Election bannerElection banner
Published:Updated:

"இந்த ஆறு என்னை ஏற்றுக்கொள்ளட்டும்!" - சபர்மதி ஆற்றில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த இளம்பெண்
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த இளம்பெண் ( Representational image )

சபர்மதி ஆற்றில் அவர் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு இரண்டு நிமிட வீடியோவில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

"இந்த அழகான ஆறு என்னை ஏற்றுக்கொள்ளட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" - வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்வதற்கு முன்பு 23 வயதேயான ஆயிஷாவின் கடைசி வார்த்தைகள் இவை. பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு உலகமே தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் தான் இந்த துயர சம்பவமும் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டே எம்.ஏ. பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தார்.

2018-ம் ஆண்டு அவரை ஆரிஃப் கான் என்பவருக்கு பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்து கொடுத்தனர். தனியார் சுரங்கத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றும் ஆரிஃப், திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கேட்டு உடலளவிலும் மனதளவிலும் ஆயிஷாவை துன்புறுத்தியிருக்கிறார். இதனால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தச் சூழலில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Suicide Prevention (Representational Image)
Suicide Prevention (Representational Image)
Image by Daniel Reche from Pixabay

ஆயிஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக 72 நிமிடங்கள் கணவருடன் செல்போனில் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு தன் பெற்றோரிடம் 5 நிமிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது ஆயிஷா பேசியதை வைத்து அவர் தற்கொலை செய்து கொள்வாரோ என்ற பயம் பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுபோல் ஏதுவும் தவறான முடிவெடுத்துவிட வேண்டாம் என்று மகளிடம் பெற்றோர் கெஞ்சியிருக்கின்றனர்.

மகளிடம் பேசிய உடன் காவல்துறையின் 100 என்ற எண்ணுக்கு அழைத்து தன் மகள் ஆற்றில் விழுந்து இறக்க வாய்ப்புள்ளது. அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. பெற்றோர் யூகித்தது போலவே மகள் உயிரைவிட்டுவிட்டார்.

சபர்மதி ஆற்றில் அவர் குதித்து தற்கொலை செய்வதற்கு முன்பு இரண்டு நிமிட வீடியோவில் உருக்கமாகப் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் தன்னை ஆயிஷா ஆரிஃப் கான் என்று சிரித்த முகத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தொடர்ந்து பேசும் அவர், "நான் இப்போது செய்யப்போகும் செயல் முழுக்க முழுக்க என்னுடைய சொந்த முடிவு. யாருடைய அழுத்தத்தின் காரணமாகவும் நான் இந்த முடிவுக்கு வரவில்லை.

நான் ஆரிஃபை நேசிக்கிறேன். பிறகு ஏன் அவரைக் கஷ்டப்படுத்த வேண்டும்?
ஆயிஷா
depression
depression

வேறு எதுவும் இப்போது சொல்வதற்கு இல்லை. கடவுள் எனக்கு குறைந்த ஆயுளைக் கொடுத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்" என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து, "அப்பா! இன்னும் எத்தனை நாள்களுக்குப் போராடுவீர்கள்? ஆரிஃப் மீது தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுவிடுங்கள். ஆயிஷா பிரச்னைகளுக்காக உருவாக்கப்பட்டவள். நான் ஆரிஃபை நேசிக்கிறேன். பிறகு ஏன் அவரைக் கஷ்டப்படுத்த வேண்டும்? அவருக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால், அவரை அப்படியே வாழவிட்டுவிடுவோம்.

என்னுடைய வாழ்க்கை இங்கே முடியப்போகிறது. நான் அல்லாவை சந்திக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எங்கு தவறு செய்தேன், என் மேல் என்ன குற்றம் இருக்கிறது என்று அல்லாவிடம் கேட்பேன்" எனப் பேசும் ஆயிஷா இறுதியாக,

"இந்த அழகிய ஆறு என்னை ஏற்றுக்கொள்ளட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். நான் காற்றைப் போன்றவள். நான் மிதக்க வேண்டும், மிதந்துகொண்டே இருக்க வேண்டும்" என்று கூறுவதைப் போல் முடிகிறது அந்த வீடியோ.

ஐஸ்க்ரீமில் எலிமருந்து; தாயின் தற்கொலை முயற்சியில் மகனும், சகோதரியும் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஆயிஷா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரின் கணவர் ஆரிஃப் கான் தலைமறைவாகிவிட்டார். அவரது வீட்டில் தேடிய போலீஸார் தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு அவர் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் இருப்பதாகக் கண்டறிந்து அவரை கைது செய்திருக்கின்றனர். இன்று அவர் அகமதாபாத்துக்குக் கொண்டு வரப்பட்டு ரிமாண்டில் வைக்கப்படுவார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்,

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

பெண்கள் தினம் கொண்டாடுவது மட்டும் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகாது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு