Published:Updated:

`ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரில் விசாரணை எப்படி இருக்கும்?' - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி

Rajesh Das
Rajesh Das

காவல்துறையைச் சேர்ந்த இளம் பெண் கண்காணிப்பாளர் ஒருவர், டி.ஜி.பி பொறுப்பில் உள்ள ராஜேஷ் தாஸ் மீது கொடுத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதியிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவல்துறையைச் சேர்ந்த பெண் கண்காணிப்பாளர் ஒருவர், டி.ஜி.பி பொறுப்பில் உள்ள ராஜேஷ் தாஸ் மீது கொடுத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸும் சென்றிருக்கிறார். அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம், ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் காவல்துறை டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து, ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார் அந்தப் பெண் எஸ்.பி. உடனே இந்த விவகாரம் பேசுபொருளாக வெடித்தது. தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, ராஜேஷ் தாஸ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஆறு பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. மேலும், ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் முக்கியமான பொறுப்புகளைக் கவனித்திருக்கும் ராஜேஷ், சமீபத்தில்தான் காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பான சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.

`வேலியே பயிரை மேய்ந்த கதை'யாக மாறியிருக்கிறது இந்த விவகாரம். அத்துடன், காவல்துறையில் பெண் காவலர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமூட்டும் பார்வையையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தின் போக்கு, காவல்துறையில் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதியிடம் பேசினோம்.

திலகவதி ஐ.பி.எஸ்
திலகவதி ஐ.பி.எஸ்

``இந்த விஷயத்தில் ஒரு பெண்ணாக நானும் கொதித்துப் போயிருக்கிறேன். இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கைதான் சரியான தீர்வாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர், தன் தரப்பிலுள்ள நியாயத்தை அழுத்தமாக முன்வைத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டியது அவர் பொறுப்புதான். ஆனால், துறை ரீதியான நடவடிக்கை என, இந்த விவகாரத்தில் விசாரணைப் போக்கு மெதுவாகவே தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியபோதே, `இந்தக் காவல் நிலையங்கள் அமைப்பது சிறந்த முயற்சிதான். ஆனால், மற்ற பொதுவான காவல் நிலையங்களிலும் ஆண் காவலர்களுக்கு இணையாக பெண் காவலர்களையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடி தங்கள் பிரச்னையைத் தெரிவிப்பார்கள்' என்று குரல் கொடுத்தேன். அதன் பிறகுதான், எல்லாக் காவல் நிலையங்களிலும் ஓரளவுக்காவது பெண் காவலர்களையும் நியமித்தார்கள். இப்படி, காவல்துறையில் பெண்களுக்கும் உரிய முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், காவல்துறையில் உயர் பொறுப்புகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை தற்போதுவரை குறைவாகவே இருக்கிறது.

பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்

இந்தச் சூழலிலும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பெரிய பொறுப்புகளுக்குப் படிப்படியாகப் பெண்கள் அதிகளவில் தேர்வாகின்றனர். அவர்களுக்கே உயர் பொறுப்பிலுள்ள ஆண் அதிகாரியால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. தனக்குக் கீழ் பொறுப்பில் பணியாற்றுபவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக நடந்துகொள்வதுதானே பெரிய பொறுப்பிலுள்ள அதிகாரியின் கடமை. ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்திருக்கும் ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை எளிதில் கடந்து செல்ல முடியாது. இவர் மீது காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது.

இது தவிர, ராஜேஷ் மீது சில குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படியானவர் சமீபத்தில் சிறப்பு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்குப் பிரிவில் டி.ஜி.பி-யாக திரிபாதி இருக்கும் நிலையில், அவர் பொறுப்புக்கு இணையாக அழுத்தம் கொடுக்கும் வகையில்தான் ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டார். அதற்கான காரணம் தனிக்கதை! இதேபோல ஐ.ஜியாக இருந்த முருகன் ஐ.பி.எஸ் மீது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தினார். இந்த விவகாரம் பொதுவெளியில் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, முருகன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் மாறுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனவேதான், நீதிமன்றம் வரை சென்று, இந்த விவகாரம் தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதனால், அந்த விஷயத்தை ராஜேஷ் தாஸ் விவகாரத்துடன் ஒப்பிடுவது சரியாகாது.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

துறை சார்ந்த தவறுகள் செய்யும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கவும், சிக்கலுக்குத் தீர்வு காணவும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முயலும்; உதவும். ஆனால், ராஜேஷ் தாஸ் விவகாரம் பொதுவெளியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. காருக்குள்தான் அந்தப் பெண் அதிகாரியிடம் அவர் தவறாக நடந்துகொள்ள முயன்றார் எனக் கூறப்படுகிறது. எனவே, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்" என்றவர், இந்த விவகாரத்தின் விசாரணைப் போக்கு எப்படி இருக்கக்கூடும் என்பதையும் விளக்கினார்.

``பஞ்சாப் மாநிலத்தில் டி.ஜி.பி-யாக இருந்தவர் கே.பி.எஸ்.கில். இவர், 1988-ல் ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பொது நிகழ்ச்சியில் தவறாக நடந்துகொண்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தாமதமாகவே தீர்வு வந்தது. கில் குற்றம் செய்தவர் என்று நிரூபிக்கப்பட்டும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவராக இருந்ததால், குற்றச்சாட்டுக்குப் பிறகும் அவருக்குப் பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளில் நியாயமான முறையில் விசாரணை நடந்து, விரைவான நீதி கிடைக்க வேண்டும். அதற்கு வெளிப்படையான விசாரணை நடக்க வேண்டும்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo: Unsplash
ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் நியமனம்... தி.மு.க கொதிப்பது ஏன்?

ராஜேஷ் விவகாரத்தில், தற்போது ஆறு பேர் கொண்ட குழுவை அரசு நியமித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை, இந்தக் குழு விசாரணைக்கு அழைக்கும். பின்னர், சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரிப்பார்கள். விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால், ராஜேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகும் என்பதால், நிச்சயம் அவர் விசாரணைக்கு ஆஜார் ஆவார் என நினைக்கிறேன். ராஜேஷ் தாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி ஆகியோரின் கார் டிரைவர்களும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும்தான் முக்கிய சாட்சி. அவர்களிடம் கேட்டாலே உண்மை தெரியவரும். இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு விசாரணையின் போக்கை எப்படித் துரிதப்படுத்தப்போகிறார் எனத் தெரியவில்லை. அவர் தலையிட்டு, உரிய நீதி கிடைக்க ஆவணம் செய்வதுதான் சரியாக இருக்கும்.

நியாயமான முறையில் விசாரணை நடந்தால் இந்தப் பிரச்னையில் முன்னுதாரணமான தீர்வு கிடைக்கும். ஆனால், காலம் நிர்ணயம் செய்து, சரியான போக்கில் விசாரணை நடைபெற்று தீர்வு கிடைக்குமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. அதேசமயம், இந்த ஒரு சம்பவத்தை வைத்து, காவல்துறையிலுள்ள மற்ற ஆண் அதிகாரிகளின் குணத்தைத் தவறாக நினைக்கக் கூடாது. எல்லாத் துறையிலும் தவறான எண்ணம் உடைய சிலர் இருப்பார்கள். அதுபோல சில ஆண்கள் காவல்துறையிலும் இருக்கக்கூடும். அவர்களால் ஒருசில பெண் காவலர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கலாம். ஆனால், அப்படியான சம்பவங்கள் பெரிய அளவில் நடைபெறுவது இல்லை என்பதுதான் என் அனுபவ வாதம்.

காவலர்கள்
காவலர்கள்
பாலியல் குற்றச்சாட்டு: சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்  #NowAtVikatan

நான் ஏ.டி.ஜி.பி-யாக இருந்தபோது, விசாகா கமிட்டியின் தலைவராகவும் இருந்தேன். அப்போது ஓர் ஆண் ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகப் புகார் வந்தது. விசாரணை நடத்தி, குற்றத்தை உறுதி செய்தேன். அந்த ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தவிர, பெண் அதிகாரிகளை வளர விடாமல் தடுக்கும் சம்பவங்கள்தான் காவல்துறையில் அதிகம் நடக்கும். அதை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். மற்றபடி, ஆண் அதிகாரிகள் தவறாக நடந்துகொள்ள முயன்றாலும், எப்படிப்பட்ட பெண் காவலர்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவல்துறையிலும் நல்ல ஆண்கள் அதிகம் இருக்கின்றனர்" என்று அழுத்தமாக முடித்தார் திலகவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு