Published:Updated:

கொரோனா ஊரடங்கு... பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன?

பாலியல் தொழிலாளி
பாலியல் தொழிலாளி ( படம்: க.பாலாஜி )

கொரோனா அறிகுறிகளுடன் ஒரு பாலியல் தொழிலாளி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?

தெற்காசியாவின் மிகப்பெரிய பாலியல் தொழிற்கூடங்களில் ஒன்று பங்களாதேஷின் ’தௌலத்தியா’. சுமார் 1,500 பாலியல் தொழிலாளர்களை உள்ளடக்கிய பகுதி. ஆசியாவின் அங்கீகரிக்கப்பட்ட 12 பாலியல் தொழிற்கூடங்களில் அதுவும் ஒன்று. கொரோனா தொற்று நெருப்பாகப் பற்றிப் பரவத் தொடங்கியதை அடுத்து, அந்த நாட்டு அரசு தௌலத்தியாவை மூட உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்களுடைய வாழ்வாதாரத்தை சமாளிக்க, ஒவ்வொருவருக்கும் 30 கிலோ அரிசி, 25 டாலர்கள் ரொக்கம், தற்காலிகமாக அவர்கள் வீட்டு வாடகைகள் தரத்தேவையில்லை எனப் பல்வேறு திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்தது.

கொரோனா பரவலை அடுத்து, உலகம் முழுக்கவே பாலியல் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
`இரவு உணவு உண்ணாமல் தூங்கச் செல்லும் குடும்பங்கள்!' -கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஜெர்மனியின் பொருளாதாரம், அதன் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலையும் சார்ந்திருக்கிறது. சானிடைஸர்கள், சுத்திகரிக்கப்பட்ட படுக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டும், அந்த நாட்டின் சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆள் நடமாட்டமில்லாமல் இருப்பதாக வருந்துகிறார்கள் பாலியல் தொழிலாளிகள். பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் அமைப்புகளாகத் திரண்டு அரசிடம் தொடர் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

45 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்!
இந்தியாவில் மொத்தம் 45 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில், தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர். சென்னையில் 6,000 பேர்.
ரச்னா முத்ரபோய்னா
ரச்னா முத்ரபோய்னா

இந்தியாவைப் பொறுத்தவரை பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன?

சமீபத்தில், ஹைதராபாத்தில் ஒரு பாலியல் தொழிலாளர் எதிர்கொண்ட சம்பவம் இது (அவரது பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது). அவர், திருநங்கை பாலியல் தொழிலாளர். அவருக்கு வயது 28. காய்ச்சல், இருமல் என கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார். அங்கே பரிசோதனை செய்யமுடியாது என அருகில் இருந்த வேறொரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். வேறொரு மருத்துவமனையிலும் சில காரணங்களைச் சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். இறுதியாக மற்றொரு மருத்துவமனையில் இவர் காய்ச்சல் காரணமாக மயக்கம் போட்டு விழவும், ’போலீஸிடம் கடிதத்தில் கையெழுத்து வாங்கிவாருங்கள் உங்களுக்கு சிகிச்சை தருகிறோம்’ என்றிருக்கிறார்கள். போலீஸ் வந்ததும் அவர்கள் முன்னிலையில் இவருக்கு சிகிச்சை தரப்பட்டிருக்கிறது. ஐதராபாத்தில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டாளர் ரச்சனா இதனை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இருப்பவர்களுக்குதான் அரசு நிவாரணம் கிடைக்கிறது. எங்கிருந்தோ விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள், ரேஷன் கார்டுக்கும் ஆதார் அட்டைக்கும் எங்கே செல்வது?
ரச்சனா, பாலியல் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டாளர்

“பாலியல் தொழிலாளர்களுக்கு மூலதனமே அவர்களது உடல்தான். ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த சமூக விலகல்தான் ஒரே தீர்வு என்பதால், தற்போது அவர்களுக்கான வருமானம் என்பதும் இல்லை. மற்றொரு பக்கம் மேலே சொன்னது போல சிகிச்சைக்காகப் பாலியல்தொழிலாளர்கள் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே அவர்கள் மற்றவர்களுக்கு பரவச் செய்துவிடுவார்கள் என்கிற தவறான பார்வையில் அவர்களுக்கான சிகிச்சைகளையும் மருத்துவர்கள் தருவதில்லை. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இருப்பவர்களுக்குதான் அரசு நிவாரணம் கிடைக்கிறது. எங்கிருந்தோ விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள், ரேஷன் கார்டுக்கும் ஆதார் அட்டைக்கும் எங்கே செல்வது? அதுவும் மும்பை, கொல்கத்தா போன்ற பகுதிகளில் இருக்கும் பாலியல் விடுதிகளின் அறைகள் அத்தனையும் தீப்பெட்டிகளைவிட சிறிய அளவில்தான் இருக்கும். இத்தனை நாள்கள் அவர்கள் அதற்குள் அடைந்துகிடந்தது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கான மன உளைச்சல்” என்கிறார் ரச்சனா.

இந்தியாவில், மொத்தம் 45 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர், சென்னையில் ஆறாயிரம் பேர். பாலியல் தொழிலே கிரிமினல் குற்றமாக இருக்கும் நாட்டில், இந்தப் பேரிடர் காலத்தில் அன்றாட வாழ்வை எதிர்கொள்வது பெரும் போராட்டம்தான். ஹைதராபாத், மும்பை போன்ற மற்ற மாநிலங்களிலாவது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அரசிடம் அவர்களால் கோரிக்கை வைக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழ்.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்

கணவர் விவாகரத்து செய்ததால் பிழைப்புக்காக வேலை தேடிய ரூபிணியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சூழல், பாலியல் தொழிலில் தள்ளியது. வயதான தனது அம்மா அப்பாவை பார்த்துக்கொள்வது, இரண்டு பிள்ளைகளைப் படிக்கவைப்பது என குடும்பத்தின் பொருளாதாரம் மொத்தமும் ரூபிணியின் உழைப்பில்தான். தான் பாலியல் தொழிலாளி என்பதைத் தன் பிள்ளைகளிடமிருந்து மறைத்துதான் இத்தனை வருடங்களாக குடும்பத்தைப் பராமரித்துவருகிறார்.

ஒருசிலருக்காவது தங்க வீடு இருக்கிறது. கோயம்பேடு, தி.நகர் போன்ற சென்னையின் மிகமுக்கியப் பகுதிகளில் வயிற்றுப்பிழைப்புக்காக தெருக்களிலேயே தங்கி பாலியல் தொழில் செய்பவர்களின் நிலை என்ன?
பி.ஏ.சாந்தி, இந்திரா விழிப்புணர்வு அமைப்பு
பாலியல் தொழிலாளர்
பாலியல் தொழிலாளர்
ஐஷ்வர்யா

“சாதாரண நாள்களில், கஸ்டமர்கள் அவர்கள் சொல்லும் இடத்துக்குச் செல்வோம். அல்லது வீட்டில் பிள்ளைகள் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கே வருவார்கள். ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கிடைக்கும். சில நாள்களில் நூறு ரூபாய்தான் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதில்தான் அம்மா அப்பாவுக்கு மாத்திரைகள் வாங்குவது, குடும்பத்துக்கு சாப்பாட்டுப் பொருள்கள் வாங்குவது... இவை போக, பிள்ளைகளின் படிப்புச் செலவு... ஆனால், லாக்டௌன் சமயத்தில் நாங்கள் கஸ்டமர்களைச் சந்திப்பது சாத்தியமில்லை. இதையும் மீறி சில கஸ்டமர்கள், 'நாங்களே காரில் அழைத்துச்செல்கிறோம்' என அழைக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்காது என என்ன நிச்சயம்? இந்தத் தொழிலுக்கு உடல்தான் மூலதனம். ஆனால் உயிரைப் பறிகொடுத்துவிட்டால் என் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள். அவர்களுக்காகத்தானே விதியென்று இந்தத் தொழிலைச் செய்துவருகிறேன்” என்கிறார் ரூபிணி.

பாலியல் தொழிலாளர்களுக்கான உடல் ஆரோக்கியம் சார்ந்த இந்திரா விழிப்புணர்வு அமைப்பை நடத்திவருகிறார், பி.ஏ.சாந்தி. பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் அதிலிருந்து மீட்கப்பட்டு, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொழிலாளிகளுக்கான உடல் ஆரோக்கியம் குறித்த களவேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வழியாக அவர்களுக்கான உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும்.

“வருமானமில்லை என்பது, பாலியல் தொழிலாளிகள் இந்த கொரோனா நாள்களில் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளில் ஒன்று. ஐந்து வருடங்களுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாலியல் தொழிலாளிகளுக்கான பொதுவான இடத்தைக் கேட்டு, அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், பாலியல் தொழில்குறித்து பகுத்தறிந்து புரிந்துகொள்ளக்கூடிய பார்வை மக்களுக்கும் இல்லை... அரசுக்கும் இல்லை. அதனால் தங்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமென அரசாங்கம் இடம் தர மறுத்தது. மற்ற எந்தத் தொழிலையும் போலதான் இதுவும் என அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அரசிடம் எங்களுக்காக எந்த உதவியும் கேட்கக்கூட முடியாத இக்கட்டான சூழல். தொண்டு நிறுவனங்கள் தரும் பணமும் உணவும் எத்தனை நாள்களுக்குத் தாங்கும்..? ஒரு சிலருக்காவது தங்க வீடு இருக்கிறது. கோயம்பேடு, தி.நகர் போன்ற சென்னையின் மிகமுக்கியப் பகுதிகளில் வயிற்றுப்பிழைப்புக்காகத் தெருக்களிலேயே தங்கிப் பாலியல் தொழில் செய்பவர்களின் நிலை என்னவென்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை மே மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், அவர்களது நிலையை அறியமுடியும். அவர்களைப் பார்த்து கையில் நூறு ரூபாயாவது கொடுத்துட்டு வரவேண்டும் ” என்கிறார்.

இத்தனைக்கும், சாந்திக்குமே பெரிய வருமானமில்லை. பாலியல் தொழிலை விட்டு பல வருடங்களாகியும் சமூகம் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், அடையாளப்படுத்திக்கொள்ள முடியாமல் தனியாகத்தான் வசிக்கிறார்.

``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்

பாலியல் தொழிலாளிகளுக்காக செயல்படும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் உதவிதான் இப்போது பல பாலியல் தொழிலாளர்களுக்குப் பசியைப் போக்குகிறது. அரசு, இவர்களுக்கும் தகுந்த உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வழியாகவே அவர்களுக்கான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு