Published:Updated:

செப்டிக் டேங்கில் விழுந்து இறந்த மாற்றுத்திறனாளி பெண்... அதிகாரி சொல்லும் `அதிர்ச்சி' பதில்!

செப்டிக் டேங்க்
செப்டிக் டேங்க்

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாக வேண்டும். வீட்டுக்கு வீடு கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், அரசாங்க அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாத அவலத்தால் காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் ஒருவர் பலியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. "கிராமப்புற மக்களுக்கு மானியம் வழங்கி கழிப்பறை கட்டச் சொல்லும் அரசு தன் அலுவலங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தாததால் ஓர் அப்பாவி பெண்ணின் உயிர் பலியாகிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?" என்று பலரும் ஆவேசத்தில் வெடிக்கிறார்கள்.

சரண்யா
சரண்யா

கடந்த 5-ம்தேதி அருகில் உள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார் சரண்யா. அந்தக் கழிவறையின் செப்டிக் டேங்க் மீது டைல்ஸ் ஓட்டை வைத்து மூடி வைத்திருந்துள்ளனர். கடந்த சில தினங்களாகத் தொடர் மழை பொழிந்து ஓட்டின்மீது மழைநீர் தேங்கியிருந்ததால் அது சரண்யாவுக்குத் தெரியவில்லை. அந்த ஓட்டின்மீது சரண்யா கால் வைக்க அந்த டைல்ஸ் ஓடு உடைந்தது. சுதாரிப்பதற்குள் செப்டிக் டேங்குக்குள் விழுந்துவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. வெகுநேரம் ஆகியும் சரண்யா அலுவலகம் திரும்பாததால், ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர் செப்டிக் டேங்குக்குள் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சரண்யாவின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த மரணத்துக்குக் காரணம் களக்காட்டூர் வேளாண் விரிவாக்க மையத்தில் கழிவறை இல்லாததுதான் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோல்டியிடம் பேசினோம், "இதை சப் டிப்போ என்று சொல்வோம். தமிழ்நாடு முழுக்க உள்ள சப்-டிப்போவில் பழைய கட்டடங்கள் எதிலும் கழிவறை கிடையாது. இப்போது புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் கட்டடங்களில்தான் கழிவறை கட்டிக்கொண்டு வருகிறார்கள். இது விதைகளுக்கான குடோன். இத்தனை நாள்களாக ஆண் ஊழியர்கள் இருந்ததால் கழிவறை இல்லாமல் இருந்தது பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. கடந்த சில வருடங்களில்தான் பெண் ஊழியர்கள் அதிகமாக வருகிறார்கள். நாங்களெல்லாம்கூட இப்படியான சூழலில் கஷ்டப்பட்டுத்தான் வந்தோம். இப்படி ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது'' என்றவரிடம்,

கழிவறை
கழிவறை

"நாங்களெல்லாம்கூட அப்படியான கஷ்டத்திலிருந்துதான் வந்தோம் என்கிறீர்கள்... அப்படியென்றால் அரசாங்கம் இதுபோன்ற அலுவலகங்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர மறுக்கிறதா?" எனக் கேட்டதற்கு, "அரசு செய்து தராது என்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது அலுவலகமே கிடையாது. விதைகளை விவசாயிகளுக்குக் கொடுப்பதற்கான விதை மையம். அதற்கு இரண்டு ஊழியர்கள் இருப்பார்கள். அவ்வளவுதான். இவ்வளவு நாளா ஆண்கள் இருந்ததால் கழிப்பறையின் முக்கியத்துவம் தெரியவில்லை. இப்போது படிப்படியாகக் கழிவறை கட்டிவருகிறார்கள். நாங்களும் சில புரொபோசல் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு