Published:Updated:

வினு விமல் வித்யா: காணாமல்போன கோழி முட்டையும் ஒரு காதலும்!

 ஹாலே ஆர்சினெக்ஸ் -  கோழிப்போரு
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலே ஆர்சினெக்ஸ் - கோழிப்போரு

- சஹானா

புத்தகக்காட்சி வாசலில் வித்யாவும் விமலும் நின்றுகொண்டிருந்தார்கள். கை நிறைய புத்தகங்களோடு வந்தாள் வினு.

“என்ன வினு, ஹெவி பர்ச்சேஸ் போல...” என்றார் வித்யா.

“வாங்க வித்யாக்கா, அந்த `நமது கஃபே’ கடையில உட்கார்ந்து பேசுவோம்” என்று அழைத்துச் சென்றாள் விமல். அரட்டையைத் தொடங்கினாள் வினு.

“பெய்ஜிங்ல ஒரு பொண்ணு விவாகரத்து வழக்கு போட்டாங்க. தன்னோட அஞ்சு வருஷத் திருமண வாழ்க்கையில வீட்டு வேலையிலோ குழந்தை வளர்ப்பிலோ கணவர் பங்கெடுத்துக்கல. அதிகமா உழைச்ச எனக்கு அதுக்கான இழப்பீடு வேணும். ஜீவனாம் சத்தோட இழப்பீட்டையும் சேர்த்துக் கொடுங்கன்னு கேட்டாங்க. சீன நீதிமன்றமும் ஜீவனாம்சத்தோடு இழப்பீட்டையும் கொடுக்கச் சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கு. இந்த வழக்குனால ஹோம்மேக்கர்களோட உழைப்புக்கு மதிப்பும் அங்கீகாரமும் கிடைச்சிருக்கு!”

“சபாஷ்... கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பாலியல் வழக்கில், சிறுமியின் சட்டைக்கு மேலே தொட்டா அது போக்ஸோ சட்டத்தின்படி குற்றமாகாதுன்னும், சிறுமியின் கைகளைத் தொட்டாலோ பேன்ட் ஜிப்பை அவிழ்க்கச் சொன்னாலோ குற்றமா கருதப்படாதுன்னும் தீர்ப்பு கொடுத்த மும்பை ஹை கோர்ட்டின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை ஞாபகமிருக்கா... அந்த வழக்கை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும் குழந்தைகள் ஆணையமும் வழக்கு தொடுத்தாங்க. புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கச் சொன்ன பரிந்துரைகளை நீதிபதிகள் வாபஸ் வாங்கிட்டாங்க. சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் புஷ்பாவோட கூடுதல் நீதிபதிக்கான ரெண்டு வருஷப் பதவிக் காலத்தை ஒரு வருஷமா குறைச்சிருச்சு. நியாயம் கிடைக்கும்னுதானே கோர்ட்டுக்குப் போறோம்... இப்படி விநோதமா தீர்ப்பு வந்தா என்ன பண்றது... திஷா ரவி பத்தி சொல்லு விமல்” என்றார் வித்யா.

“கிரெட்டா துன்பர்க் மாதிரி திஷாவும் சுற்றுச்சூழல் ஆர்வலர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்தி, `டூல்கிட்’ என்ற செயல்திட்ட ஆவணத்தை உருவாக்கி, இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற விதத்துல உலகப் பிரபலங்கள்கிட்ட தகவல்களைப் பரப்பினாங்கன்னு குற்றம் சாட்டினாங்க. இதுக்காக அஞ்சு நாள் கடுங் காவல் தண்டனையும் கொடுத்தாங்க. இப்போ ஜாமீன்ல வெளிவந்திருக்காங்க, வித்யாக்கா.”

“கிரெட்டா உலகத் தலைவர்களை எல்லாம் என்னம்மா கேள்வி கேட்கறாங்க... வினு, இது என்ன புது வாட்ச்?” என்றாள் விமல்.

“துபாய்லேருந்து வந்திருக்கும் என் கஸின் கொடுத்தார் விமல்.”

“ஓ... துபாய் இளவரசி பத்திதான் ஒரே பரபரப்பா இருக்கு. என்ன விஷயமாம்?”

வினு விமல் வித்யா: காணாமல்போன கோழி முட்டையும் ஒரு காதலும்!

“துபாய் மன்னரின் மகள் லத்தீஃபா. செல்வாக்கான குடும்பத்துல வாழ்ந்தாலும் சுதந்திரம் இல்லைன்னு நினைச்சு, அமெரிக்கால தஞ்சம் அடையத் தப்பிச்சுப் போனாங்க. எட்டு நாளுக்கப்புறம் பிடிபட்டு, மறுபடியும் துபாய்க்கே அழைச்சிட்டு வந்துட்டாங்க. ஒரு பெரிய மாளிகையில இப்ப வீட்டுச் சிறையில் இருக்கறதா சொல்றாங்க. காவலுக்கு ஆட்கள். வெளியாட்கள் யாரும் இவங்களைப் பார்க்க முடியாது.

மனித உரிமைகள் ஆணையம் இதை விசா ரிக்க முடிவெடுத்து, 2018-ல மேரி ராபின்சன்ங்கிறவரை அனுப்பி வெச்சது. லத்தீஃபா வின் சித்தி ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணாங்க. அதுல லத்தீஃபாவையும் மேரியையும் சந்திக்க வெச்சாங்க. லத்தீஃபாகிட்ட மேரி மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்தவங்கனு சொல்லல. மேரிகிட்ட, லத்தீஃபா மன அழுத்தத்தால் அவதிப்படுறதாகவும் எதையும் கேட்டு, அவரை கஷ்டப்படுத்த வேணாம்னும் சொல்லிட்டாங்க. ரெண்டு பேரும் விருந்து சாப்பிட்டுட்டு அவங்கவங்க இடத்துக்கு வந்துட்டாங்க. வேற எந்தத் தகவலும் லத்தீஃபா பத்தி வெளிவரல. அதுக்கப்புறம் இப்போ பிபிசி வெளியிட்டிருக்கிற ஒரு வீடியோ இன்னும் அதிர்ச்சியா இருக்கு. `நான் இங்கு அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வில்லா ஒரு ஜெயிலாக மாற்றப்பட்டுள்ளது'னு லத்தீஃபா பாத்ரூம்லேருந்து பேசுற வீடியோதான் அது. இதுக்கப்புறம் பிரிட்டிஷ் அரசு, `ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுவதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது. இதுகுறித்து ஐநா சபை நடவடிக்கை எடுக்கும்’னு தெரிவிச்சிருக்கு’’ - நீண்ட நேரம் பேசிய வினுவிடம்...

“ஒரே சீரியஸா போயிட்டிருக்கு. இன்னொரு காபியைக் குடிச்சுட்டு உற்சாகமா ஏதாவது பேசுவோமே'' என்றார் வித்யா.

“அமெரிக்க மருத்துவமனையில வேலை செய்யுற ஹாலே ஆர்சினெக்ஸ் விண்வெளிக் குப் போகப் போறாங்க. 29 வயசாகும் ஹாலேதான் விண்வெளிக்குப் போறவங்கள்ல ரொம்ப யங். இவங்க சின்ன வயசுல எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டவங்க. சின்ன வயசுல நாசாவுக்குப் போயிருக்காங்க. விண்வெளி வீராங்கனையா வரணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு கேன்சர் வந்து, வாழ்க்கையை மாத்திருச்சு. கேன்சர்லேருந்து மீண்டவங்க, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்ட ஹாஸ்பிடல்லயே வேலை செய்யறாங்க. இப்போ ஒரு பணக்காரர் ஸ்பான்சர் செய்யவே விண்வெளிக்குப் போகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த வருஷக் கடைசியில் தன்னோட ஆசை, கனவு, லட்சியம் நிறைவேறப் போகுதுன்னு ஹேப்பியா இருக்காங்க விண்வெளிக்குப் போகும் முதல் கேன்சர் சர்வைவர் ஹாலே!”

“வித்யாக்கா... தென் கொரியா நியூஸ் ஒண்ணு சொல்லட்டா? ரெண்டாம் உலகப் போரின்போது ஜப்பான், தென் கொரியாவை ஆக்கிரமிச்சிருந்துச்சு. அப்போ தென் கொரியப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வெச்சிருந்தது. அவங்கள்ல 12 பெண்கள் இப்ப உயிரோட இருக்காங்க. அதில் 92 வயசு லீ யோங் சூ இழப்பீடு கொடுக்கணும்னு வழக்கு போட்டாங்க. 30 வருஷத்துக்கு முன்னாடியே எல்லாம் செட்டில் பண்ணியாச்சுன்னு ஜப்பான் சொன்னாலும் இழப்பீடு கொடுத்துருச்சு. இந்த வழக்கு பணத்துக்காக இல்ல. ஜப்பான் செஞ்ச தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கறதுக்காகன்னு சொல்லும்போதே அழுது தீர்த்துட்டார்ங்க லீ யோங் சூ.”

‘`இளவரசியா இருந்தாலும் போலீஸ் எஸ்பியா இருந்தாலும் பெண் என்னவா இருந்தாலும் இப்படி அடக்குமுறைக்கு ஆளாகத்தான் வேண்டியிருக்கு’’ என்று தொடர்ந்தாள் வினு.

``தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டி.ஜி.பி-யான ராஜேஷ்தாஸ், புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு முதலமைச்சர் பயணம் போனப்ப, பாதுகாப்புக்காகப் போயிருக்கார். அப்ப அங்க வந்த ஒரு பெண் எஸ்.பி-கிட்ட பாலியல் சீண்டல் செய்திருக்காரு. அது பத்தி புகார் கொடுக்க அந்தப் பெண் அதிகாரி சென்னை வந்திருக்காங்க. வரும் வழியில ஒரு சுங்கச்சாவடியில அவர்கிட்ட சமாதானம் பேசியும் மிரட்டியும் புகார் கொடுக்கவிடாம தடுக்க முயற்சி பண்ணியிருக்காங்க ராஜேஷ்தாஸுக்கு வேண்டப்பட்ட சில அதிகாரிகள். இதில ஒரு பெண் இன்ஸ்பெக்டரும் உண்டு. இந்த மிரட்டலை எல்லாம் தாண்டி சென்னை வந்த பாதிக்கப்பட்ட பெண், அரசு உயரதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்துட் டாங்க. இப்போ அந்தப் புகாரை விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா கமிட்டியை தமிழக அரசு அறிவிச்சுருக்கு. ராஜேஷ்தாஸை பதவியிலிருந்து நீக்கி காத்திருப்புப் பட்டியல்ல வைக்க உத்தரவிட்டிருக்கு... ''

‘`ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்றேன்’’ என ஆரம்பித்தார் வித்யா... ‘`ஐஸ்வர்யா ராஜேஷுக்கு

க/பெ.ரணசிங்கம் படத்துல சிறப்பான நடிச்சதுக்காக சென்னை சர்வதேச திரைப்பட விழா வுல விருது கிடைச்சிருக்கு. இப்போ ரீலிஸ் ஆகியிருக்குற ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ ஆனந்திக்கும் இப்படி பாராட்டுகள் கிடைக்கும். ஒரு சின்ன ஊர்லேருந்து நாட்டின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்துக்குப் படையெடுக்கிற ஒரு சாமானிய பெண்ணின் வெற்றிக்கதைதான் இந்தப் படம். ஆமாம். ரெண்டு பேரும் `கோழிப்போரு’ங்கிற மலையாளப் படம் பார்த்தீங்களா?”

“எப்ப வந்துச்சு வித்யாக்கா?”

“போன வருஷமே வந்துருச்சும்மா. கூடவே கொரோனாவும் வந்ததால, கோழிச்சண்டை சத்தம் பெருசா கேட்காமப் போயிடுச்சு. பக்கத்துப் பக்கத்து வீடுகள்ல குடியிருக்கும் ரெண்டு பெண்களும் ரொம்ப அன்பாவும் உதவியாவும் இருக்காங்க. அதில ஒரு பொண்ணு கோழி வாங்கி வளர்க்கறாங்க. ஆனா, கூட்டுல முட்டையைக் காணோம். முட்டை காணோம்கிற ஒரு சின்ன விஷயம் அந்தம்மா மனசுல சந்தேகமா வளருது. பொறுக்க முடியாம ஒரு நாள் கோழியைத் தேடி பக்கத்து வீட்டுக்குப் போறாங்க. அங்க ஆம்லெட் போடறதைப் பார்க்கறாங்க. என் முட்டையைத் திருடித்தான் திங்கறியான்னு சண்டை வருது. அந்தம்மாவும் தான் எடுக்கலன்னு எவ்வளவோ சொல்றாங்க. கேட்கல. இதுக்கு நடுவுல இந்த வீட்டுப் பையனும் அந்த வீட்டுப் பெண்ணும் லவ் பண்றாங்க. அது தெரிஞ்சதும் சண்டை ரொம்ப பெருசாகுது. சிம்பிள் ஸ்டோரி. ஆனா, சுவாரஸ்யமாவும் நகைச்சுவையாவும் சொல்லியிருக்காங்க.''

“நல்லாதான் இருக்கு வித்யாக்கா. விமல், நேரமாச்சு. கிளம்பலாமா...” என்று வினு கேட்க, அடுத்த சில நிமிடங்களில் மூவரின் வண்டிகளும் மூன்று திசைகளில் பறந்தன.

(அரட்டை அடிப்போம்!)