Published:Updated:

திஷா ரவி வழக்கு: ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்... காவல்துறை சொன்னது என்ன?

திஷா ரவி
திஷா ரவி

'டூல்கிட்' விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவியை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்நிலையில், திஷா ரவிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் கிரெட்டா துன்பர்க்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று கிரெட்டா துன்பெர்க் திஷா ரவிக்கு ஆதரவாக ட்வீட் செய்ய, இன்று திஷாவின் ஜாமீன் மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது.

சில நாள்களுக்கு முன்னர், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் கிரெட்டா. இப்போது திஷா ரவிக்கும் ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர், 18 வயதாகும் கிரெட்டா துன்பர்க். முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையே நடுங்க வைத்தவர்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் பற்றி கிரெட்டா ட்வீட் செய்ய, அந்தப் பிரச்சனை சர்வதேச கவனம் பெற்றது. கூடவே, அது தொடர்பாக கிரெட்டா பகிர்ந்த 'டூல்கிட்' இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பொதுவாக, 'டூல்கிட்' என்பது போராட்ட வழிமுறைகளைத் தொகுக்கும் டாக்குமென்ட்.

Greta Thunberg
Greta Thunberg

ஆனால், 'கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது' என்று காவல்துறை குற்றம் சுமத்தியது. அந்த 'டூல்கிட்' உருவாக்கத்தில் தொடர்புடையவர் என்று கூறி, பெங்களூரைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர், 22 வயது இளம்பெண் திஷா ரவியைக் கைது செய்தது டெல்லி காவல்துறை. திஷா ரவி கைது செய்யப்பட்டு ஐந்து நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இப்போது திஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ட்வீட் செய்துள்ளார் கிரெட்டா துன்பெர்க்

கிரெட்டா பதிவிட்டுள்ள ட்வீட்டில், 'பேச்சு சுதந்திரமும் அமைதியான போராட்டமும் சமரசம் செய்துகொள்ளக்கூடாத மனித உரிமைகள். எந்த ஜனநாயகத்திலும் இது அடிப்படையாக இருக்க வேண்டும்' என்று பதிவிட்டு, #StandWithDishaRavi என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை மீட்க வேண்டும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வழங்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து இதுதொடர்பாக அழுத்தம் கொடுத்து மனுவையும் அளித்தனர்.

அதில், 'டெல்லி காவல்துறையால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளார் திஷா ரவி. உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை டெல்லி காவல்துறை மீறியுள்ளது. எனவே, திஷா மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்த டெல்லி காவல்துறை மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து திஷாவை மீட்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸார், கைது தொடர்பாக உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளையும் உத்தரவுகளையும் காற்றில் பறக்க விட்டிருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒருவரை கைது செய்யும்போது அவரை முதலில் உள்ளூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், திஷா ரவி கைதில் அதை டெல்லி போலீஸார் மீறியுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திஷா ரவியின் ஐந்து நாள்கள் காவல் முடிந்த நிலையில், நேற்று மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு மூன்று நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

திஷா ரவி
திஷா ரவி

இந்நிலையில், திஷா ரவி தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது, டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை நடத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என்று, திஷாவுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

ஜனவரி 26 அன்று விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்புக்கான சாட்சி என்ன என்று நீதிபதி கேட்க, 'சதித் திட்டத்தில் அனைவருக்கும் ஒரே போன்ற வேலை இருப்பதில்லை. இந்த டூல்கிட்டால் தூண்டப்பட்ட ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றது காவல்துறை. அந்தப் பதிலில் திருப்தியடையாத நீதிபதி, போராட்டத்துக்கு நேரடி தொடர்பு உள்ள வகையில், டூல்கிட்டில் உள்ள தகவல்களைக் காட்டுமாறு கேட்டார்.

'நேற்று திஷா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிப்ரவரி 22 வரை திஷா காவலில் இருக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை தடைபடும்' என்று தெரிவித்தது காவல்துறை.

இன்று ஜாமீன் மனு விசாரணையின் இறுதியில், தீர்ப்பு ஃபிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு