Published:Updated:

`பாலியல் குற்றங்களும் சினிமாவும்...!' - ஒரேமேடையில் முரண்பட்ட கனிமொழி - குஷ்பு

கனிமொழி, குஷ்பு
கனிமொழி, குஷ்பு

`சினிமாவையும் , டாஸ்மாக்கையும் குறை சொல்லாதீர்கள். படம் பார்ப்பதன் மூலம் மட்டுமே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதில்லை' என நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பேசியுள்ளார்.

சென்னையில் தனியார் நாளிதழ் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தி.மு.க எம்.பி கனிமொழி, நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு சினிமாவும் ஒரு காரணம் என கருத்தரங்கில் பங்கேற்ற மாணவி ஒருவர் கருத்து தெரிவித்தனர். மாணவியின் கருத்தை தி.மு.க எம்.பி கனிமொழி ஏற்றுக்கொண்டார். கனிமொழியின் இந்த கருத்துடன் குஷ்பு வேறுபட்டார். `நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு சினிமாவையும், டாஸ்மாக் உள்ளிட்டவற்றை காரணமாக கூறாதீர்கள்' என அவர் பதிலளித்தார்.

கனிமொழி
கனிமொழி

கனிமொழி பேசுகையில், ``திரைப்படங்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆனால், கலையின் சுதந்திரத்தில் நான் எதனையும் திணிக்க முடியாது. இதில், அரசியல் ரீதியிலான கேள்வி எழுப்புவதும் சற்று சிரமமானது. ஊடகத்துறையை பொறுத்தமட்டில் சினிமாவுக்கு இருப்பது போன்று தணிக்கை கொண்டுவரப்பட்டால், அது மக்களுக்கு ஏற்றவாறு இருக்காது. அரசு தரப்புக்கு ஏற்றவாறு இருக்கும். எனவே, இவற்றை வரையறுப்பது மிகவும் கடினம்” என்றார்.

`ராகுல் பேசியது நாட்டின் மீதான கவலை!' - அமைச்சருக்குப் பதில்கொடுத்த கனிமொழி

அப்போது குறுக்கிட்ட குஷ்பு, ``இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் ஒரு தயாரிப்பாளர், இயக்குநரின் மனைவி, நான் ஒரு நடிகையும் கூட. இன்று நான் ராமாயணத்தை ஒளிபரப்பினால் நீங்கள் பார்க்க தயாராக இருக்கிறீர்களா? இரண்டு பூக்கள் முத்தம் தருவது போல் 1970- 80களைப் போல் காட்சி அமைத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? அர்ஜூன் ரெட்டி, கபீர் சிங் படங்களை சூப்பர் ஹிட் ஆக்கியது நீங்கள் தானே?” என்ற குஷ்புவின் பதிலை கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்.

கனிமொழி, குஷ்பு
கனிமொழி, குஷ்பு

மேலும் பேசியவர், ``உங்களுக்குத் தேவையில்லை என்றால், பிடிக்காவிட்டல் அதை நிராகரித்து விடுங்கள். தியேட்டருக்கு போகாதீர்கள். உங்கள் பணத்தையும் உங்கள் தந்தையின் பணத்தையும் வீணாக்காதீர்கள். தேர்வு செய்வது உங்களிடம்தான் உள்ளது. இங்கு யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. நல்லது, கெட்டதை அழிக்கும். இதுதான், நான் உங்களுக்கு சொல்ல வரும் தகவல். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு சினிமாவையும் , டாஸ்மாக்கையும் மட்டுமே குறை சொல்லாதீர்கள்.

படம் பார்ப்பதன் மூலம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதில்லை.ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்ய வேண்டும் என்பது அவர்களது எண்ணத்திலிருந்து உருவாகிறது”. என்றார். இதற்கு பதிலளித்த தி.மு.க எம்.பி கனிமொழி,``எது நல்லது எது கெட்டது என யார் வரையறுத்தது’ என கேள்வி எழுப்பினார்.

கனிமொழி
கனிமொழி

அப்போது குறுக்கிட்ட குஷ்பு,``வில்லனை, ஹீரோ தண்டிக்கிறார். இறுதியில் ஹீரோ வெல்கிறார் அல்லவா?’ என்றார். இதற்கு ``வில்லன்களை விட ஹீரோக்கள்தான் அதிக வில்லத்தனங்களை செய்கிறார்கள்’ என கனிமொழி பதிலளித்தார். உடனே, ``அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தானே கபீர் சிங், அர்ஜூன் ரெட்டி படங்களை குறிப்பிட்டு சொன்னேன்'' என்றார் குஷ்பு. கனிமொழி - குஷ்பு இருவரும் ஒரே மேடையில் கருத்து முரண்பட்டு பேசிய சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு