விருதுநகரைச் சேர்ந்த இளம் பெண்னை, ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாகச் சொல்லி தனிமையில் இருந்தபோது வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டியே ஹரிஹரன் மற்றும் அவர் நண்பர்கள் அந்தப் பெண்ணை கடந்த ஆறு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்துவந்துள்ளனர். இறுதியில் அவர் புகார் அளிக்க, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆபாச மற்றும் மார்ஃபிங் வீடியோக்கள் மிரட்டல்களை பெண்கள் எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு? கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி, அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்த வற்றில் சிறந்தவை இங்கே...
பார்த்தசாரதி: சகோதரி, நெருங்கிய தோழி, நண்பர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள், அவர்களை மேலும் காயப்படுத்தாமல் தைரியமும், தெளிவான அறிவுரையும் வழங்க வேண்டும். தெளிவான அறிவுரை என்பது, தயங்காமல் காவல், சட்ட உதவிகளை அவரை பெற வைப்பதே.
Tamil Mullai: சைபர் குற்றங்கள் மலிந்து கிடக்கும் இன்றைய உலகில், பெற்றவர்கள் பிள்ளைகளிடம், என்ன பிரச்னை என்றாலும் தங்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். பையனோ, பெண்ணோ... தவறுகள் நடந்தால் பிள்ளை களைக் குற்றவாளியாக்கி விசாரிக்காமல், தீர்வையே சிந்திக்க வேண்டும்.
Rahmath Nisha: யார் பொறுப்பு? கலாசார காவலர்களாக இல்லாமல் இருக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. கயவர்களை காதலர்கள் என்று நம்பாமல் இருக்க வேண்டியது பெண்களின் பொறுப்பு. ஆண் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியது குடும்பங்களின் பொறுப்பு. சைபர் குற்றங்களைக் களைய வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. கடுமை யான சட்ட தண்டனைகள் வழங்க வேண்டியது நீதி அரசர்களின் பொறுப்பு. மேற்குறிப்பிட்ட அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட்டாலும், செயல்படாமல் போனாலும்... பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஆதரவும் தைரிய மும் தர வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு.

Saraswathy Padmanaban: பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த செய்திகளைக் கடக்க நேரும்போது, வீட்டில் பெற்றோர்கள், அதுபற்றி மகள்களிடம் இயல்பாகக் கலந் துரையாட வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணைக் குற்ற வாளியாக்கிப் பேசாமல், அவர் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் காவல் துறையை நாடியிருக்க வேண்டும் என்றும் சொல்லும்போது, எதிர் காலத்தில் நம் பிள்ளைகளும் அதைப் பின்பற்றுவார்கள்.
Srividhya Prasath: ‘மானம் போயிடும்’ என்று மருகாமல், தன் மகளுக்குப் பாலியல் குற்றம் செய்த மிருகத்தை, காவல்துறை, சட்டம் மூலம் தண்டிக்கப் பெற்றோர் தைரியமாக முன் வர வேண்டும். அது மற்ற பிள்ளைகளுக்கும், பெற்றொருக்கும் கொடுக்கக்கூடிய தைரியம் பெரிது.
Janaki Paranthaman: பாலியல் குற்றங்கள் குறித்துப் பெண்கள் காவல்துறையில் புகார் அளிக்கும் தைரியமும், விழிப்புணர்வும் தொடர்ந்து ஊட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். விருதுநகர்ப் பெண் இறுதியில் காவல்துறையிடம் சென்றது, அப்படி ஏதோ ஒரு புள்ளியில் அவருக்குக் கிடைத்த தைரியத்தால்தான். மேலும், பள்ளி, கல்லூரிகளில், சைபர் மிரட்டலுக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும், எப்படி வெளிவர வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.