இயல்பான பணக்கார வாழ்க்கை வாழ்ந்த இவர், காந்தியையும், அவரின் மனைவி கஸ்தூரி பாவையும் நேரில் கண்டபின் எளிமையாக மாறியதுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இறுதிக் காலம்வரை எளிய கதர் ஆடையையே உடுத்தும் வைராக்கியத்தை கொண்டு அதன்படியே வாழ்ந்தவர். தொடர்ந்து அவர்களது சேவைகளைக் கண்டு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், அருகில் உள்ள பெண்களுடன் இணைந்து உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு, மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

அம்புஜதம்மாள்
அம்புஜதம்மாள்

மேலும் காந்தியின் வழியில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் பாடல்களைப் பொதுமக்களிடையே உரக்கப் பாடியபடி ஊர்வலம் செல்வது, அந்நியத் துணிகளை எரிப்பதுடன், கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். 1929-ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' என்ற சங்கத்தினை அமைத்தார். வீதி வீதியாகச் சென்று கதர் ஆடைகளை விற்பனை செய்தார். உப்பு சாத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், மற்றுமொரு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றபோது, சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றி பெண்கள் பலருக்கு கல்வி வழங்கினார். காந்தியின் ஆஸ்தான மகள் என்னும் அளவிற்கு இவரின் சுதந்திர போராட்ட பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது. மேலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை நிறுவினார், அங்கு ஏழைகளுக்கு இலவசமாக பால், மருந்துகள் மற்றும் கஞ்சி போன்றவற்றை வழங்கினர்.

சொர்ணதாம்பாள்

மதுரையை சேர்ந்த சொர்ணதாம்பாள் இயல்பிலேயே போராட்டம் குணத்துடன் இருந்தவர்,இவருடைய கணவரும் சுதந்திர போராட்ட வீரகள் என்பதால் இருவரும் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுதந்திர போராட்டத்தின் பல மறியல்கள், போராட்டங்கள் என ஈடுபட்ட இவரை ஆங்கிலேயே அரசு அடிக்கடி சிறையில் அடைத்தது. ஆனாலும் தொடர்ந்து தனி நபர் சத்தியாகிரகம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு மூன்று மாதங்கள் சிறை சென்றார்.

independence day
independence day
i

இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட இவரை ஆங்கிலேயே அரசின் காவல்துறை கைது செய்ததுடன், கூட போராடிய பெண்ணுடன் சேர்த்து ஆடைகளின்றி அழகர் மலையில் ஒரு இரவில் விட்டு விட்டு சென்றனர். அதன் பின்னும் சொர்ணத்தாம்பாளின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

கே.பி. ஜானகியம்மாள்

மதுரையை சேர்ந்த இவர், 1917-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே நாடக துறைக்கு சென்றவர், அங்கிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தார். இதனால் ஐந்துமுறை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கமாக அவ்வியக்கத்திலே தொடர்ந்து இருந்தார். போராட்டத்தின் ஒரு பகுதியாக பல மேடை பேச்சுகளை பேசியுள்ளார். முக்கியமாக இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் எதிர்ப்பு கூட்டங்களில் பேசிய ஜானகி அம்மாள், "நாங்கள் அடிமைப்பட்டு கிடப்பதால்தானே எங்களை போரில் ஈடுபடுத்துகிறீர்கள்" என்றார்.

ஜானகி அம்மாள்
ஜானகி அம்மாள்

இதனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்தியப் பெண்மணி இவர்தான். பல போராட்டங்களில் ஈடுபட்டாலும் குறிப்பாக மதுரை ஹார்வி மில்லுக்கான போராட்டமும், நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்கு பின் அரசியலில் ஈடுபட்ட இவர், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலும், விவசாயிகள், நலிவடைந்தோரின் நலனுக்காக உழைத்தார்.

பத்மாசனி அம்மாள்

மதுரையை சேர்ந்த இவர், தன் கணவருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். காதர் ஆடையை விரும்பி ஏற்ற அவர், மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கணவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்ல, தனியாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். காவேரி யாத்ராவில் பங்கேற்று போராட்டத்தின் போதே பெண் குழந்தையை பிரசவித்த இவரின் குழந்தை மாறுபட்ட சூழலின் காரணமாக உயிரிழந்தது.

பத்மாசனி அம்மாள்
பத்மாசனி அம்மாள்

தொடர்ந்து கர்ப்பிணியாக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிறை சென்ற அவருக்கு, கருக்கலைப்பு ஏற்பட விடுதலையாகி வந்த பின் அயராது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். 1927-ல் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரிட்டிஷ் கர்னல் ஜேம்ஸ் நீலின் சிலையை வீழ்த்த விரும்பிய எஸ்.என்.சோமயாஜுலு தலைமையிலான இளைஞர்களுக்கு நிதியாக தனது நகைகளை வழங்கினார். இந்த போராட்டம் 'நீல் சிலை சத்தியாக்கிரகம்’ எனக் கூறப்படுகிறது. கதர் ஆடையை உடுத்திய அவர், அதன் விற்பனையை அதிகப்படுத்தவும், கதரையே ஆயுதமாக்கி போரிடவும் சகோதரிகள் சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார்.