Election bannerElection banner
Published:Updated:

பெண் எஸ்.பி வழக்கு: எஸ்.பி கண்ணன் பணியிடை நீக்கம்... இதையே தேர்தல் ஆணையம்தான் செய்ய வேண்டுமா?

Tamilnadu Police
Tamilnadu Police ( Photo: Vikatan )

காட்சிகள் மாறலாம். அதிகாரம் வழக்கம்போல் தன் ஆட்டத்தைக் காட்டி குற்றம் சுமத்தப்பட்டவரை கைதூக்கிவிடலாம். என்றாலும், இந்த நொடி, இது பெண் எஸ்.பி-யின் வெற்றி. #VoiceOfAval

`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்

தொலைதூரத்து வெளிச்சம் ஓர் அடி நகர்ந்து வந்ததுபோல இருக்கிறது, சமீபத்தில் தன் உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி மீது பெண் எஸ்.பி அளித்த புகாரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது. குறிப்பாக, எஸ்.பி கண்ணனின் பணியிடை நீக்கம்.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரை தன்னை அளிக்கவிடாமல், சம்பந்தப்பட்ட டிஜிபியால் ஏவப்பட்டு, தன்னை தடுத்த, மிரட்டிய காக்கி அதிகாரிகளையும் தன் புகாரில் சேர்த்தார். குறிப்பாக, தன் காரை வழிமறித்து வன்முறை செய்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனின் நடவடிக்கைகள் பற்றி, புகாரில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

TN police
TN police

இந்நிலையில், சிறப்பு டி.ஜி.பி மீதான புகார் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபி பணிநீக்கம் செய்யப்பட்டாலும், எஸ்.பி கண்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் `விசாரணை நடத்தப்படும்' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று (9.3.2021) மாலை அவர் வணிகக் குற்றப் பிரிவு எஸ்.பி ஆகப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதும், பணி மாறுதலும் `தண்டனை'யாக வழங்கப்படும் `நீதி'களை நாம் வழக்கமாகப் பார்த்து வருகிறோம். குறிப்பாக, அவர்களுக்கு சில மாதங்களில் பதவி உயர்வு அளிக்கப்படும் காட்சிகளும் இங்கு நடக்கும். திருப்பூர் மாவட்டத்தில் மதுவிலக்குக்காகப் போராட்டம் நடத்திய பெண்ணை பொதுவிடத்தில் அறைந்த உதவிக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு, சில மாதங்களிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டதைப் பார்த்தோம். கூடுதல் டிஎஸ்பி, டிஎஸ்பி ஆனார். `ராஜ தொடர்புகள்' குற்றவாளிகளைக் காத்து, வளர்த்துவிடுவதுதானே இங்கே வாடிக்கை?

அப்படித்தான் எஸ்.பி கண்ணனின் வணிகக் குற்றப் பிரிவு பணிமாற்றமும் முடிந்துபோயிருக்கும். ஆனால், அதிரடியாக அதன் திசையை மாற்றியிருக்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
பாலியல் வழக்கு: `டி.ஜி.பி-யின் பெயரை ஊடகங்களில் வெளியிடக்கூடாது!' - உயர்நீதிமன்றம் சொன்னது ஏன்?

எஸ்.பி கண்ணனுக்குப் பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட சில மணி நேரத்தில், தேர்தல் ஆணையம், எஸ்.பி கண்ணன் சம்பந்தப்பட்டிருக்கும் வழக்கின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழகத் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், `வழக்கின் தீவிரத்தன்மை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்த தமிழக உள்துறையின் அறிக்கையின் அடிப்படையில், எஸ்.பி கண்ணன் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் மீதான வன்முறைகளை நிகழ்த்தும் சாமான்யர்களுக்கே இங்கு அதன் விளைவு குறித்த அச்சம் இருப்பதில்லை. பெண்களின் கையறு நிலையால், `என்ன பண்ணிடுவா அவனு பார்த்துடலாம்' என்ற அவர்களின் ஆதிக்கமும் தைரியமும் வளர்ந்து வந்திருக்கிறது. சாமான்யர்களே இப்படி எனில், அதிகார வர்க்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. `என்ன பண்ண முடியும் அவளால..?' என்று 100% நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

சென்னை: புகாரளிக்க வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுக்க எல்லை மீறிய எஸ்.பி சிக்கியது எப்படி?

தன் உயரதிகாரி சொன்னார் என்பதற்காக, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை ஒரு குற்றவாளியைப்போல காரை மறித்து மிரட்டத் துணிந்த எஸ்.பி கண்ணனின் நடவடிக்கைக்குப் பின்னால் இருந்ததும்... அந்த நம்பிக்கைதான். அந்த எண்ணத்தை, கூர் முனையால் கீறி வலி காட்டியிருக்கிறது, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பணியிடை நீக்க உத்தரவு. தமிழக அரசு செய்யத் தவறியதை, உடனடியாகச் செய்து காட்டியிருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு... நன்றி!

காட்சிகள் மாறலாம். அதிகாரம் வழக்கம்போல் தன் ஆட்டத்தைக் காட்டி குற்றம் சுமத்தப்பட்டவரை கைதூக்கிவிடலாம். என்றாலும், இந்த நொடி, இது பெண் எஸ்.பி-யின் வெற்றி. பெண்களின் வெற்றி. நூற்றாண்டுக் காலமாக `என்ன பண்ணிடுவா அவ...' என்று பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆதிக்கத்துக்கு ஜெர்க்கிங் பிரேக் போட்டிருக்கும் சிறிய வெற்றி.

தொடரும்!

- அவள்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு