Published:Updated:

`பத்து ஊழியர்களில் ஒரு பெண் இருந்தாலும் புகார்க்குழு அவசியம்!' - வழிகாட்டும் குமரி சமூகநலத்துறை

புகார்பெட்டிகளை பார்வையிடும் சமூகநலத்துறை அலுவலர் சரோஜினி

``யார் புகார் அளிக்கிறார் என்பது தெரியாமல் இருக்க புகார் பெட்டியை கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் குமரி மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சரோஜினி.

`பத்து ஊழியர்களில் ஒரு பெண் இருந்தாலும் புகார்க்குழு அவசியம்!' - வழிகாட்டும் குமரி சமூகநலத்துறை

``யார் புகார் அளிக்கிறார் என்பது தெரியாமல் இருக்க புகார் பெட்டியை கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் குமரி மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சரோஜினி.

Published:Updated:
புகார்பெட்டிகளை பார்வையிடும் சமூகநலத்துறை அலுவலர் சரோஜினி

தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டம் 2013-ன் படி, 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிரியும் இடங்களில் கண்டிப்பாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி மேற்பார்வையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும், பணியிடங்களிலும் உள்ளக புகார் குழு அமைக்கும் நடவடிக்கை வேகம்பெற்று வருகிறது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்களிலும் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு பூட்டுகள் கொண்ட புகார் பெட்டிகள்
இரண்டு பூட்டுகள் கொண்ட புகார் பெட்டிகள்

உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு அதன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் வைக்கப்படவேண்டிய புகார் பெட்டிகளின் மாதிரிகள் நாகர்கோவிலில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. புகார் மனுக்கள் வெளியே தெரியும்படி கண்ணாடி கூண்டு வடிவில் புகார் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு பூட்டுகள் அமைக்கப்படுள்ளன. இந்தப் பெட்டிகளை கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சரோஜினி பர்வையிட்டார்.

பின்னர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி கூறுகையில்,``பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் இடங்களில், ஒரே ஒரு பெண் வேலை செய்தாலும் அங்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கலெக்டர் உத்தரவின் பேரில் அனைத்து அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பணியிடங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. குழு உறுப்பினர்கள் 5 பேரில் 3 பேர் பெண்ணாக இருக்க வேண்டும். குழுத் தலைவராக பெண்தான் இருக்க வேண்டும்.

குழு தலைவி மற்றும் இரண்டு உறுப்பினர்கள் பணியிடத்தில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு பேரில் ஒருவர் என்.ஜி.ஓ-வை சேர்ந்த நபராகவும், ஒருவர் சட்டம் பற்றி தெரிந்த நபராகவும் இருக்க வேண்டும். பத்து ஊழியர்களில் ஒரு பெண் ஊழியர் மட்டுமே இருந்தால் அவர் தலைவராக இருக்க வேண்டும். வெளியில் இருந்து நியமிக்கும் இரண்டு பேரும் பெண்களாக இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குழுவில் உறுப்பினர்களை மாற்றி அமைக்க வேண்டும். ஏதாவது உறுப்பினரின் செயல்பாட்டில் சந்தேகம் இருந்தால் அவர்களை எப்போது வேண்டுமானாலும் குழுவில் இருந்து மாற்றலாம்.

பணியாற்றும் பெண்கள், பணியிடத்தில் உள்ள பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக புகாராக எழுதி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியில் போடலாம். இரண்டு பூட்டுகளை கொண்ட அந்த புகார் பெட்டிக்கு 2 சாவிகள் இருக்கும். ஒரு சாவி சம்பந்தப்பட்ட தலைமை குழு உறுப்பினரிடமும், மற்றொரு சாவி என்.ஜி.ஓ. அமைப்பை சார்ந்த உறுப்பினரிடமும் இருக்க வேண்டும். யார் புகார் அளிக்கிறார் என்பது தெரியாமல் இருக்க புகார் பெட்டியை கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம்.

குமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி
குமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி

பெட்டிக்கு உள்ளே புகார் மனு இருக்கிறது என்பது வெளியே தெரியும் வகையில் கண்ணாடி அமைப்பு கொண்டதாக இருக்கும். இதில் உள்ள புகார் மனுக்களை விசாரித்து பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு இந்த குழு துணை புரிய வேண்டும். வாரம் ஒருநாள் திங்கள்கிழமை மனுநீதி நாளில், எந்தெந்த அலுவலகங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். புகார் குழு அமைக்கப்பட்ட அலுவலங்களில் இருந்து மாதம் ஒருமுறை மாதந்தர அறிக்கை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிப்பாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிகளில் தற்போது விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். பத்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட பணியிடங்கள் அல்லது அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நேரடியாக சமூக நலத்துறை அலுவலத்தில் புகார் அளிக்கலாம்" என்றார்.