Published:Updated:

மாமியாரின் சடலத்தை வீட்டுக்குள் அனுமதிக்காத மருமகள்... இறுதிச்சடங்கு செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

 மீனாம்பாள்
மீனாம்பாள்

'மாமியாரின் உடலை வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாது. மீறிக் கொண்டு வந்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று கூறி மீனாம்பாளின் மருமகள் உறவினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மீனாம்பாள். இவர் கணவர் நடேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மீனாம்பாளுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் முருகன், கடந்த வருடம் எதிர்பாராத விபத்து ஒன்றில் பலியானார். மகனது இழப்பால் மீனாம்பாள் நிலைகுலைந்து போனார்.

முருகனின் இறப்புக்குப் பிறகு, மீனாம்பாளுக்கும் முருகனின் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த நிலையில்தான், அந்த மருமகள் மாமியார் மீனாம்பாளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மீனாம்பாள்
மீனாம்பாள்

வேறு வழியின்றி அறந்தாங்கியில் உள்ள தன் மகளின் வீட்டுக்குச் சென்று வாழ்க்கையைக் கழித்து வந்துள்ளார் மீனாம்பாள். மகளின் வீட்டில் வசித்து வந்த மீனாம்பாள், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மகளின் வீட்டிலேயே இறந்து போயுள்ளார். மீனாம்பாள் உடலை அவர் வாழ்ந்த இடத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர் மீனாம்பாள் உறவினர்கள். எனவே, ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடலைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாமியாரின் உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதை அறிந்த மருமகள், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவுகளைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

மீனாம்பாளின் உடலை வீட்டுக்கு வெளியே வைத்துக் கொண்டிருந்த உறவினர்கள், மருமகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக, 'என்னுடைய அனுமதியை மீறி மாமியாரின் உடலை வீட்டுக்குள் கொண்டு வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்' என்று கூறி உறவினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மீனாம்பாளின் உடலை வீட்டுக்கு வெளியே வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

மீனாம்பாளின் வீடு
மீனாம்பாளின் வீடு

மீனாம்பாளின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர் இளஞ்செழியன். வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவரிடம், அவரின் மனைவி நடந்த சம்பவத்தை போனில் கூற, 'நம் வீட்டில் வைத்து இறுதிச்சடங்குகளை நடத்துங்கள்' என்று கூறி உறவினர்கள் அனைவரையும் நெகிழ வைத்தார் இளஞ்செழியன். 'நல்லா வாழ்ந்த மனுசி, எங்க வீட்டுல வச்சு அவங்க ஈமச் சடங்குகளைச் செய்து நல்லபடியா அடக்கம் செய்யுங்க, நானே எல்லா செலவையும் ஏத்துக்கிறேன்' என்று இளஞ்செழியன் சொல்ல, அவரது வீட்டில் வைத்து மீனாம்பாளின் இறுதிக் காரியங்கள் நடைபெற்றன.

மேலும், பெற்ற மகன் முருகன் செய்ய வேண்டிய ஸ்தானத்தில் இளஞ்செழியனின் குடும்பத்தினர் இருந்து மீனாம்பாளின் இறுதிச் சடங்குகளைச் செய்து அனைவரையும் நெகிழ வைத்திருக் கின்றனர். ஊர் கூடி மீனாம்பாளின் இறுதிச்சடங்கு நடைபெற்றிருக்கிறது. மாமியாரின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர மருமகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தாமாக முன்வந்து உதவி செய்த இளஞ்செழியன் மற்றும் அவர் மனைவியின் செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மீனாம்பாளின் நெருங்கிய உறவினர்கள் கூறும்போது, ``நல்லா வாழ்ந்த மனுஷி. மகள்களை எல்லாம் நல்லபடியா திருமணம் செஞ்சு கொடுத்திட்டாங்க. முருகனோட எதிர்பாராத விபத்து அந்தக் குடும்பம் மொத்தத்தையும் சிதைத்துப் போட்டுருச்சு. நல்லா வாழ்ந்து இறந்துபோன மனுஷிக்கு அவரோட வீட்டுல வெச்சு ஈமச் சடங்குகளை செய்ய முடியலைங்கிறது வருத்தம் தான்.

மீனாம்பாள்
மீனாம்பாள்

ஆனாலும், அந்தக் குறையையெல்லாம் போக்கி முருகன் இடத்திலிருந்து இளஞ்செழியன் குடும்பம் நல்லபடியா எல்லா சடங்குகளையும் செய்து இறுதிச் சடங்கை முடிச்சிட்டாங்க. அவருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. ஒரு வகையில இளஞ்செழியன் மீனாம்பாளுக்கு தூரத்து சொந்தம். இறுதி காரியத்துக்காக அவர்தான் செலவழிச்சிருக்கார்" என்றனர்.

மீனாம்பாள் மருமகளின் தரப்பை அறிய, அவரிடம் பேச பலமுறை முயன்றோம். அதற்கு அவர் முன்வரவில்லை.

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்தப் பூமியில் இறுதியாகச் செய்யப்படும் சடங்குகளின் கனம் உணர்ந்து, மனிதநேயத்துடன் உதவிய இளஞ்செழியனை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு