Published:Updated:

``என் குழந்தைக்கு நான் இனி ரோல்மாடல்!"- தென்னிந்தியாவின் முதல் விமானப்படை தீயணைப்புத்துறை வீராங்கனை

``குடும்பத்தின் ஆதரவுதான் ஒரு பெண்ணுக்கான முதல் வெற்றியாக இருக்கும்.''

ரம்யா
ரம்யா

தென்னிந்தியாவின் விமான நிலையங்களில் உள்ள மீட்பு மற்றும் தீயணைப்புத்துறையில் முதல் பெண் வீராங்கனையாக, ரம்யா ஶ்ரீகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரம்யா. எம்.டெக் முடித்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக, தன்னுடைய பணியைத் தொடங்கியவர்.

திருமணம் முடிந்து குழந்தை பிறந்த நேரத்தில், அரசின் போட்டித்தேர்வுகளுக்குத் தன்னை தயார் படுத்திக்கொண்ருந்தார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன், தீயணைப்புத்துறையின் சார்பாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிபெற்ற ரம்யா, டெல்லியில் ஆறுமாத கால பயிற்சி முடித்து, தற்போது சென்னை விமான நிலையத்தின் முதல் தீயணைப்பு வீராங்கனையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படை
விமானப்படை

இது குறித்து ரம்யா பேசுகையில், ``பிரசவ காலத்துக்காக நான் பார்த்து வந்த பேராசிரியர் வேலையை விட்டுவிட்டேன். குழந்தை பிறந்த பிறகு, எல்லா பெண்களைப்போல எனக்கு சில மனஅழுத்தங்கள் இருந்தன. அதனால் சிறிய மாற்றம் தேவைப்பட்டது. ஒரு பெண் தாய்மை அடைந்தால் அவளின் கரியர் முடிந்துவிடும் என்பதுதான் நிறைய பெண்களின் நிலையாக இருக்கிறது.

வரலாற்றில் இது முதல்முறை..!- ஆணின் உதவியில்லாமல் விண்ணில் சாதித்த சிங்கப் பெண்கள் #NASA

ஆனால், நான் அந்த வட்டத்துக்குள் சுருங்க விரும்பவில்லை. என் குழந்தை பிறந்த பிறகுதான், நான் புதுப் பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். என் குழந்தைக்கு நான் அம்மா, என்பதைத்தாண்டி, ரோல் மாடலாகவும் இருக்கணுங்கிறது என் ஆசை. அந்த நேரத்தில்தான் இந்திய விமானப்படையின் தீயணைப்புத்துறையிலிருந்து போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டேன்; தேர்வை எழுதினேன்; அதில் வெற்றி பெற்ற பிறகுதான் அந்தத் துறையில் உள்ள சவால்கள் புரியத்தொடங்கியது.

தீயணைப்புத்துறை
தீயணைப்புத்துறை

பொதுவாக, பெண்கள் இதுபோன்ற ஆபத்து நிறைந்த துறையைத் தேர்வு செய்யும்போது, வீட்டில் இருப்பவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவிப்பார்கள். ஆனால், எனக்கு என் குடும்பமும், கணவரும் ஊக்கம் கொடுத்து, துணிந்து செயல்படு என வழியனுப்பிவைத்தார்கள். இதுபோன்ற குடும்பம் கிடைத்ததைப் பெருமையாக உணர்கிறேன். குடும்பத்தின் ஆதரவுதான் ஒரு பெண்ணுக்கான முதல் வெற்றியாக இருக்கும்" எனச்சொல்லும் ரம்யா, ``என்னுடைய புதிய பயணம் மூலம் நான் என் இரண்டு வயது குழந்தைக்கு ரோல் மாடலாக இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பயணத்தை ஒரு தாயின் வெற்றியாகப் பார்க்கிறேன்" என்றார்.