தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் அன்னபூரணிகள்!

சுந்தரி, குணசுந்தரி, ஜெயபாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
சுந்தரி, குணசுந்தரி, ஜெயபாரதி

இந்த சின்ன ஆஸ்பெஸ்டாஸ் வீட்டுலதான் நானும் கணவரும் இருக்கோம். திருமணமானப்போ, இது கூட எங்களுக்கு சொந்தமா இல்ல

“பசியோட கொடுமை அறிந்து வளர்ந்தவங்க நானும் என் கணவரும். அதனால, சாலையோரங்கள்லயும் பேருந்து நிறுத்தங்கள்லயும் அமர்ந்திருக்கும் ஆதரவற்றவங்களைப் பார்க்கும்போது, தினமும் சாப்பாட்டுக்கு இவங்க என்ன பண்ணுவாங்கனு மனசுல அலை அலையா கவலை ஓடும். இப்போ ரெண்டு வருஷமா, பெண் காவலர்கள் சுந்தரி, ஜெயபாரதியுடன் இணைந்து பசியோட இருக்கறவங்களுக்கு சாப்பாடு கொடுக்கும் சேவையை செஞ்சிட்டு வர்றோம். மனசுக்கு அவ்ளோ திருப்தியா இருக்கு’’ - நிறைவுடன் சொல்கிறார் இல்லத்தரசி குணசுந்தரி.

கரூர் மாவட்டம், சின்னம நாயக்கன்பட்டி பிரிவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் நகரைச் சேர்ந்தவர் குணசுந்தரி. இவரின் கணவர் பொன்னுசாமி லாரி டிரைவர். ‘வறுமையிலும் செம்மை’ என்பார்களே, அதுபோல்தான் தன் ஏழ்மைக்கு இடையிலும் மற்றவர்களின் பசிபோக்கி வருகிறார் குணசுந்தரி. கரூர் நகர காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணியாற்றும் சுந்தரி, ஆயுதப்படை பிரிவில் இரண்டாம்நிலை பெண் காவலராகப் பணியாற்றும் ஜெயபாரதி இருவரோடும் இணைந்து தான், இந்த அற்புதப் பணியைச் செய்து வருகிறார். குணசுந்தரியின் இல்லத்தில் அன்றைய மதிய சாப்பாட்டை தயார் செய்துகொண்டிருந்த இந்த அன்னபூரணிகளிடம் பேசினோம்.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் அன்னபூரணிகள்!

“எங்களோட ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டோம்’’ என்ற குணசுந்தரி, ``இந்த சின்ன ஆஸ்பெஸ்டாஸ் வீட்டுலதான் நானும் கணவரும் இருக்கோம். திருமணமானப்போ, இது கூட எங்களுக்கு சொந்தமா இல்ல. என் கணவரோட அப்பா, அம்மா அவரோட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. மத்த வீடுகள்ல மாடுகள் மேய்ச்சு, அவங்களை அண்டிதான் வளர்ந்தார். என் சொந்த ஊரு கொடைக்கானல். என் அம்மாவும் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே தவறிட்டாங்க. அப்பா மட்டும்தான். கூடப்பிறந்தவங்க நாலு பேர். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல்.

கஜேந்திரன்
கஜேந்திரன்

என் கணவரோட எனக்குத் திருமணம் ஆகி, ரெண்டு குழந்தைங்க பிறக்குறவரை சாப்பாட்டுக் கஷ்டம் எங்களை விட்டுப் போகலை. இருந்தாலும், எங்க கண்ணு முன்னாடி பசியோட இருக்கிறவங் களுக்கு உதவ நானும் என் கணவரும் என்னிக்குமே யோசிச்சதில்ல. வருஷத்துக்கு ஒரு தடவைனு ஏழு வருஷமா, தீபாவளி, எங்க பேரன் பிறந்தநாளுக்கு கரூர்ல உள்ள அநாதை ஆசிரமங்களுக்குப் போய் ரெண்டு கிடா வெட்டி கறிச்சோறு சமைச்சுப் போட்டோம். ஒருகட்டத்துல காசு கஷ்டத்தால அதைத் தொடர்ந்து செய்ய முடியாமப் போக, அது எங்க மனசை பாரமா அழுத்திட்டு இருந்தது’’ என்பவரின் கண்களில் சுந்தரியும் ஜெயபாரதியும் பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொன்னார் சுந்தரி.

‘`போன வருஷம் மார்ச் மாத லாக்டௌன் அப்போ, நான், ஜெயபாரதி மற்றும் காவலர் கஜேந்திரன் மூணு பேரும் கரூர் சாலையோரங்கள்ல இருந்த ஆதரவற்றவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருந்தோம். எங்களைப் பார்த்துட்டு நேரா எங்ககிட்டு வந்து பேசின குணசுந்தரி அக்கா, ‘நானும் இந்த அரும்பணியில இணைஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. ‘தாராளமா...’னு சொன்னோம். அதுவரை நாங்க தினமும் 150 பேருக்கு ஹோட்டல்ல பார்சல் சாப்பாடுகள் வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தோம். ‘என்னால தினமும் சாப்பாடு கொடுக்க முடியாது. ஞாயித்துக்கிழமை மட்டும் எங்க செலவுல, எங்க வீட்டுலயே சமைச்சுத் தர்றேன், நீங்க அதை எடுத்துட்டு வந்து இவங்களுக்கு எல்லாம் கொடுக்க முடியுமா’னு தயக்கத்தோட கேட்டாங்க. மத்தவங்களோட பசியாற்ற நினைச்ச அவங்களோட மனசும் தவிப்பும் எங்களை நெகிழ்த்துச்சு’’ என்றார் சுந்தரி.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் அன்னபூரணிகள்!

