Published:Updated:

இறந்த தாயின் அரசு வேலைக்காக விவாகரத்து செய்த பெண்; கண்டுபிடித்த உச்ச நீதிமன்றம்; என்ன நடந்தது?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பணியில் இருக்கும்போதே மரணமடைந்த தன் தாயின் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பெண் ஒருவர் விவாகரத்து பெற்றுள்ளார். இதைக் கண்டுபிடித்த உச்சநீதிமன்றம், அவருக்கு அந்த அரசு வேலை கொடுக்ககூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

சட்டமும் அரசும் உதவி தேவைப்படுகிற மக்களுக்கென்று சில சலுகைகளை வழங்கினால், அதைக் குறுக்கு வழியில் அடைய நினைக்கிற ஒருசிலர் எல்லா காலத்திலும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று வந்தது.

சோம்யாஶ்ரீ என்ற இளம்பெண், `அரசுப் பணியாளரான தன் அம்மா வேலைபார்த்துக்கொண்டிருந்த போதே இறந்துவிட்டார். விவாகரத்தான தனக்கு, தன் அம்மா செய்து வந்த அரசு வேலையைக் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் அனிருத்த போஸ் அடங்கிய ஒரு பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த இடத்தில்தான் யாரும் எதிர்பாராத அந்த ட்விஸ்ட் நிகழ்ந்தது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay
வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

மனுதாரர் சோம்யாஶ்ரீயின் தாய், கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்ட அரசு அலுவலகத்தில் இரண்டாம் நிலை உதவியாளராக அரசுப் பணியில் இருந்தவர். இவர் பணி ஓய்வுபெறுவதற்கு முன்னரே, மார்ச் 25, 2012 அன்று இறந்துவிட்டார். அப்போது சோம்யாஶ்ரீக்கு திருமணமான புதிது. அம்மா இறந்து 6 மாதங்கள் கழித்து, கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மார்ச் 20, 2013-ல் விவாகரத்து கிடைத்த பிறகு, இறந்த தன் அம்மாவுடைய அரசு வேலையை தனக்கு வழங்குமாறு நீதிமன்றத்தை அணுகுகிறார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் அனிருத்த போஸ், `பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றுக்கொண்டு, விவாகரத்து கிடைத்த மறுநாளே கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு விண்ணப்ப மனு அனுப்பியிருக்கிறீர்கள். அரசு வேலை பெறுவதற்காகவே நீங்கள் இப்படி நடந்துகொண்டிருப்பது நன்கு புரிகிறது' என்று சொன்னதோடு, அரசு இயந்திரத்தை ஏமாற்ற முயன்றதற்காகவும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காகவும் கடும் கண்டனத்தைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சோம்யாஶ்ரீக்கு அவரின் அம்மாவின் வேலையை வழங்கவும் மறுத்துவிட்டது.

வழக்கறிஞர் சாந்தகுமாரி
வழக்கறிஞர் சாந்தகுமாரி

இதுதொடர்பாக, வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் பேசியபோது, ``பணியின்போதே இறந்த பெற்றோருடைய அரசு வேலை மகனுக்கு மட்டுமல்ல, மகளுக்கும் கருணை அடிப்படையில் தரப்படுகிறது என்பதுதான் உண்மை. இது திருமணமான மகளுக்கும் பொருந்தும். இப்படி வேலைபெற்ற மகள்கள், திருமணத்துக்குப் பிறகும் என் அம்மா/ என் அப்பாவைப் பார்த்துக்கொள்வேன் என்று உறுதிமொழியை எழுதித் தர வேண்டும்.

காதல் திருமணங்களில்தான் விவாகரத்து அதிகமா... நம் சமூகத்தில் பிரிவு ஏன் இன்னும் `நார்மல்' ஆகவில்லை?

இந்த வழக்கைப் பொறுத்தவரை, அந்தப் பெண் கருணை அடிப்படையிலான அரசு வேலையை நேர்மையான வழியிலேயே பெற்றிருக்க முடியும், அதைவிடுத்து, வேலைக்காகவே விவாகரத்து செய்தது, அதற்கு மறுநாளே வேலைக்கு மனு கொடுத்தது என்று அரசையும் நீதிமன்றத்தையும் ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார். அதனால்தான், உச்ச நீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு