Published:Updated:

சர்ச்சையான புரமோ வீடியோ: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புனிதப்படுத்துகின்றனவா சீரியல்கள்?

Thendral Vanthu Ennai Thodum Promo
Thendral Vanthu Ennai Thodum Promo ( Youtube / Vijay Television )

ஒரு நிமிடக் காட்சிகள் மட்டுமே கொண்ட அந்த புரமோ வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது.

நேற்று முன்தினம் வெளியான ஸ்டார் விஜய் டிவி-யின் புதிய சீரியல் புரமோ வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விஜய் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் `தென்றல் வந்து என்னைத் தொடும்’ என்ற சீரியலின் புரமோ வீடியோவான அது, விஜய் டிவி-யின் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியானது.

பிரபல சின்னத்திரை நடிகர் வினோத் பாபு மற்றும் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் அந்த சீரியலின் புரமோ வீடியோவில், அமெரிக்காவில் படித்துவிட்டு ஊர் திரும்பும் நாயகி பவித்ராவை, அமெரிக்காவில் படித்துவிட்டு வந்திருந்தாலும் மண்ணின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் மறக்காமல் இருப்பதாகக் கோயிலில் பாட்டி ஒருவர் புகழ்கிறார். சீரியலின் நாயகி கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கோயிலுக்குள் அடாவடியாக நுழைகிறார் கதாநாயகன் வினோத். அந்த நேரத்தில், கோயிலுக்குள் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியிடம் வாக்குவாதம் செய்கிறார். பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் மிரட்டிவிட்டு, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலியைக் கழட்ட முயல்கிறார்.

அப்போது, அங்கு வரும் நாயகி பவித்ரா, ``இது என்ன காட்டுமிராண்டித்தனம்? அம்மன் சாட்சியா கல்யாணம் நடந்திருக்கு. இதை அவிழ்க்க உனக்கு என்ன உரிமை இருக்கு?'' என்று கொதிக்கிறார். பதிலுக்கு கதாநாயகன் வினோத், ``ஒரு மஞ்ச கயித்த கட்டுனா, உடனே அதுக்கு பேர் கல்யாணமா..?'' என்று கூறிவிட்டு அம்மன் கழுத்திலிருந்த தாலியை எடுத்து பவித்ரா கழுத்தில் வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறார். தொடர்ந்து, நாயகியின் நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு, ``இப்போ நான் உனக்குக் கழுத்தில் தாலி கட்டிட்டு, பொட்டும் வெச்சிட்டேன். நீ என்ன எனக்குப் பொண்டாட்டியா?'' என்று கேள்வி கேட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நாயகி, அவரைப் பின்தொடர்ந்து செல்வது போல் அந்த புரமோ வீடியோ முடிகிறது.

ஒரு நிமிடக் காட்சிகள் மட்டுமே கொண்ட அந்த புரமோ வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது. இது மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவும், சமூக சீரழிவுக்கும் இது போன்ற சீரியல்கள் வித்திடுவதாகவும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பலரும் இந்த சீரியல் வீடியோவை குறிப்பிட்டு தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது திரைப்படங்களில் தணிக்கை மேற்கொள்ளப்படுவதைப் போலத் தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும், இது போன்ற சீரியல்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு வாதங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே ஒரு தரப்பினர், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிற்போக்குத்தனமான காட்சிகளும், சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஆபாச வசனங்களும் நிறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக, 2015-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு விசாரணைக்கு வந்திருந்தது. தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாச நடனங்களும், தரக்குறைவான மற்றும் வன்முறை காட்சிகளும் அதிகளவில் இடம் பெறுவதாகவும், அதிலும் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash
சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 சொல்வது என்ன?

அந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், அது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், ``தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் முன்தணிக்கை செய்யப்படுவதில்லை. இருந்தாலும், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டம் 1995-ன் படி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது கண்காணிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விதிமுறைகள் மீறப்பட்டால் தானாகவோ அல்லது புகார் ஏதேனும் அளிக்கப்பட்டாலோ, இந்த சட்டப் பிரிவு 20-ன் படி செய்தி, ஒளிபரப்புத் துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறது. திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சினிமா சட்டம் 1952-ல் சில வழிமுறைகளை அரசு வெளியிட்டது. இதே போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிப்பதற்கு எலக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாகச் சட்டங்கள் தேவையா, இல்லையா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை அவசியம் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் ட்விட்டர் பதிவிற்குப் பதிலளித்துள்ள திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களைத் துன்புறுத்துவதற்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

தன் ட்விட்டர் பதிவில் எஸ்.பி வருண்குமார், ``Tamilnadu Prohibition Of Harassment Of Women Act, பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர்கள், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துபவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் சீரியல் வீடியோ தொடர்பாகப் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தான் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ``சமீப காலமாகத் தொலைக்காட்சி சீரியல்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் கட்டவிழ்க்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. இந்த சீரியல் புரமோ வீடியோவில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது வன்முறையின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கும் சீரியல்களில் இப்படி பெண் சமூகத்தை இழிவாகக் காட்சிப்படுத்துவது ஏற்புடையதல்ல.

இன்று எத்தனையோ துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள். தங்களுக்கான பொருளாதார தற்சார்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். குறிப்பாக, தங்களின் சுயம் குறித்த விழிப்பு உள்ளவர்களாகப் பெண்கள் மாறிவருகிறார்கள். இந்நிலையில், தாலி சென்ட்டிமென்ட், ரவுடியே ஆனாலும் அவன் தன் கழுத்தில் தாலி கட்டியவன் என்பதால் அவனை திருத்தி வாழ்வதுதான் தனக்கான வாழ்வு என்று பெண்கள் தங்களை உருக்கிக்கொள்வது போன்ற கதைகளை சீரியல்கள் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது, பெண்களின் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதே.

பொழுதுபோக்கே சீரியல்கள்தான் என்றிருக்கும் மக்கள், வேலைப் பளுவுக்கு மத்தியில் ரிலாக்ஸ் செய்வதற்காகத் தொலைக்காட்சிகளின் முன்பாக அமரும் மக்கள் என எல்லா தரப்பினரையும் என்டர்டெய்ன் செய்யும் சீரியல்களுக்கு, சமூக அக்கறையும் வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட குழுவினர் உணர வேண்டும்.

வியாபார ரீதியாக தங்களின் சீரியல்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பெண்களை மையப்படுத்தியே பெரும்பாலான சீரியல்கள் எடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது, பெண்களை மேன்மையாக உயர்த்திக் காட்டாமல், பெண் என்றாலே கணவர், மாமியார் என புகுந்த வீட்டின் `இவ ரொம்ப நல்லவ...' சர்டிஃபிகேட்டை வாங்குவதற்கான தன் வாழ்வை அர்ப்பணிப்பவள் என்ற ரீதியிலான கதை வட்டத்திற்குள் இருந்து சீரியல்கள் வெளியே வர வேண்டும்.

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா
வாழ்க்கை தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறோமா? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

அதற்காக, தொலைக்காட்சி சீரியல்களில் பெண்களைத் தூக்கிப் பிடித்து உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஆண் ஆதிக்கத்தை, பெண் அடக்குமுறையை, குடும்ப வன்முறையை ஏற்புடையதாக்கும்படியான காட்சிகளை வைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலும் நிகழும்போது, அதன் மேலான அதிர்ச்சி, எதிர்வினை குறைந்து, `அந்த சீரியல்ல நடந்த மாதிரி...' என்று சொல்லி மக்களை ஒருவகையில் அவற்றுக்குப் பழக்கும் கேட்டை சீரியல்கள் செய்கின்றன என்றும் சொல்லலாம்.

ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள சீரியல்கள், சமூக பொறுப்புணர்வுடன் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான காட்சிகளை புனிதப்படுத்துவது போன்ற காட்சிகளை, கதைகளை கைவிட வேண்டும்" என்றார்.

தற்போதைய சூழலில், தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீரியல்களின் போக்கு சரியாகத்தான் இருக்கிறதா? என்பது குறித்த உங்களின் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்..!

அடுத்த கட்டுரைக்கு