‘`கணவர் கொண்டு வரும் சொற்ப வருமானத்துல செலவுகளை இறுக்கி மிச்சம் பிடிச்சு, சமையலுக்கு அரிசி, மளிகை சாமான் வாங்க ஆரம்பிச்சேன்’’ என்ற குணசுந்தரி, ‘`சமையல் பாத்திரங்களை வாடகைக்கு எடுத்தது கட்டுப்படியாகல. அதனால, அப்படி இப்படினு 10,000 ரூபாய் ரெடி பண்ணி, அண்டா மூன்று, மூடிகள், அடிக்கரண்டி இரண்டு, கரண்டிகள்னு தேவையான பாத்திரங்களை வாங்கினேன். சமையலுக்காகத் தனியா ஒரு சிலிண்டர் கனெக்‌ஷனை வாங்கினோம். நானும் என் கணவரும் சேர்ந்து 100 - 150 பார்சல்கள் வரை சமைப்போம். அதை கஜேந்திரன் சார் வந்து எடுத்துட்டுப் போய், சுந்தரி, ஜெயபாரதி மூலமா ஆதரவற்றவர்களுக்குக் கொடுப்பாங்க. லீவு நாள்கள்ல சில நேரம், அவங்களும் என்னோட சமையல் வேலையில ஒத்தாசையா இருப்பாங்க’’ என்றார்.

ஜெயபாரதி பேசும்போது, ‘`ஒவ்வொரு பார்சல்லயும் ரெண்டு சாப்பாடு அளவு உணவை வைத்துக் கட்டிக் கொடுப்பாங்க குணசுந்தரி அக்கா. ஆதரவற்றங்களுக்கு மதியம், இரவுனு ரெண்டு வேளைக்கும் அது உதவும் என்பதற்காக அந்த ஏற்பாடு. குணசுந்தரி அக்காகிட்ட காசில்லாத போது நான், சுந்தரி, கஜேந்திரன் மூணு பேரும் ஸ்பான்ஸர் புடிச்சு, மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுப்போம். தக்காளி சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்னு வாரம் ஒரு சாதம் செய்து தருவாங்க. ஆடி 18, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விசேஷ தினங்கள்ல சிக்கன் பிரியாணி சமைச்சுக் கொடுப்பாங்க.

நாங்க மூணு பேரும் அரசு வேலையில இருக்கோம், சம்பாதிக் கிறோம், எங்க தேவைகள் நிறை வேறின பிறகுதான் சேவை பத்தி யோசிக்கிறோம். ஆனா, இந்த ஆஸ்பெஸ்டாஸ் வீட்டுல இல்லத்தரசியா இருக்கும் குணசுந்தரி அக்கா, ‘நாலு பேருக்கு உதவுறது எவ்வளவு நிறைவா இருக்கு...’னு சொல்லும்போது, அவங்க மேல பெரிய மரியாதை வரும்’’ என்றார் நெக்குருகி. அவர்களை விட்டுக் கொடுக்காத குணசுந்தரி, ‘`காக்கிச் சட்டை போட்ட இவங்களோட மனசு எவ்வளவு இளகினது உணர்ந்து நான் நெகிழ்ந்திருக்கேன். கஜேந்திரன் சார், சுந்தரி, ஜெயபாரதி இவங்க மூணு பேரும் சேர்ந்து 2019-ம் வருஷ இறுதியில இருந்தே தினமும் 100 பேருக்கு குறையாம சாப்பாடு கொடுத்துக்கிட்டு இருக்காங்க’’ என்றார்.

ஆதரவற்றவர்களின் பசியாற்றும் அன்னபூரணிகள்!

அதைப் பற்றி சுந்தரி சொல்லும் போது, ‘` ‘உதவும் கரம்’ என்ற அமைப்பை நாங்க தொடங்கினோம். அதுல எங்க கூட, மனிதாபிமான முள்ள பிற காவலர்கள், டெல்லி பட்டாலியனில் உள்ள காவலர்கள்னு 75 பேர் கைகோத்தாங்க. அதோடு, வசதி படைத்தவர்கள் 10 பேர், பொதுமக்கள் 10 பேர்னு சேர்ந்தாங்க. அவங்க பண உதவி மட்டும் செய்வாங்க. அதைக் கொண்டு ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி, மதிய வேளையில 150 பேருக்குக் கொடுத்துட்டு இருந்தோம்.

குணசுந்தரி அக்கா இணைஞ்சதுக்கு அப்புறம், மணக்க மணக்க வீட்டுச் சாப்பாடும் கொடுக்க ஆரம்பிச்சோம். எங்களுக்கு வேலை இருக்கும்போது, கஜேந்திரன், சில போலீஸ்காரர்கள் துணையோடு உணவை வழங்குவார். அவருக்கு வேலை இருக்கிறப்போ நாங்க செய்வோம். கஜா புயலால் பாதிக்கப்பட்டவங்களுக்கு தனிப் பட்ட வகையில நான் உதவினேன். கொரோனா லாக்டௌன் அறிவிச் சப்போ 30 குடும்பங்களுக்கு என் செலவுல அரிசி வழங்கினேன். என் சொந்தச் செலவுல ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அஞ்சு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறேன்’’ என்றார்

‘` ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்துடு வோம்’னு பாரதி பாடினார். நாங்க சாதாரண மனுஷங்கதான். ஆனாலும், எங்களால முடிஞ்சவரை ஆதரவற்றவங்களுக்கு பசிபோக்கும் அட்சய பாத்திரமா இருப்போம்’’ என்றார்கள் மூவரும் இணைந்து.

நல்ல மனங்கள் வாழ்க!