Published:Updated:

கோவிட் 19: களத்தில் பெண்கள்... அத்துமீறும் ஆண்கள்! ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?

கோவிட்-19 தொற்று
கோவிட்-19 தொற்று

இந்தப் பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில், இதுபோன்ற மோசமான அத்துமீறல்களை எதிர்கொள்வது மிகக் கடுமையான மனச் சோர்வுக்கு உள்ளாக்குகிறது என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தலைநகர் டில்லியில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உதவி கிடைக்காத ஆதரவற்றவர்களுக்கும் ஏராளமான இளம் பெண்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னார்வலர்களாகக் களத்தில் நின்று உதவிக் கொண்டிருக்கின்றனர். உதவி தேவைப்படுபவர்கள் தங்களைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் மொபைல் எண்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இதனால், மிக மோசமான தொந்தரவுக்கு அந்தப் பெண்கள் ஆளாகியிருக்கின்றனர்.

பெண்கள்
பெண்கள்

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தன்னார்வலர் பெண்களின் எண்களுக்குத் தகாத வார்த்தைகளில் குறுஞ்செய்தி அனுப்புவது, போன் செய்து ஆபாசமாகப் பேசுவது போன்ற மிக இழிவான செயல்களில் ஆண்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் வாட்ஸ்அப்-ல் தங்கள் முகப்புப் படத்தை நீக்குவது, சொந்தக் கணக்கை வணிகக் கணக்கான மாற்றுவது போன்ற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்; இப்பிரச்னையால் ஒவ்வொரு நாளும் இவர்கள் ‘ப்ளாக்’ செய்யும் அழைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்வதாகக் கூறுகின்றனர்.

இந்தப் பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில், இதுபோன்ற மோசமான அத்துமீறல்களை எதிர்கொள்வது மிகக் கடுமையான மனச் சோர்வுக்கு உள்ளாக்குகிறது என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தங்களுக்கு மட்டுமல்ல, உண்மையாகவே உதவி கேட்டு வரும் அழைப்புகளை ஏற்பதில் தயக்கமும், பதற்றமும் ஏற்படுகிறது என்கின்றனர்.

தன்னார்வல பெண்களுக்குத் தான் இந்த நிலை என்றால், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உதவி கேட்டு தங்கள் எண்களைப் பகிரும் பெண்களும் இந்த மோசமான நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
`பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் நகைச்சுவையா?' - கொதிக்கும் பெண்கள்

இக்கட்டான சூழல்களில் உடனடியாக உதவிகளைப் பெறவும், வழங்கவும் தொடர்பு எண்களைப் பெறுவது அவசியமாகிறது. ஆனால், இந்தக் காலகட்டத்திலும்கூட இப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் நபர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.

இதுபோன்ற அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பெண்கள், livingpositive@gmail.com என்ற மின்னஞ்சலில் புகாரளிக்கலாம் என்று பெண்களுக்கான டில்லி ஆணையம் (DCW) அறிவித்துள்ளது; cybervolunteer.mha.gov.in என்ற இணையதளத்திலும் இதுகுறித்து புகாரளிக்க முடியும்.

இதுபோன்ற புகார்களைப் பெற, பின்தொடர ட்விட்டரிலும் ஒரு கணக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: https://twitter.com/ReportAbusers

அடுத்த கட்டுரைக்கு