Published:Updated:

`கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண்!’ - துபாயைக் கலக்கும் சுஜா தங்கச்சன்

துபாயில் கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் வாங்கி அசத்தியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த சுஜா தங்கச்சன்.

சுஜா தங்கச்சன்
சுஜா தங்கச்சன்

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜா தங்கச்சன். 36 வயதான சுஜாவுக்குச் சிறுவயது முதலே கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. கேரள போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றிய இவரின் மாமாவைப் பார்த்துத்தான் இந்த ஆசை வந்துள்ளது. சாலையில் கடந்து செல்லும் கனரக வாகனங்களை சுஜாவின் கண்கள் பார்க்கத் தவறியதில்லை. ஒருநாள் நானும் இந்த வாகனங்களை இயக்குவேன் என தனக்குள் உறுதியெடுத்துக்கொண்டார். நாள்கள் நகரத் தொடங்கியது, அந்த ஏக்கம் மட்டும் தீர்ந்ததாகத் தெரியவில்லை.

சுஜா தங்கச்சன்
சுஜா தங்கச்சன்

குடும்பச்சூழல் சுஜாவை கேரளத்தை விட்டு வெளியேற்றியது. வேலை தேடி துபாய் சென்றார். தனக்குத் தெரிந்த சிலர் அங்கு செவிலியராக பணியாற்றியதால் துபாய் பயணமானார். அங்கு சென்றதும் கேரளத்தில் இனி தனக்கு எதிர்காலம் இல்லை. இங்கேயே தனக்கான வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுஜாவின் சகோதரரின் நண்பர் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரின் உதவியால் அதே பள்ளியில் பேருந்து கிளீனராக சேர்ந்தார்.

தனது கனவை நிறைவேற்றுவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்தார். தனது நீண்ட நாள் கனவு குறித்து சக பணியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார். துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. இதற்காகத் தனியாகப் பாடம் எடுப்பார்கள். தியரி மற்றும் பிராக்டிக்கல் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். உருது மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வகுப்புகள் இருக்கும். கட்டணமும் சற்று அதிகம்தான். ஓட்டுநர் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் பல ஆண்கள் லைசென்ஸ் பெறாமல் இருக்கிறார்கள். பிட்னஸ் டெஸ்ட், கண் பார்வைத் திறன் என மருத்துவ சோதனைகளும் இருக்கும்.

சுஜா தங்கச்சன்
சுஜா தங்கச்சன்

ஹெவி லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் இன்னும் சிரமம் தான். சின்ன தவறு செய்தாலும் உங்களை ஃபெயில் ஆக்கிவிடுவார்கள். மீண்டும் முதலிலிருந்து தான் தொடங்க வேண்டும். சுஜா ஒரு ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். செப்டம்பர் 30, 2019-ல் கனரக வாகனம் இயக்குவதற்கான உரிமம் வாங்கிவிட்டார். கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். அவர் பயிற்சி பெற்ற Al Ahli Driving Center தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளது. இதற்காக விழா நடத்தி அவரை கெளரவித்தனர்.

சுஜாவுக்கு இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. 6 முறை இந்தத் தேர்வில் பங்கேற்றுத் தோல்வியடைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் தோல்வியடையும்போது தான் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் கடுமையாக முயற்சி செய்துள்ளார். கடைசியாக இந்தத் தேர்வுக்குச் செல்லும்போது அவருக்கு உடல்நலம் சரியில்லை. இருந்தும் தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்று விட்டார்.

சுஜா தங்கச்சன்
சுஜா தங்கச்சன்

சுஜா அந்தப்பள்ளியில் பேருந்து ஓட்டுநராகிவிட்டார். தினமும் 4 ட்ரிப் அடிக்கிறார். இதற்காகக் கூடுதலாகச் சம்பளம் வழங்கவில்லை என்றாலும் தனது இலக்கை எட்டிய மகிழ்ச்சியில் சந்தோஷமாகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், பள்ளிகளிலிருந்து அழைப்பு வந்தபோதும் அதை வேண்டாம் என மறுத்துவிட்டார் சுஜா.