Published:Updated:

`வன்முறைக்கு எதிராக அகிம்சை!' - பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல் கூறிய கருத்து சரியா?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் ட்வீட்டுகள் அவ்வப்போது சர்ச்சையாவது வாடிக்கையான விஷயம்தான். தன் கட்சியைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸின் ட்விட்டர் வீடியோ ஒன்றை ரீ-ட்வீட் செய்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

கடந்த வருடம், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம்தேதி, இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சாதனைப் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்தனர். அதில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் கடந்த நவம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

`பி.ஜே.பி-ல சேராம ஏன் ம.நீ.ம-ல சேர்ந்தேன்னா..!' - மோடியின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்த சினேகா

அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பெண்களுக்கான தற்காப்புக் கலையில் அதிக ஆர்வம்கொண்ட சினேகா மோகன்தாஸ் ஜனவரி 1-ம் தேதி, தான் `nunchuck’ சுற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பலரும் அதைப் பாராட்டியிருந்தனர்.

அதை ரீ-ட்வீட் செய்திருந்த கமல்ஹாசன், ``கண்ணியமும் கட்டுக்கோப்பான நடத்தையுமே உங்களுக்குப் பாதுகாப்பு. இவை இருந்தால் உங்கள் தற்காப்பு அகிம்சையாக மாறும். வன்முறைக்கும் அகிம்சைக்கும் சண்டை வராது. அப்போது, குற்றவாளி அம்பலப்பட்டுவிடுவான். நீங்கள் அடிக்கும் பெப்பர் ஸ்பிரேயைவிட உங்கள் நம்பிக்கை வலிமையானது" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். அதை வைத்துதான் சர்ச்சை வெடித்திருக்கிறது. பெண்கள் அடங்கித்தான் போக வேண்டுமா, பாதிக்கப்பட்ட பிறகு, குற்றவாளி அகப்பட்டு என்ன செய்வது என்றெல்லாம் அவர் கருத்துக்கு எதிராகக் கேள்வியெழுப்பப்படுகிறது.

சினேகா மோகன்தாஸ்
சினேகா மோகன்தாஸ்

இதுகுறித்து சினேகா மோகன்தாஸிடம் கேட்டோம், ``கமல் சார் சொன்ன விஷயம் கரெக்ட்டுதான். அவர் தப்பா எதுவும் சொல்லலை. ஆனா, அந்த விஷயம் போய்ச்சேர்ந்த விதம்தான் தப்பா இருக்கு. `நீங்கள் பெப்பர் ஸ்பிரே அடிச்சிட்டு ஓடுறதைவிட, உங்களுக்கு கான்ஃபிடன்ஸுடன் சேர்ந்து சுய பாதுகாப்பும் இருந்ததுன்னா... உங்களால அகிம்சை வழியிலேயே உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பெப்பர் ஸ்பிரே அடிக்கிறதைவிட உங்கள் தன்னம்பிக்கை வலிமையானது’ன்னுதான் அவர் சொல்லியிருக்கார். ஆயுதங்களே வேண்டாம். ஒருத்தன் ரேப் பண்ண வரும்போது நீங்க சைலன்டா இருக்கணும்னு அவர் எந்த இடத்திலும் சொல்லலை. அவர் என்ன சொல்ல வர்றார்ங்கிறதையே புரிஞ்சிக்காம சிலரும்... புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கிற சிலரும் அதைத் தவறாக சித்திரிக்கிறாங்க.

நீங்க சிந்திச்சுப் பாருங்க... நானும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலதான் இருக்கேன். தன் கட்சியில இருக்கிற ஒரு பொண்ணையே இப்படிச் சொல்வாராங்கிற அடிப்படை சிந்தனைகூட இருக்காதா? அவர் இப்படி தவறா சொல்லணும்னு ஏதாவது அவசியம் இருக்கா? `விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும். எங்களது அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்கப்படும்’ என்றெல்லாம் பெண்களோட நலனை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கும் ஒரு தலைவர், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தவறா கருத்து சொல்லுவாராங்கிற அடிப்படை புரிந்துணர்வு இருக்கணும். அவர் சொல்ல வந்தது வேற... புரிஞ்சிகிட்டது வேறயா இருக்கு. அதுதான் கஷ்டமா இருக்கு. பெண்களுக்கு நிச்சயம் தற்காப்பு கலைகள் தேவைதான். `நீங்க தற்காப்பு கலைகளைக் கத்துக்காதீங்க’ன்னு கமல் சார் சொல்லவே இல்லை. அவர் கருத்தை சிலர் மக்கள்கிட்ட தவறா கொண்டுபோறாங்க. காய்க்கிற மரம்தான் கல்லடி படும்னு சொல்வாங்க. இந்த விஷயத்துல அது சரியாத்தான் இருக்கு” என்றார்.

ஷாலினி
ஷாலினி

இதுதொடர்பாக மனநல மருத்துவரும் பெண் உரிமை ஆர்வலருமான ஷாலினியிடம் பேசினோம், ``பெண்ணின் உடல்மொழியைப் பற்றிச் சொல்ல வருகிறார் கமல். பெண்கள் கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஆண்களை எதிர்கொள்ளும்போது, அவர்களைச் சீண்டுவதற்கு ஆண்கள் அச்சப்படுவார்கள் என்ற கருத்தை நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், எல்லா சூழலிலும் கண்ணியமும் தன்னம்பிக்கையும் ஒரு பெண்ணைக் காப்பாற்றிவிடுமா என்ற புள்ளியில்தான் கமல் கருத்து சர்ச்சையாகிறது. நம் ஊரில் குழைவான ஒரு பெண் தன்மை இருக்கிறதல்லவா... `சிரிக்கிறது... முகத்தைக் காட்டுறது... முறைக்கிறது...’ என்று முகத்தில் அதிகமாக நெளிவுசுழிவுகளைக் காட்டுவது பெண்களுக்கு ஆபத்தானதுதான். ஆனால், எல்லா நேரத்திலும் வெறுமனே கண்ணியமும் தைரியமும் ஒரு பெண்ணைக் காப்பாற்றாது.

ஏதாவது ஒரே ஒரு சந்தர்ப்பத்தை மனதில் வைத்து அவர் கூறிய கருத்தை எல்லா சூழலுக்கும் பொருத்திப் பார்க்க முயல்கிறார்களோ என்றுகூட தோன்றுகிறது. ஈவ்டீசிங்கை மனதில் வைத்து அவர் இதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்குமானதாக நினைத்து அவர் சொல்லியிருந்தால் அதுகுறித்து தெரியாமல் சொல்லியிருக்கிறார் என்று அர்த்தம். சில இடங்களில் தைரியத்துடன் எதிர்கொள்ளும்போதுகூட, `உனக்கு என்ன திமிராடி?’ என்று மேற்கொண்டு சீண்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கமல் ஒன்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் எக்ஸ்பர்ட் கிடையாது. அவர் பிழையாகச் சொல்வதற்குகூட வாய்ப்பிருக்கிறது. இதில் இன்னொரு பார்வையும் இருக்கிறது. பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பெண்கள் பேசிக்கொள்ளலாம். திருநங்கைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று திருநங்கைகள் பேசிக்கொள்ளலாம். ஆனால், பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஓர் ஆண் சொல்லும்போது அதில், ஆதிக்க மனநிலை இருக்கிறது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`ஏராளமான பெண்கள் இதுமாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்து நல்ல பலன் கிடைத்திருக்கிறதாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்’ என்று சொன்னால் பிரச்னை இல்லை. ஒரு பெண்ணின் இடத்திலிருந்து அவர் அதைச் சொல்வதால் அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லையோ என்னவோ... அடுத்ததாக, எல்லா கேள்விகளுக்கும் கமல்ஹாசனிடம் பதில் இருக்குமென்று நான் நம்பவில்லை. இந்த நேரத்தில் இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் தெரியலை. இதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அவருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தேர்தலில் போட்டியிடுகிறார். அவரைத் தாக்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து தாக்குகிறார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு