Published:Updated:

ONV விருது: `அந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்தானா வைரமுத்து?' - சர்ச்சையும் விவாதங்களும்!

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து எதிரெதிர் தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலையாளக் கவிஞர் ஓ.என்.வேலுக்குறுப்பு நினைவாக வழங்கப்படும் ஓ.என்.வி விருது இந்த ஆண்டு தமிழ்க் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மலையாள மொழி தாண்டி பிற மொழிப் படைப்பாளருக்கு இவ்விருது இதுவே முதன்முறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விருதைப் பெறும் கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்படுவதில் இருவேறான சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

`தமிழில் இவரைக் காட்டிலும் மிகச் சிறந்த கவிஞர்கள் இருக்கும்போது இவருக்கு இவ்விருது வழங்குவது ஏற்புடையதல்ல' என்கிற விமர்சனம் இலக்கியத் தரப்பில் எழுப்பப்படுகிறது. அடுத்தது, பாடகி சின்மயி உள்ளிட்ட 18 பெண்கள் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆட்பட்டதாகக் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் நிலையில், இவருக்கு இவ்விருது வழங்கக் கூடாது என்கிற குரல் பல தரப்பிலிருந்தும் எழுகிறது.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை பார்வதி இது குறித்த தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு எதிரான `மீ டூ' முன்னெடுப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பலையால் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்படுவதை மறுபரிசீலனை செய்வதாக ஓ.என்.வி விருதுக்குழு அறிவித்திருக்கிறது. இதையடுத்து குழு தன் முடிவை அறிவிப்பதற்கு முன்னரே, வைரமுத்தும் அந்த விருதை திருப்பியளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் படைப்பாளியின் தனிப்பட்ட நடத்தையோடு அவரது படைப்பை தொடர்புபடுத்தக் கூடாது என்கிற ஆதரவுக் குரல்களும் எழுந்து வருகின்றன. எதிரெதிர் தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்...

``படைப்பாளியின் தனிப்பட்ட நடத்தையை அடிப்படையாக வைத்து அவரது படைப்பை மதிப்பிடுவது முறையற்றது” என்கிறார் எழுத்தாளர் ஆர்.அபிலாஷ்.

அபிலாஷ்
அபிலாஷ்

``வைரமுத்து மீது எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீது எந்த மறுப்பும் இல்லை. அவரை குற்றமற்றவர் என்றும் கூறவில்லை. அப்புகார் மீதான நடவடிக்கை தேவை. பாலியல் குற்றம் மட்டுமல்ல, பொருள்ரீதியான மோசடிகள், சாதி ரீதியான துவேசங்கள் போன்று பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் இருக்கிறார்கள். குற்றங்களுக்கு அப்பாற்பட்ட படைப்பாளிக்குத்தான் விருது வழங்கப்பட வேண்டும் என்றால் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.

எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதவர் என்கிற நம்பிக்கையில்தான் விருது வழங்கப்படுகிறது. அதற்காக அவர் அப்பழுக்கற்றவர் என்று ஆகிவிடுமா? `ஒன்று உத்தமனாக இரு… இல்லையென்றால் வெளியே சென்று விடு' என்கிற மனநிலையில் ஒரு படைப்பாளியை அணுகுவது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. தனிப்பட்ட குற்றங்கள் வேறு, படைப்பு வேறு என்பதை உறுதிபடக் கூறுகிறேன். பாலியல் குற்றச்சாட்டுக்காகப் படைப்பை நிராகரிப்பது ஏற்புடையதல்ல. அப்படி செய்வோமேயானால் நாம் லட்சியப் புருஷர்களுக்காகக் காத்திருந்துதான் விருது வழங்க வேண்டும்” என்கிறார் அபிலாஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு விருது வழங்குவதென்பது அக்குற்றச் செயலுக்கு உரிமம் வழங்குவது போலானது” என்று சாடுகிறார் கவிஞர் லீனா மணிமேகலை…

லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை

``சின்மயி உள்ளிட்ட 18 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர். இது குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இப்படியிருக்கையில் அவருக்கு விருது அறிவிப்பதன் மூலமும், தமிழக முதல்வர் அதை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிடுவதன் மூலமும் அவருக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குவது ஏற்புடையதல்ல.

அவர் மீது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டையும் அவரது படைப்பாற்றலையும் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடாது என்கின்றனர். அவரது கலையைத் தாண்டி அவருக்கென எந்த அடையாளமும் இல்லை. தனது கலையைக் கொண்டே அவர் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். அதைக் கொண்டுதான் இதுபோன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதிகாரத்தைக் கைக்கொண்டு அதைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் இது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரை ஆதரிப்பதன் மூலம் அவரது குற்றச்செயலை ஊக்குவிப்பது அன்றி வேறில்லை. நீங்கள் பெரிய பாடலாசிரியர், நீங்கள் செய்கிற துஷ்பிரயோகத்தை நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம் என்பதுபோலத்தான் அது. இதன் மூலம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் 18 பெண்களின் வலி, அவர்கள் இழந்த மரியாதை அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது.

எந்த ஒரு குற்றச் செயலாயினும் அதில் ஈடுபட்ட குற்றவாளி மீதுதான் அனைவரது கவனமும் இருக்கும். ஆனால், இதற்கு விதிவிலக்காகப் பாலியல் ரீதியான குற்றங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுகிறார்கள். இன்றைக்கும்கூட பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன் வைக்கப் பலரும் தயங்குவதற்குக் காரணம் இந்த victim blaming-தான். இது போன்ற குற்றச் செயல்கள் விசாரணைக்கே வர முடியாத நிலையில், அதை எப்படி நிரூபிக்க முடியும்?

உதாரணமாக, போக்ஸோ சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவாளிதான்தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். பாலியல் குற்றம் என்பது, சாட்சி, ஆதாரத்துக்கு வாய்ப்பில்லாத தன்மையைக் கொண்டிருப்பதால்தான், சட்டம் இவ்வாறு வரையறுத்துள்ளது. இந்நிலையில், குற்றம்சாட்டிய பெண்களை கேள்விக்குட்படுத்துவது முறையல்ல. மீ டூ முன்னெடுப்பின் மூலம்தான் வைரமுத்து மீதான 18 பெண்களின் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு வெளியே வந்திருக்கிறது. ஆரம்பத்திலேயே இதை வெளிப்படுத்துவதற்கான சூழல் பெண்களுக்கு இருந்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இங்கு இல்லை. இப்படியிருக்கையில் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதன் மூலம் இது போன்ற பாலியல் சீண்டல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஒரு பொருட்டல்ல என்று சொல்வது போன்றதாகும்.

சின்மயி
சின்மயி

வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் படைப்பை மட்டும் பாருங்கள் என்கிறார்கள். அப்படியே பார்த்தாலும் கூட வைரமுத்துவை விட ஆகச்சிறந்த கவிஞர்கள் தமிழில் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுத்து இலக்கியத்துக்குத் தொடர்பே இல்லாத பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்படுவதும் ஏற்புடையதல்ல. சுகதகுமாரி, எம்.டி.வாசுதேவன் நாயர், அக்கிதம் போன்ற மலையாள இலக்கியத்தின் ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வரிசையில் வைரமுத்துவை வைப்பது முறையற்றது” என்கிறார் லீனா மணிமேகலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு