Published:Updated:

மக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்!

கலக்கும் கூடலூர் மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
கலக்கும் கூடலூர் மருத்துவமனை

கலக்கும் கூடலூர் மருத்துவமனை

மக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்!

கலக்கும் கூடலூர் மருத்துவமனை

Published:Updated:
கலக்கும் கூடலூர் மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
கலக்கும் கூடலூர் மருத்துவமனை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மருத்துவ அடையாளமாகத் திகழும் ஆதிவாசி மருத்துவமனை, காலை 7 மணிக்கெல்லாம் பரபரப்பாகிறது. பனியர், குறும்பர், நாயக்கர் போன்ற பழங்குடிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பெரு மளவில் வசிக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் நிலைமை இன்னும் மோசம். பலதரப்பட்ட பாதிப்புகளால் கர்ப் பிணிகள், குழந்தைகள் உட்பட பல தரப் பினரும் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

பெரும் சிக்கலாக உருவெடுத்த சுகாதாரப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் கூட்டு முயற்சியாக 1990-ல் தொடங்கப்பட்ட ஆதிவாசி மருத்துவமனையால், பல்லாயிரக் கணக்கான மக்கள் பிணி நீங்கி மறுவாழ்வு பெற்றுள்ளனர். மருத்துவர், கணக்காளர், மனநல ஆலோசகர் உட்பட மருத்துவமனையின் நிர்வாகப் பணிகளைப் பெண்களே ஏற்று திறம்பட நடத்துவது கூடுதல் சிறப்பு. பழங்குடி களுக்குச் சேவை நோக்கத்தில் சிகிச்சையளித்து வரும் ஆதிவாசி மருத்துவமனைக்கு விசிட் அடித்தோம்.

மக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்!

நிலவுரிமைப் பிரச்னைக்காக இளமைக் காலத்திலேயே மக்களுடன் போராட்டக் களத்தில் இறங்கிய சீதா, உதவியாளராக இணைந்து மருத்துவமனையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக உயர்ந்திருக்கிறார். “நான் பனியர் சமூகத்தைச் சேர்ந்தவ. மருத்துவர்களான தேவதாசன் - ரூபா தம்பதியர், கிராமத்துல சேவை செய்யும் நோக்கத்துல கூடலூர் வந்தாங்க. அப்போ மக்களின் இறப்புகளைப் பார்த்து வருத்தப் பட்டவங்க, இங்கயே தங்கிட்டாங்க. மக்களுக்கு முதலுதவி செஞ்சு அருகிலுள்ள கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாங்க. இங்கிருக்கும் பழங்குடிகள் ரொம்பவே சென்சிடிவ்வானவங்க. அதட்டிப் பேசினாக்கூட பயந்திடுவாங்க. டாக்டர் பேசுறது மக்களுக்குப் புரியாது, மக்கள் பேசுற பாஷை டாக்டர்களுக்குப் புரியாது. இதனால, ஆஸ்பத்திரியில யாராச்சும் கோபப்பட்டு பேசிட்டா, எங்க மக்கள் பயத்துல ஓடி வந்திடு வாங்க. மறுபடியும் ஆஸ்பத்திரி பக்கமே தலைகாட்டமாட்டாங்க.

மக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்!

வேறு வழியே இல்லைங்கிற கட்டத்துலதான், பழங்குடியின மக்களுக்குப் பொதுவான கூட்டமைப்பாகத் திகழுற ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தின் மூலமா தனி ஆஸ்பத்திரி ஒண்ணு தொடங்க முடிவெடுத் தோம். கேரளாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியரான நந்தகுமார் - சைலஜாவும் அப்போ கூடலூர் வந்தாங்க. இந்த ரெண்டு தம்பதியினரின் முன்னெடுப்புல, ‘அஷ்வினி’ங்கிற சங்கத்தை ஆரம்பிச்சு, ஆதிவாசி சங்கம் மூலமா வாடகைக் கட்ட டத்துல சின்னதா ஆஸ்பத்திரியைத் தொடங்கி னோம். அப்போதே நானும் இங்க வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆரம்பத்துல நோயாளி களைத் தரையில படுக்க வெச்சுதான் சிகிச்சை கொடுத்தோம். அடுத்தகட்டமா ரெண்டு கட்டில் வாங்கினோம். அதுல படுத்தா கீழ விழுந்திடுவோம்னு மக்களுக்கு பயம். ஊசி போட்டுக்கவும், ஆபரேஷன் செஞ்சுக்கவும் பயந்துபோய் நோயாளிகள் இரவுல தப்பிச்சு ஓடிடுவாங்க. அவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வருவது பெரும்பாடு” என்று பழைய நினைவுகளில் மூழ்கியபடி கூறுபவர், செவிலியராகவும் பணியாற்றுகிறார்.

ஆரம்பகாலத்தில் மொபைல் கிளினிக் வசதியுடன் ஊருக்குள் சென்று மக்களுக்குச் சிகிச்சையளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி யுள்ளனர். பலனாக, நோயாளிகள் அதிகளவில் வரவே, இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தனியாக நிலம் வாங்கி, இந்த மருத்துவமனையைக் கட்டியுள்ளனர்.

செவிலிய கண்காணிப்பாளரான அம்பிகா, “முள்ளுக் குறும்பர் சமூகத்தைச் சேர்ந்தவ நான். சுத்துவட்டார கிராமங்கள்ல இருந்து இந்த ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு பஸ் செலவுக்குப் பணமில்லாம நிறைய நோயாளிகள் வீட்டுலயே இருந்துப்பாங்க. அதுக் காகவே ஆம்புலன்ஸ் வாங்கி, அவங்களை அழைச்சுகிட்டு வருவோம். பயிற்சி நர்ஸ் வேலையுடன், ஆஸ்பத்திரி யைச் சுத்தம் செய்யுறது, கேன்டீன் சமையல் வேலை எல்லாம் முடிச்சுட்டு, இரவுல டாக்டர் குழுவுடன் ஒவ் வொரு கிராமமா போய் மக்களுக்கு வைத்தியம் பார்ப் போம். தங்களுக்கு என்ன உடல்நல பாதிப்புனுகூட மக்களுக்குச் சொல்லத் தெரியாது. அவங்க கோபப் பட்டாலும், ரொம்பவே பொறுமையா சிகிச்சை கொடுப்போம். இன்னிக்கு மக்கள் எங்களுக்கு நல்லாவே ஒத்துழைக்கிறாங்க” என் கிறார் மகிழ்ச்சியுடன்.

சேவை நோக்கத்தில் மருத்துவர்கள் சிலரும், எம்.பி.பி.எஸ் முடித்த சிலர் பயிற்சி மருத்துவர்களாகவும் இந்த மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர். நகரப்பகுதியில் இருந்து வரும் மூத்த மருத்துவர்கள் சிலர் ஊதியம் பெறாமல் அறுவை சிகிச்சை செய்கின்றனர். இங்குள்ள 120 பணியாளர்களில் 80 சதவிகிதத் தினர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானோர் பெண்கள்.

மக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்!

மருத்துவக் கண்காணிப்பாளரான டாக்டர் மிருதுளா, இந்த மருத்துவமனையில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். “என் கணவர் இங்கே பல் மருத்துவரா வேலை செய்துட்டிருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு, இந்த ஆஸ்பத்திரியைப் பத்தி தெரிஞ்சு கிட்டேன். சேவை செய்யணும்னு நானும் இங்கே இணைஞ்சேன். இந்த வேலையும் கூடலூர் வாழ்க்கை முறையும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. பழங்குடி மக்களோட உணவுத் தேவையே ரேஷன் அரிசியையும் பருப்பையும் நம்பித்தான் இருக்கும். அதுவும் பத்தாம பல நாள்கள் பட்டினியா இருப்பாங்க. ஆரோக்கியமான காய்கறிகள் எடுத்துக்காம, ஊட்டச்சத்துக் குறைபாட்டால ரொம்பவே பாதிக்கப்படுறாங்க. அத்தியாவசியத் தடுப்பூசி களைப் போட்டுக்காம நிறைய குழந்தைகள் இறப்பதும் தொடர்கதையாச்சு. மதுப்பழக்கம் அதிகரிச்சு ஆண்களுடன், இளம் பசங்களும் கூட அதிகம் பாதிக்கப்படுறாங்க. வலிப்பு நோய், பிரசவகால ரத்தப்போக்கு உட்பட பல்வேறு பிரச்னைகளையும் இப்போ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்து, உயிரிழப்புகளையும் கணிசமா குறைச்சிருக் கோம். அதுக்குப் பின்னாடி ஏராளமா னோருடைய உழைப்பு இருக்கு. கூடலூர் வட்டாரத்துலயே இந்த ஆஸ்பத்திரியிலதான் அதிகளவுல பிரசவங்கள் நடக்குது” என்கிறார் உவகையுடன்.

20 வயதாகும் ப்ரியா, தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். “17 வயசுல கல்யாணமாகிடுச்சு. நிலையான வேலையில்லாததால, குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க முடியல. ஊட்டச்சத்துக் குறைபாட்டால சராசரி அளவைவிடவும் குறைவான எடையில இருக்கான். அதனாலதான் பையனை இங்க சிகிச்சைக்குக் கூட்டிட்டு வந்தேன். இதே ஊர்ல கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் பல இருந்தாலும், எங்க ஆதிவாசி ஆஸ்பத்திரியைத்தான் நாங்க முழுசா நம்புறோம்” என்றார்.

பல் மருத்துவர் தன்யா, “பழங்குடி மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குறதுதான் இந்த ஆஸ்பத்திரியோட நோக்கம். ஆனா, ஆரம்பகாலத்துல இருந்தே நிதி கிடைக்கிறதுல ஏகப்பட்ட சவால்கள். அதனால, பழங்குடி மக்கள்கிட்ட மிகக் குறைவான தொகை வாங்க முடிவெடுத் திருக்காங்க. கூடலூர் சுத்துவட்டாரத்துல 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு. ஒவ்வொரு குடும்பத்திலும் இப்போ சேவைக் கட்டணமா வருஷத்துக்கு 500 ரூபாய் கொடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்துறோம். இதையும் பல குடும்பங்களால கட்ட இயலாது. அவங்களுக்கும்கூட கட்டணமின்றி மருத்துவச் சேவை வழங்குறோம். இந்தத் தொகை மூலமா நிதி ஆதாரம் பெரிசா கிடைக்காட்டியும், ‘நாம காசு கொடுத்திருக்கோம். உடம்பு சரியில் லைனா நிச்சயமா நம்ம ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பார்த்துக்கணும்’ங்கிற உணர்வு மக்களிடம் அதிகளவுல ஏற்படுத்தி யிருக்கு. தமிழக அரசுகிட்ட இருந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியும் முறையா கிடைக்கிறதில்ல. தனியார் நிதியுதவியும் அதிகம் வர்றதில்ல. வேறு வழியில்லாம, எங்களை நாடி வரும் மாற்று சமூகத்தினருக்குக் குறைந்த கட்டணத்துல சிகிச்சை அளிக்கிறோம். அதேநேரம் பழங்குடி மக்களுக்கான எங்க சேவையில எந்த சமரசமும் செய்றதில்ல” என்று முடித்தார்.

வாழ்த்துகள் பெண்களே!