Published:Updated:

``பெத்தவங்க ஏத்துக்கிட்டதால சாதிக்கமுடியுது!" - இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர்

திருநங்கை செவிலியர் அன்புரூபி
திருநங்கை செவிலியர் அன்புரூபி

``வலிகள் நிறைஞ்ச வாழ்க்கை சார், என்னோடது...'' - செவிலியர் பணியாணையோடு சென்னையிலிருந்து ஊர்திரும்பிக்கொண்டிருந்த அன்புரூபியைத் தொடர்புகொண்டபோது அவர்சொன்ன முதல் வரி, இது.

அன்பு ரூபி... இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படும் முதல் திருநங்கை செவிலியர். தூத்துக்குடி சாயர்புரம் பேரூராட்சி போப் மெமரி உயர்நிலைப்பள்ளியில் பிள்ளைப் பருவம். நெல்லை காவல்கிணறு ராஜா'ஸ் நர்சிங் கல்லூரியில் இளங்கலைப் பட்டம். அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம். தூத்துக்குடி சக்ரடு ஹார்ட் மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுக்காலப் பணி. எழுதிய இரண்டு, மூன்று போட்டித்தேர்வுகளில் மருத்துவத்துறைத் தேர்வில் தேர்ச்சி. இப்படித்தான் இந்த நிலையை எட்டியிருக்கிறார், அன்புரூபி.

ரூபிக்கு இப்போது 25 வயது. அவர் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே, அவர் தந்தை பார்வை இழந்துவிட, தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பள்ளிப்பருவத்தில் தன்னை மாற்றுப்பாலினத்தவராக உணர்ந்து கொண்டுள்ளார். உடல்ரீதியிலான பாலியல் தொந்தரவுகள் தனக்கு நேர்ந்ததே இல்லை என்கிறார்.

நண்பர்களுடன் திருநங்கை அன்புரூபி
நண்பர்களுடன் திருநங்கை அன்புரூபி

``அப்பா, அம்மா என்னை ஏத்துக்கிட்டதால நான் அவங்களிடம் பாதுகாப்பா வளர்ந்தேன். வார்த்தை தாக்குதல், அவமானம் இப்படி நிறைய மனரீதியான வலிகளை எதிர்கொண்டிருக்கேன். உடல்ரீதியா எனக்கு வேற எந்தப் பிரச்னையும் நேர்ந்ததில்ல. அதனாலேயே என்னால் நிறைய சாதிக்க முடியுது. ஆனா, எல்லா திருநங்கைகளுக்கும் இந்த வரம் கிடைக்கிறதில்ல. புரிஞ்சுக்காம வீட்டைவிட்டு அனுப்பிடுறாங்க. அதனாலதான் அவங்க, பிச்சைக்காரங்களாவும், பாலியல் தொழிலாளியாகவும் ஆயிடுறாங்க" எனக் கலங்குகிறார்.

மருத்துவத்துறையை விரும்பிய காரணம் குறித்துக் கேட்டோம். ``என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். எனக்குள்ள ஏற்படுற மாற்றங்களை நான் முதல்ல புரிஞ்சிக்கிட்டு, எல்லோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்" என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

``அவமானங்கள்தான்  இன்ஸ்பிரேஷன்!’’ - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா

ஒரு திருநங்கையாக, பணியிடத்தில் தான் சந்திக்க வாய்ப்புள்ள அசௌகரியங்கள் பற்றிச் சொல்லும்போது, ``புரிந்துணர்வு இல்லாத மக்கள்கிட்டயிருந்து எதுவும் தொந்தரவுகள் வரலாம். அதையெல்லாம் பாசிட்டிவ் மனநிலையோடு எதிர்கொள்வேன். எடுத்துச்சொல்லி அவர்களுக்குப் புரியவைப்பேன். இது என்னோட பொறுப்பு. அத்தனையையும் தாண்டி என்னோட வெற்றியை நோக்கி நகர்வேன்" என்றார், உறுதியோடு.

பணியாணை பெற்றபோது
பணியாணை பெற்றபோது

கடந்த கால வலியையும் அதிலிருந்து தான் கற்றுக்கொண்ட பாடத்தையும், எதிர்கால லட்சியத்தையும் பகிர்ந்துகொண்டார். ``வார்த்தைகளால் நிறைய காயம்பட்டிருக்கேன். வறுமையில் இருக்கிற மக்களுக்குச் சேவை செய்யணும். செவிலியராக சேவையையும் தாக்கத்தையும் இந்தத் துறையில் ஏற்படுத்தணும் என்பதே என் எண்ணம். வாழ்வே வலி நிறைந்ததுதான். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுக்கு நிறைய முயற்சி எடுப்பேன்" என்றவர், அரசாங்கத்துக்குத் தனது கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார். "ரெண்டு வருஷத்துக்கு கன்சாலிடேஷனாதான் பணி கொடுத்திருக்காங்க. அதை இப்போவே நிரந்தரம் செய்தால் எனக்கு ரொம்ப உத்வேகமாக இருக்கும். முதல் திருநங்கை செவிலியருக்கான அன்பளிப்பாகூட இதை அரசு செய்யலாம்" என்றார் வேண்டுகோளாய்.

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு