`பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 நாள்களில் தண்டனை!' - திஷா சட்டத்தை கையில் எடுக்கும் மகாராஷ்ட்ரா?

வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு குறித்து உறுதியான ஆதாரங்கள் இருந்தால் 21 நாள்களில் மரண தண்டனை பெற்றுத் தரும் பிரிவுகள் உள்ள இந்தச் சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து `justice for disha' என்ற ஹேஷ்டேக்கும் உருவானது. பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களைத் தாக்கிவிட்டு நான்கு குற்றவாளிகளும் தப்ப முயன்றுள்ளனர். இதனால் போலீஸார் அவர்களை என்கவுன்டர் செய்தனர். இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 நாள்களில் தண்டனை வாங்கித் தரும் திஷா சட்டத்தை ஆந்திர மாநில அரசு கொண்டு வந்தது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு குறித்து உறுதியான ஆதாரங்கள் இருந்தால் 21 நாள்களில் மரண தண்டனை வரை பெற்றுத்தரும் பிரிவுகள் உள்ள இந்தச் சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் குறித்துப் பல மாநில அரசும் விவாதித்து வரும் நிலையில், அந்தச் சட்டத்தை தற்போது கொண்டு வர மஹாராஷ்ட்ரா அரசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக், திஷா சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆந்திரா சென்று ஆய்வுசெய்துவிட்டுத் திரும்பியுள்ளது. அந்தக் குழு மார்ச் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்றார்.